அவுஸ்திரேலியாவில் மோசடியாளரிடம் சிக்கிய பெண் : காப்பாற்றிய இலங்கையர்

0
18
Article Top Ad

அவுஸ்திரேலியா தேசிய வங்கியின் (National Australia Bank) மெல்போர்ன் கிளையில் பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மோசடியில் சிக்கிய பெண் ஒருவரை காப்பாற்றியுள்ளார்.

இதன் மூலம் அந்தப் பெண்ணின் ஆயிரக்கணக்கான டொலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த பெண், தனது காதலன் என்று கூறிய வெளிநாட்டு நபருக்கு பணத்தை மாற்றுவதற்காக அவுஸ்திரேலிய தேசிய வங்கிக்குள் சென்றுள்ளார்.

60 வயதான அந்தப் பெண்ணுக்கு பணத்தை அனுப்ப உதவி தேவைப்பட்டது. இதன்போது வங்கியின் வாடிக்கையாளராக பணியாற்றும் இலங்கையைச் சேர்ந்த திலான் பத்திரன உதவிக்கு வந்துள்ளார்.

இதன்போது பணம் பெறுநரின் பெயர் தெரியாது என குறித்த பெண் கூறிய போது திலான் பத்திரனவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது தனக்கு வந்த குறுஞ்செய்தியை சோதனை செய்து பெயரைக் கண்டுப்பிடித்த பெண், அதனை திலானிடம் கூறியுள்ளார்.

அந்த குறுஞ்செய்திகள் பணம் அனுப்புவதற்கு வற்புறுத்தும் வகையில் இருந்துள்ளது. எனினும், அந்த பெண் தனது “காதலனுக்கு” மருத்துவ சிகிச்சைக்காக பணத்தை அனுப்ப வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்.

“சமூக ஊடகங்களில் தான் சந்தித்த தனது காதலன், துருக்கியில் வசிப்பதாகவும், சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்ல வேண்டும் என்றும் பெண் என்னிடம் கூறினார்.

ஆனால், அந்த நபரின் கணக்கு முடக்கப்பட்டதால் பெண்ணிடம் இருந்து நிதியைப் பெற முடியவில்லை” என்று திலான் பத்திரன கூறியுள்ளார்.

குறித்தப் பெண் யாருக்கு பணம் அனுப்புகின்றார் என்பது தெரியாததற்கு காரணம், தன் காதலன் என கூறும் நபரை ஒருமுறையேனும் சந்தித்திருக்கவில்லை.

“இதுவொரு மோசடி என எனக்கு தெளிவாகத் தெரிந்தாலும், அந்தப் பெண் குறித்த பெண் மீதான காதலால் கண்மூடித்தனமாக இருந்தார்” என திலான் குறிப்பிட்டுள்ளார்.

“இதனையடுத்து குறித்தப் பெண் ஒரு தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு நிலைமையை புரிய வைத்துள்ளனர். குறித்தப் பெண் ஏமாற்றப்படுவதை தெளிவுப்படுத்தினர்.

இதனை உணர்ந்துகொண்ட அந்தப் பெண் நன்றி தெரிவித்திருந்ததுடன், குறித்தப் பெண்ணின் பணம் மோசடி செய்யப்படாமல் காப்பாற்றப்பட்டதாக” அவுஸ்திரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை, காதல் மோசடிகள் பற்றி அவுஸ்திரேலிய தேசிய வங்கியின் வாடிக்கையாளர் அறிக்கைகள் கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 30 சதவீதம் உயர்ந்துள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு காதல் மற்றும் நட்பு மோசடிகளால் அவுஸ்திரேலியர்கள் 33 மில்லியன் டொலர்களை இழந்துள்ளதாக ஸ்கேம்வாட்ச் மதிப்பிட்டுள்ளது.