யாழ். பலாலி விமான நிலையம் தனியார் துறையிடம்

0
13
Article Top Ad

முப்பது வருட போருக்குப் பின்னரான சூழலில் இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்கு பிரதேசங்களின் சில பகுதிகளை அபிவிருத்தி என்ற பெயரில் வெளிநாட்டு நிறுவனங்களுக் குத்தைகக்கு கொடுக்கும் நடமுறைகளை இலங்கை ஒற்றை ஆட்சி அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.

குறிப்பாக துறைமுகங்கள், விமான நிலையங்கள் குத்தகைக்கு விடப்படுகின்றன. இந்த அடிப்படையில் யாழ்ப்பாணம் பலாலி சா்வதேச விமான நிலையமும் குத்தைகக்கு விடப்படவுள்ளது.

திருகோணமலைத் துறைமுகத்தில் படைத்தளம் ஒன்றை அமைக்க அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட வல்லரசுகள் கடும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் யாழ். பலாலி விமான நிலையத்தை தனியார் நிறுவனங்களுக்குக் குத்தைக்குக் கொடுப்பது தொடா்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்தளை விமான நிலையம்

மத்தளை விமான நிலையத்தின் செயற்பாடுகளையும் இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான யோசனை, நிதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

யாழ் . விமான நிலையத்தை தனியாா் நிறுவனங்களுக்குக் குத்தைகைக்கு வழங்குவது தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளரிடம் ஒருவன் செய்திச் சேவை கேட்டபோது அதனை உறுதிப்படுத்திய செயலாளா் மேலதிகத் தகவல் எதனையும் வழங்கவில்லை.

உள்நாட்டில் உள்ள தனியாா் நிறுவனங்களுக்காக அல்லது வெளிநாட்டு தனியாா் நிறுவனங்களுக்காக என்ற விபரங்களைக்கூட செயலாளரிடம் கேட்டு அறியமுடியவில்லை. தனியாா் நிறுவனங்களுக்கு என்று மாத்திரமே சில ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு

இலங்கைத்தீவுக்கு அந்நியச் செலாவணியை ஊக்குவிக்கும் நோக்குடன் உள்நாட்டு வெளிநாட்டு தனியார் துறையினர் மற்றும் முதலீட்டாளர்களின் வலிமைகளைப் பெறும் நோக்கில் செயற்படுவதாக இலங்கை அரசாங்கம் விளக்கமளித்து வருகின்றது.

ஆனாலும் அரச வளங்களை வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்குவது தொடா்பாக எதிா்க்கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் எதிா்ப்பு வெளியிட்டு வரும் சூழலில் தற்போது யாழ். விமான நிலையம் தொடா்பாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளளன.

அரச உடமைகளைப் மரபுவழி முறையில் பாதுகாத்துக் கொண்டு இலங்கைத்தீவின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தாா்.

45 பில்லியன் நஷ்டம்

அத்துடன் கட்டுநாயக்க சா்வதேச விமான நிலையம் கடந்த 2022ஆம் ஆண்டில் சுமாா் 45 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டிருந்ததாக நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய கொள்கை விளக்க உரையில் குறிப்பிட்டிருந்தாா். இப் பின்னணியில் கட்டுநாயக்க சா்வதேச விமான நிலையத்தை தனியாா்மயப்படுத்தும் யோசனைகளுகளும் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

அரச வளங்களை தனியார் நிறுவனங்களுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் வழங்கப்படுவதை கடுமையாக எதிா்த்து வந்த ஜே.வி.பியின் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி, மிகச் சமீபகாலமாக இந்த விடயங்கள் தொடா்பாக அமைதிகாத்து வருகின்றது.

இதேவேளை, யாழ். சா்வதேச விமான நிலையத்தை தனியாா் நிறுவனங்களுக்கு வழங்கும் யோசனைகளை தமிழ்த்தேசியக் கட்சிகள் இதுவரை எதிர்க்கவில்லை. விரும்பிய தனியாா் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுமென அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனாலும் சம்மந்தப்பட்ட அமைச்சின் அதிகாரிகள் ஊடகங்களிடம் ஒப்புக்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்

இது யாழ். மாவட்டத்தில் பலாலி என்னும் இடத்தில் காணப்படக்கூடிய சா்வதேச விமான நிலையம் ஆகும்.

ஒரு காலத்தில் பொது மக்களை மிகவும் பயமுறுத்திய மூன்றெழுத்து ஊர் தான் பலாலி.

இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானிய வான் படை இலங்கையின் காங்கேசன்துறைக்கு அருகில் பலாலியில் வான்வெளிக்களம் ஒன்றை அமைத்தது.

பிரித்தானியரால் கைவிடப்பட்டதை அடுத்து, இலங்கையின் குடிமை வான்போக்குவரத்துத் திணைக்களம் இதனைக் கையேற்றிருந்தது. வடக்குக் கிழக்கில் ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தபோது யாழ். பலாலி விமான நிலையம் இலங்கைப் படைகளின் முக்கிய தளமாகச் செயற்பட்டிருந்தது.

முப்பது வருட போருக்கு முன்னர் சா்வதேச விமான நிலையமாக விளங்கிய இந்த விமான நிலையம் முப்பது வருட போரின் பின்னர் அதாவது 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் 2019 இல் மீண்டும் சா்வதேச விமான நிலையமாகத் தரமுயர்த்தப்பட்டிருந்தது.

ஈழப்போரின் போது தாக்குதலுக்கான இராணுவ விமானங்கள் இங்கிருந்து இயக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.