ஒருவரை நாடு கடத்தும் போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளே பின்பற்றப்பட்டன – சட்டத்தரணி புகழேந்தி

0
18
Article Top Ad

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 33 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டவர்கள் இலங்கைக்கு கடும் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாட்டுடனேயே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தமிழக சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

”ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 33 வருடங்களின் பின்னர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் நால்வரும், திருச்சி சிறப்பு முகாமில் சுமார் ஒன்றரை வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் சாந்தன், நாடு திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தார். ஏனைய மூவரும் இலங்கைக்கு வருவது தமக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி தாம் வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோரி வந்திருந்தனர். அதற்கு இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கைத் துணைத் தூதரகமும் அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டை வழங்க மறுத்தது.

இந்நிலையில், கடந்த மாதம் சாந்தன் உயிரிழந்தமையால் சிறப்பு முகாமிலிருந்த ஏனைய மூவரின் மனநிலை பாதிக்கப்பட்டது.

அதனால், அவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது. சிறப்பு முகாமில் தொடர்ந்து இருந்தால் நாமும் உயிரிழந்து விடுவோம் என்ற பயம் அவர்களிடம் ஏற்பட்டமையால் இலங்கை திரும்ப சம்மதித்தனர்.

இலங்கை திரும்ப யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு வருவதற்கான வானூர்தி பயணச்சீட்டு எடுக்க முயன்ற வேளை சிறிலங்கன் எயார்லைன்ஸ் வானூர் மூலமே பயணிக்க முடியும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. குறித்த விமானம் சென்னையிலிருந்து கொழும்புக்கே இருந்தமையால் அதில் பயணிக்க வேண்டி ஏற்பட்டது.

அதேபோன்று, சென்னை வானூர்தி நிலையம் வரையில் மூவருக்கும் பாதுகாப்பு வழங்கும் முகமாக அதிகாரிகள் செயற்பட்டனர். அனைத்துப் பயணிகளும் விமானத்திலிருந்து இறங்கிய பின்னரே இறங்க வேண்டும் போன்ற சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

ஒருவரை நாடு கடத்தும் போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இலங்கை வந்திறங்கியதும் அதிகாரிகள் இவர்கள் மூவரின் கடவுச்சீட்டையும் மூவரையும் ஆயப்பகுதி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் சுமார் இரண்டு மணிநேரம் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

எவ்வாறு நாட்டை விட்டு வெளியேறினீர்கள்? எதற்காக நீங்கள் சென்றீர்கள்? எப்போது சென்றீர்கள்? போன்ற பல்வேறு கேள்விகளைக் கேட்டு அவற்றைப் பதிவு செய்தனர்.

பின்னர் இவர்கள் சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறியமையால் இவர்களுக்கு எதிராக நீர்கொழும்பு நீதிமன்றில் தாம் வழக்குத் தாக்கல் செய்யப் போகின்றோம் எனத் தெரிவித்தனர்.

பிறகு உயர் அதிகாரிகளுடன் தாம் கலந்துரையாடி, இவர்களுக்கு எதிராக இலங்கையில் எந்தக் குற்றச்சாட்டு இல்லை என்பதாலும் 33 வருடங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு சட்டவிரோதமான முறையில் வெளியேறியமை தொடர்பில் வழக்குத் தொடர்வதில் உள்ள சிக்கல்கள் காரணமாகவும் வழக்குத் தொடராது விட்டனர்.

ஆயப்பகுதி அதிகாரிகளின் விசாரணைகளின் போது, மூவருடன் நானும் அருகில் இருந்தேன். அவர்களின் விசாரணை முடிவடைந்த பின்னர், புலனாய்வுப் பிரிவினர் அவர்களைப் பொறுப்பெடுத்து தமது விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது, அவர்கள் மூவரையும் தாம் தனித்தனியாக விசாரணை செய்ய வேண்டும் எனக் கூறி மூவரையும் தனித்தனியே அழைத்துச் சென்று விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் விடுவித்தனர்.” என மேலும் தெரிவித்தார்.