ஈஸ்டர் தாக்குதல் – இதுவரை வெளிவராத உண்மைகள்

0
9
Article Top Ad

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் இதுவரை வெளிவராத உண்மைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்வைத்ததாக கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்தார்.

கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று(20) சனிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.

முன்னாள் பொலிஸ் அதிகாரியொருவர் யூடியூப் அலைவரிசைக்கு வழங்கியதாக கூறப்படும் நேர்காணலை மேற்கோள்காட்டி அவர் இந்த விடயங்களை முன்வைத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான வாக்குமூலங்களை பெறுவதற்கு சிறில் காமினி நேற்று வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், அவரிடம் 04 மணிநேரம் வாக்குமூலமும் பெறப்பட்டது.

இதன்போது இதுவரை வெளிவராத எட்டு விடயங்களை அவர் முன்வைத்ததாக கூறினார்.

“முதலாவதாக, 2018 ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் திகதியன்று வவுணதீவில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் உயிரிழந்த இடத்தில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவிற்கு தகவல் கிடைக்ககப்பெற்றது. அந்த பொருட்களை அங்கு வைத்தது யார்?

“இரண்டாவது, சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரியவந்த IP முகவரியை பயன்படுத்தியவர்கள் யார்?

“மூன்றாவது, வவுணதீவு சம்பவம் தவறாக சித்தரிக்கப்பட்டது. அதாவது வவுணதீவில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கொலை செய்யப்பட்டமைக்கு விடுதலைப் புலிகளே காரணம் என இராணுவ புலனாய்வு பிரிவினர், முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவிற்கு பொய்யான தகவல்களை முன்வைத்தமை தற்போது தெரியவந்துள்ளது.

“நான்காவதாக, தெஹிவளையில் தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்னர் தற்கொலை குண்டுதாரியின் தொலைபேசிக்கு அழைப்பு வந்தமை CCTVயில் பதிவாகியுள்ளது. அழைப்பினை ஏற்படுத்தியவர்கள் யார்?

“ஐந்தாவது, தெஹிவளையில் தாக்குதல் மேற்கொண்ட தற்கொலைதாரியின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் யார்?

ஆறாவது விடயம்,கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட தற்கொலைதாரியை அழைத்து வருமாறு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பில் இருந்த சுரேஷ் சலே, அசாத் மௌலானாவிடம் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

ஏழாவது,2018 ஆம் ஆண்டு புத்தளத்தில் சுரேஷ் சலேவிற்கும் சஹ்ரானுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எட்டாவது விடயமாக,உயிரத்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சஹ்ரான் மனைவியிடம் மேற்கொண்ட விசாரணையின் போது அபுஹிந்த் என்ற நபர் தொடர்பில் கூறியுள்ளார். உண்மையில் யார் அந்த அபுஹித்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here