ஈழத்தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பு – தமிழ் பொது வேட்பாளரின் நோக்கம் என்ன?

0
19
Article Top Ad

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் சார்ப்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முயற்சிகளில் தமிழ் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியான பேச்சுகளில் வடக்கு, கிழக்கின் தமிழ் தலைமைகள் ஈடுபட்டு வருகின்றன.

என்றாலும், தமிழ் கட்சிகளுக்கு இடையே இன்னமும் இதுகுறித்து பொது இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இந்த செயல்பாட்டில் முஸ்லிம் கட்சிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பது பலரது கருத்தாக உள்ளது.

ஆனால், முஸ்லிம் கட்சிகள் தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்தை ஏற்கவில்லை. அவர்கள் தென்னிலங்கை அரசியல் கட்சிகளுடன் இணக்கப்பாட்டான அரசியலையே விரும்புகின்றனர். அதனால் முஸ்லிம் கட்சிகளை இணைத்துக்கொள்ளும் செயல்பாடு கைவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதும் சிந்திப்பதும் செயற்படுவதும் காலத்தின் தேவை என்ற அடிப்படையில் வவுனியா வாடிவீடு விடுதியில் ஒன்று கூடிய தமிழர் தாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூகத்தினர் பின்வரும் தீர்மானங்களை இன்று செவ்வாக்கிழமை எடுத்துள்ளனர்.

1. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமது இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் பிரயோகிப்பதற்கான ஒரு களமாக ஜனாதிபதி தேர்தலை கையாள்வது.

2. இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை, ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து அத்தேர்தலை நடைமுறையில் ஈழத்தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாக கையாள்வது.

3.அதற்கு அமைய ஒரு தமிழ் பொது வேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவது.

4.அதற்காக சிவில் சமூகமும் தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது.

5.தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாஷைகளில் ஒன்றான இறைமையுடனான சுயநிர்ணய உரிமையை வெற்றி கொள்வதற்கான பொருத்தமான எதிர்கால கட்டமைப்புக்களை நோக்காகக் கொண்டு செயல்படுவது.

போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில் வடக்கு,கிழக்கு அரசியல், சிவில் சமூக, ஆன்மீக செயல்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.