ஜனாதிபதி வேட்பாளர் விஜேதாச ராஜபக்ச: இலங்கையை மீட்டெடுக்கும் திட்டத்தை முன்வைக்கிறார்

0
16
Article Top Ad

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் விஜேதாச ராஜபக்சவை முன்னிறுத்த உள்ளதாக அக்கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்த நிலையில், சு.கவின் நேற்றைய மே தினக் கூட்டத்தில் விஜேதாச ராஜபக்ச, கலந்துகொண்டு விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.

இந்த உரையில் இலங்கையை மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சி இரு பிரிவுகளாகப் பிளவுபட்டு அதிகாரப் போட்டியில் சிக்கியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பால் மைத்திரிபால சிறிசேன தலைவராக செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனால் அமைச்சர் விஜேதாச ராஜபக்சவை, சு.கவின் பதில் தலைவராக மைத்திரியின் தரப்பு நியமித்தது.

மற்றைய தரப்பின் பதில் தலைவராக நிமல் சிறிபாலடி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கம்பஹா மாநகர சபை மைதானத்தில் மைத்திரியின் தரப்பு நேற்று மே தினக் கூட்டத்தை நடத்தியது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் விஜேதாச ராஜபக்ச,

”நாட்டை மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க உள்ளோம். சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்.

மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்து 45 நாட்களிலேயே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட பாரிய அதிகாரங்களை குறைக்க நடவடிக்கை எடுத்தார்.” என்றார்.

மைத்திரிபால சிறிசேன உரையாற்றுகையில்,

”ஊழலை முடிவுக்கு கொண்டுவருவதை இலக்காகக் கொண்ட கொள்கைகளை நாம் முன்வைக்க உள்ளோம்.

வீடுகளில் இருப்பதைப் போலவே ஒட்டுமொத்த தேசத்திலும் ஒரு நெருக்கடி உள்ளது. இந்த நெருக்கடிகளைத் தீர்க்க ஊழல் இல்லாத அரசாங்கத்தை நாம் உருவாக்க வேண்டும்.

தேசத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும், யாரை கைவிட வேண்டும் என்பதை மக்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர்.” என்றார்.