நாமலின் அரசியல் எதிர்காலம்: ராஜபக்ச குடும்பத்தினர் போடும் கணக்கு

0
140
Article Top Ad

மே தினக் கூட்டங்களின் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான பேச்சுகளும் பேரங்களும் சூடுபிடித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியும், தேசிய மக்கள் சக்தியும் தமது வேட்பாளர்கள் தொடர்பில் இறுதி தீர்மானத்தை எடுத்துவிட்டன.

ஆனால், இன்னமும் வேட்பாளர் தொடர்பில் இறுதி தீர்மானத்தை எடுக்க முடியாது ஆளுங் கட்சிகளான பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன தொடர்ந்து பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றன.

ஆளுங்கட்சியின் வேட்பாளர் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் தொடர்ந்து கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

எதிர்க்கட்சியாக அமரவைக்க முடியும்

ரணில் விக்ரமசிங்கவுடன் பசில் ராஜபக்ச தொடர்ந்து முன்னெடுத்துவரும் பேச்சுகள் தொடர்பில் ராஜபக்ச குடும்பத்தினர் அதிருப்தியில் உள்ளதாக தெரிய வருகிறது.

பொதுஜன பெரமுனவின் வாக்குகள் கடந்த காலத்தில் பாரிய சரிவை சந்தித்திருந்ததாக பேசப்பட்டது. ஆனால், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள ஓரளவு ஸ்திரத்தன்மையானது பொதுஜன பெரமுனவின் சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் சிந்தனைகளுக்கு வழிவகுத்துள்ளது.

அதன் பிரகாரம்தான் வர்த்தகர் தம்மிக்க பெரேராவுக்கு அக்கட்சியின் மே தினக் கூட்டத்தில் முக்கியத்துவம் அளித்து பசில் ராஜபக்சவுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டது.

வேட்பாளர் ஒருவரை களமிறக்கி இரண்டாவது இடத்தை பெற்றால் அது நாடாளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுனவை எதிர்க்கட்சியாக அமரவைக்க முடியும் என்பது ராஜபக்சர் குடும்பத்தின் தற்போதைய நிலைப்பாடு.

ரணில் விக்ரமசிங்கவுக்கு வாய்ப்பளித்து அவர் வெற்றிபெற்றால் அது நாமல் ராஜபக்சவின் எதிர்கால அரசியல் பயணத்துக்கு கடுமையான சவாலாக மாறிவிடும் என்பதாலேயே ரணிலுடன் பசில் முன்னெடுத்துவரும் பேச்சுகளுக்கு ராஜபக்சர் குடும்பம் அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிய வருகிறது.