ரஃபா மீது தாக்குதல்: இஸ்ரேலுக்கு ஆதரவில்லை – அமெரிக்கா அறிவிப்பு

0
64
Article Top Ad

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் ஹோட்டலுக்கு வெளியே கூடியிருந்த ஹமாஸ் போராளிகள் இயக்கத்தால் பிணைக் கைதிகளாகப் பிடிபட்டவர்களின் உறவினர்களை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் நேற்று புதன்கிழமை சந்தித்தார்.

இஸ்ரேல் பாலஸ்தீனப் பகுதியான ராஃபாவில் தாக்குதல் நடத்தவுள்ள நிலையில் அங்கு பொதுமக்களைக் காக்கும் திட்டம் எதையும் தான் இன்னும் பார்க்கவில்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இவர்களிடம் கூறியுள்ளார்.

அப்படி ஒரு திட்டம் இல்லாமல் ராஃபாவில் இஸ்ரேல் மேற்கொள்ள எண்ணும் தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்காது என்று பிளிங்கன் கூறினார்.

பிளிங்கனும் நெட்டன்யாகுவும் ஜெருசலத்தில் இரண்டரை மணிநேரம் சந்தித்துப் பேசினர். அதன்பின் பேசிய நெட்டன்யாகு, அமெரிக்காவின் ஆட்சேபனையைப் பொருட்படுத்தாமல் ராஃபா மீதான இஸ்ரேலின் தாக்குதல் நடைபெறும் என்று உறுதிப்படுத்தினார்.

இது குறித்து கருத்துரைத்த ஐநாவும் தாக்குதல் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்தது.

“பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான ஒரு இராணுவத் திட்டம் இல்லாதவரை ராஃபா மீதான தாக்குதலுக்கு நாங்கள் ஆதரவளிக்க முடியாது. பொதுமக்களைப் பாதுகாக்கக்கூடிய அப்படி ஒரு திட்டத்தை நாங்கள் காணவில்லை,” என்று பிளிங்கன் தெரிவித்தார்.

“எங்களைப் பொறுத்தவரை ஹமாஸுடனான பிரச்சினையைத் தீர்க்க இராணுவத் தாக்குதல் இல்லாத அதைவிட சிறப்பான மற்ற மாற்று வழிகள் உள்ளன.” என்று கூறிய பிளிங்கன், அதுபற்றி இஸ்ரேலிய அதிகாரிகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறினார்.