ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் எப்போது விவாதம் நடக்கும் என இலங்கை மக்களிடையே எதிர்பார்ப்பொன்று ஏற்பட்டுள்ளது.
இரு கட்சிகளும் தமது பொருளாதாரக் கொள்கைகளை நாட்டுக்கு வெளிப்படுத்த தயாராக இருப்பதாக அறிவித்த பின்புலத்திலேயே விவாதம் தொடர்பான பேச்சுகளும் எழுந்தன.
ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ஆரம்பத்தில் இதுதொடர்பிலான கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
அதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தரப்பில் இருந்து ஹர்சடி சில்வா, நளின் பண்டார ஆகியோர் பதிலளித்து வந்தனர்.
என்றாலும், இரு கட்சிகளும் மாறி மாறி அறிவித்த திகதிகளில் இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது புதிய திகதிகளை சஜித் தரப்பு அறிவித்துள்ளது.
இரு கட்சிகளின் பொருளாதாரக் குழுக்களுக்கு இடையிலான விவாதம் மே 20 முதல் 25 ஆம் திகதிக்கு இடையிலான ஒரு நாளில் நடத்தவும், இரு கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான விவாதத்தை மே 27 முதல் 31 வரையான திகதியொன்றில் நடத்தவும் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இது குறித்து தேசிய மக்கள் சக்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் தரப்பிலிருந்து இன்னமும் இதற்கு பதில் அளிக்கவில்லை.
மே தின நிகழ்வில் உரையாற்றியிருந்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இம்மாதம் 20ஆம் திகதிக்கு பின்னர் எந்தவொரு திகதியிலும் விவாதத்தை நடத்த தயார் என வலியுறுத்தியிருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.