இரண்டு காற்றாலை மின் நிலையங்களை நிர்மாணிப்பதற்கான அதானி நிறுவனத்துடன் இலங்கை 20 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பிரிவு, 484 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் நிலையங்களை உருவாக்க 442 மில்லியன் டொலர் முதலீடு செய்ய கடந்த பெப்ரவரியில் ஒப்புதல் பெற்றது.
இந்த நிலையங்கள் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மன்னார் நகரம் மற்றும் பூநகரி கிராமத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதானி கிரீன் சமர்ப்பித்த திட்ட முன்மொழிவை மதிப்பீடு செய்ய அமைச்சரவை உபக் குழு ஒன்றை இலங்கை அரசாங்கம் நியமித்திருந்தது.
பொருளாதார சிக்கல்களுடன் போராடிவரும் இலங்கை, 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் போது கடுமையான மின் தடை மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை சந்தித்தது.
இதன் எதிரொலியாக இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களின் விலைவாசி உயர்வைக் குறைக்க, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை நாடு துரிதப்படுத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.