சக்தி வாய்ந்த ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்திய அமெரிக்கா: இஸ்ரேலிய படைகளை தாக்கப்போவதாக ஹமாஸ் அறிவிப்பு

0
115
Article Top Ad

இஸ்ரேலுக்கு சக்திவாய்ந்த ஆயுதங்களை வழங்குவதை வாஷிங்டன் நிறுத்திவிட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள கருத்தையடுத்து, காசாவின் தெற்கு நகரமான ரஃபாவின் புறநகரில் இஸ்ரேலிய துருப்புக்களுடன் போரிடப்போவதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

ரஃபா மீதான இஸ்ரேலிய படையெடுப்பைத் தடுக்க அமெரிக்கா முற்பட்டாலும் அது பயனளிக்கவில்லை. ஹமாஸுடனான போர்நிறுத்த முன்மொழிவை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.

பேச்சுவார்த்தைகளுக்கு இஸ்ரேல் தயாராக இல்லை. இன்று புதன்கிழமை கெய்ரோவில் போர்நிறுத்த பேச்சுகளை மீள ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஹமாஸ் போராளிகளை தோற்கடிக்க ரஃபா மீது இஸ்ரேல் ஒரு பாரிய தாக்குதலை நடத்த போவதாக அச்சுறுத்தியுள்ளது. ஆனால் மேற்கத்திய நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் ரஃபா நகரத்தின் மீதான முழு அளவிலான தாக்குதல் மனிதாபிமான பேரழிவாக இருக்கும் என்று எச்சரித்துள்ளன.

ஹமாஸ் தனது போராளிகள் ரஃபாவின் கிழக்கில் இஸ்ரேலியப் படைகளுடன் போரிட்டு வருவதாகக் கூறியுள்ளது.

ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இங்கு தஞ்சம் அடைந்துள்ளனர். இதற்கு மத்தியிலேயே இஸ்ரேலின் தாக்குதல்களும் தொடர்கின்றன.

ராஃபாவின் கிழக்கே விமான நிலையத்திற்கு அருகில் இன்று பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.