கிரெம்ளினில் இருந்து மேற்குலத்துக்கு வெளியான எச்சரிக்கை

0
169
Article Top Ad

”ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்பில் மேற்குலக நாடுகளுடனான கலந்துரையாடலை ரஷ்யா நிராகரிக்கவில்லை. இதற்கான தீர்மானத்தை எடுக்க வேண்டியது மேற்குலக நாடுகள்தான்.” என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சமரசத்துக்கான புதிய அறிவிப்பை நேற்று திங்கட்கிழமை தமது பதவியேற்பு நிகழ்வில் வெளியிட்டார்.

உலகில் வல்லரசுகளாக கருதப்படும் ரஷ்யாவையும் அமெரிக்காவையும் மையப்படுத்தியே உலக அரசியல் கடந்த ஒரு நூற்றாண்டுக்காலமாக நகர்கிறது.

சமரசத்துக்கான முயற்சியாக இருக்கலாம்

முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் மற்றும் அதன் பின்னர் உருவான நட்பு நாடுகள், நேச நாடுகள் என அமெரிக்காவையும் ரஷ்யாவையும் மையப்படுத்தியே உலக அரசியல் நகர்கிறது.

இதன் பின்னணியில்தான் மத்திய கிழக்கில் இடம்பெறும் யுத்தங்கள், மோதல்கள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இடம்பெறும் கலவரங்கள் உருவாக்கப்படுகின்றன.

அதேபோன்று இலங்கை போன்ற மூன்றாம் மண்டல நாடுகளின் ஏற்பாடும் அரசியல் குழப்ப நிலைகளுக்கும் இந்த இரண்டு நாடுகள் மற்றும் அதன் நெருங்கிய நட்பு நாடுகளால்தான் காரணமாக உள்ளன.

இஸ்ரேல் – பாலஸ்தீன யுத்தம், ஈரான் இஸ்ரேல் பதற்றம் என அத்தனை சர்வதேச மோதல்களும் இந்த இருநாடுகளுக்கு இடையிலான வரலாற்று பகையில்தான் உருவாக்கப்படுகின்றன.

இந்த நிலையில் நேற்று கிரெம்ளினில் மாளிகையில் புடின் மேற்குலக நாடுகளுக்கு விடுத்த அறிவிப்பு என்பது இறுதி சமரசத்துக்கான முயற்சியாக இருக்கலாம் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

புடின் கடுமையான அறிவிப்பு

ஜோசப் ஸ்டாலினுக்கு பின்னர் உருவான பலம்வாய்ந்த தலைவராக திகழும் புடினின் ஆட்சிதான் 2036ஆம் ஆண்டுவரை ரஷ்யாவில் இடம்பெறும். 2030ஆம் ஆண்டிலும் அவர்தான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவார். இவரது நகர்வு உலக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கையையும் அரசியல் ஆய்வாளர்கள் விடுத்துள்ளனர்.

”போர் விவகாரத்தில் நியாயமான முறையில் பேச்சுவார்த்தைகளை முன்னோக்கிக் கொண்டுசெல்ல மேற்குலம் விரும்பினால் அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

மேலும் மேலும் ரஷ்யாவை வீழ்த்துவதையே நோக்கமாக கொள்கிறீர்களா அல்லது ரஷ்யாவுடன் இணக்கப்பாட்டுடன் செயல்பட விரும்புகிறீர்களா என மேற்குலக நாடுகளே தீர்மானிக்க வேண்டும்.” என புடின் கடுமையான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

மேற்குலக தூதுவர்கள் கலந்துகொண்டிருக்கவில்லை

பல ஐரோப்பிய நாடுகள் புடினின் பதவியேற்பு நிகழ்வை நிராகரித்திருந்தன. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் நகர்வுகள் தொடர்ந்து ஏமாற்றமளிப்பதாக ஐரோப்பிய நாடுகள் தமது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

கிரெம்ளினில் நடைபெற்ற இந்த பதவியேற்பு நிகழ்வை அமெரிக்க, பிரித்தானிய, ஜெர்மனி மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் ரஷ்யாவுக்கான தூதுவர்கள் நிராகரித்துள்ளனர்.

மொஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதுவர் லின் ட்ரேசி, ஏற்கனவே திட்டமிட்ட பயணமொன்றுக்காக வெளிநாடு சென்றுள்ளதாக மொஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்று அறிவித்திருந்தது.

உக்ரைனுக்கு எதிரான யுத்தத்திற்கு எதிர்ப்பை வெளியிடுவதற்காகவே ரஷ்யாவில் உள்ள மேற்குலக தூதுவர்கள் புடினின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டிருக்கவில்லை.

பின்வாங்கிய பிரான்ஸ் ஜனாதிபதி

உக்ரைனுக்கு நேட்டோ படையினரை அனுப்ப முடியும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரான், வெளியிட்டிருந்த அண்மைய கருத்தின் எதிரொலியாக அணுவாயுத பரிசோதனை பயிற்சிகளுக்கு தயார்ப்படுத்தல்களை மேற்கொள்ளுமாறு ரஷ்ய படையினருக்கு புடின் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இது ஐரோப்பாவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியதால் பிரான்ஸ் ஜனாதிபதி தமது அறிவிப்பை முற்றாக மீளப் பெற்றுள்ளார்.

மேற்குலகில் மிகப்பெரிய மோதல்களுக்கு ரஷ்யாவின் நகர்வுகள் வழிவகுக்கும் என்பதால் பிரான்ஸ் ஜனாதிபதி இந்த கருத்தை மீளப் பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

என்றாலும், சீன ஜனாதிபதி பிரான்ஸுக்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ பயணத்தின் பின்னர் இமானுவேல் மெக்ரான், தமது நிலைப்பாடுகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.

ரஷ்யாவும் சீனாவும் நெருங்கிய நட்பு நாடுகள் என்பதாலும் உக்ரைன் யுத்தம் தொடர்பில் இருவருக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதன் பின்புலத்திலேயே பிரான்ஸ் ஜனாதிபதி தமது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உரை வெளிப்பாடு

நேட்டோ படைகள் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டால் அது அமெரிக்காவுக்கும் அதன் சார்பு அணிக்கு எதிரான யுத்தத்தை ஆரம்பிக்க வழிவகுக்கும் என புடின் அபாய எச்சரிக்கையொன்றையும் அண்மையில் விடுத்திருந்தார்.

இதேவேளை, உக்ரைனுக்கு எதிரான யுத்தத்தில் ரஷ்யாவுக்கு தமது ஆதரவை வழங்க வேண்டாமென சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கிடம் இமானுவேல் மெக்ரான், கோரிக்கை விடுக்கவும் தவறவில்லை.

என்றாலும், இந்த கோரிக்கையை ஷி ஜின் பிங் ஏற்கமாட்டார். ரஷ்யாவுக்கும் – சீனாவுக்குமான உறவானது மிகவும் பலம்வாய்ந்ததாக கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அதுவே அமெரிக்காவுக்கும் மேற்குகலத்துக்கும் உள்ள மிகப் பெரிய அச்சுறுத்தல்.

புடினின் நகர்வுகளும் அமெரிக்காவில் அடுத்து ஆட்சிக்குவர போகும் ஜனாதிபதியின் நகர்வுகளுமே அடுத்துவரும் பல ஆண்டுகளுக்கு உலக அரசியலை தீர்மானிக்கும் என்பதே நேற்றைய அவரது உரையின் வெளிப்பாடு. இதற்கிடையில்தான் இந்தியா, சீனா போன்ற பலவாந்த நாடுகளும் ஏனைய நாடுகளும் தமது இராஜதந்திர உறவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.