டயானா கமகேவின் குடியுரிமை விவகாரம்: கட்சியும் இரத்துச் செய்யப்படுமா?

0
58
Article Top Ad

கொழும்பு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான டயானா கமகே பிரித்தானிய குடியுரிமையை இழந்துள்ள நிலையில், இறுதியாக 2014ஆம் ஆண்டு முதல் சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்ததிலிருந்து செல்லுபடியாகும் விசா இன்றி அவர் இலங்கையில் எப்படி வாழ்ந்தார் என்பது குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசிக்க குடிவரவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

பிரித்தானிய குடியுரிமை காரணமாக அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.

டயானா கமகே பிரித்தானியக் குடியுரிமையைப் பெற்றதன் பின்னர் இலங்கையின் பிரஜையாக இருந்துவிட்டு, சட்டத்தின்படி இலங்கையின் பிரஜை என்ற அந்தஸ்தைத் தொடரத் தவறிவிட்டார் என்பதை நீதிமன்றத்தின் முன் உள்ள சாட்சியங்கள் உறுதிப்படுத்துவதாக உச்ச நீதிமன்றம் அவதானித்துள்ளது.

இதன் மூலம் அவர் அரசியல் சாசனத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பின் மூலம், இலங்கையர் அல்லாத அவர், உரிய ஆவணங்கள் ஏதுமின்றி நாட்டில் எப்படி வாழ்ந்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

போலி ஆவணங்கள்

குடிவரவு, குடியகல்வு சட்டங்களை மீறி போலி ஆவணத்தை பயன்படுத்தி அவர் நாட்டில் வசித்து வந்ததாக குற்றப் புலனாய்வு திணைக்களம் முன்னதாக நீதிமன்றில் தெரிவித்திருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே 1965ஆம் ஆண்டு தென் கொழும்பு பொது வைத்தியசாலையில் 6553 இலக்கத்தின் கீழ் பிறந்ததாக பிறப்புச் சான்றிதழை சமர்ப்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், டயானா கமகே 2004ஆம் ஆண்டில் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற உடனேயே இலங்கை குடியுரிமை பறிக்கப்படும் என்பதால் அந்த ஆவணங்கள் சிக்காமல் இருக்க, 10 ஆண்டுகளுக்கு பின் 2014ஆம் ஆண்டில் பிறப்பு சான்றிதழ் எண்ணாக 6553 வேறு பிறப்பு சான்றிதழும் 658534300V என வேறு அடையாள அட்டையும் பெற்றதாக தெரியவந்துள்ளது.

டயானாவின் கருத்து

இந்நிலையில், ‘ஒருவன்‘ செய்திப்பிரிவின் சகோதர ஊடகமான ‘ஸ்வர்ணவாஹினி‘ தொலைக்காட்சியில் ‘இர ஹரி கெலின்‘ என்ற அரசியல் நிகழ்வில் கலந்துக்கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார். குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

நாடாளுமன்றத்தில் இரட்டை குடியுரிமை

நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய கீதா குமாரசிங்க இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்தில் இரட்டைக் குடியுரிமை காரணமாக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.

அரசியலமைப்பின் 19வது திருத்தம் இணைக்கப்பட்டபோது, இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் ஜனாதிபதி அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட வேண்டியிருந்தது.

எவ்வாறாயினும், அவரது அரசாங்கத்தின் கீழ் அரசியலமைப்பின் 20வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதில், இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு இந்த ஏற்பாடு இரத்து செய்யப்பட்டது.

புதிய சட்டத்தின் கீழ் இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலும் குடியுரிமை பெற்றிருந்த போதிலும் பசில் ராஜபக்ஷ சபைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இருப்பினும், அடுத்த அரசியலமைப்பு திருத்தத்தின் சட்டத்தில் அது மீண்டும் நீக்கப்பட்டது.

குடியுரிமை நிலையை சரிபார்க்க முடியாது

வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை சமர்ப்பிக்கும்போது அவர்களின் வெளிநாட்டு அல்லது இரட்டை குடியுரிமை நிலையை சரிபார்க்க முடியாது என தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்த விடயம் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஏனைய உறுப்பினர்களின் பதவிகளுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்படுமா எனவும் கட்சியிப் பதிவில் என்ற அச்சம் நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி டயானா கமகே மூலம் ஸ்தாபிக்கப்பட்டு தொலைபேசி சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்தில் 54 ஆசனங்களை பெற்றுக்கொண்டது.

ஐக்கிய மக்கள் சக்தி இரத்துச் செய்யப்படுமா?

எனவே, டயானா கமகேவின் பதவிப் பறிபோன நிலையில் கட்சியின் ஸ்திரத்தன்மையிலேயே எஞ்சியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியும் தங்கியுள்ளது என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக காணப்பட்டு வருகிறது.

இவ்வாறான கேள்விகளுக்கு வழக்கறிஞர் பிரதிபா மஹானாம ஹேவாகே பதிலளித்துள்ளார்.

டயானா கமகேவின் பதவி பறி போனமைக்கு காரணம் அவர் இந்நாட்டு பிரஜை என்பதை நிரூபிக்கத் தவறியமையே எனவும் கட்சியின் பதிவு இரத்து செய்யப்படுமா இல்லையா என்பது நீதிமன்றில் காரணங்களை முன்வைத்ததன் பின்னரே தீர்மானிக்க முடியும் என வழக்கறிஞர் பிரதிபா மஹானாம ஹேவாகே தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவம் எவ்விதத்தில் மாற்றம் செய்யப்பட்டது போன்ற காரணங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், ஏதோ ஒரு விதத்தில் கட்சி இரத்து செய்யப்பட்டால், கட்சியில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் பதவிகளும் இரத்து செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

‘அபே ஜாதிக பெரமுன‘

எவ்வாறாயினும், மங்கள சமரவீர மூலம் ‘அபே ஜாதிக பெரமுன (Our National Front)‘ என ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் டயானா கமகேவுக்கு வழங்கப்பட்டதாகவும் அது பின்னாளில் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட்டு ‘ஐக்கிய மக்கள் சக்தி‘ என பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இதேவேளை, 2023ஆம் ஆண்டு இடம்பெற்ற நவகமுவ பெரஹராவின் நேரடி ஒளிபரப்பிற்காக செலவிடப்பட்ட நிதித் தொகையை இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே செலுத்தத் தவறியதற்காகவும் அவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.