டி 20 உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு பிரம்மாண்டமான வரவேற்பு : மும்பையில் வெற்றி ஊர்வலம்

0
22
Article Top Ad

மேற்கு இந்திய தீவுகளில் நடந்த டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று நாடு திரும்பிய இந்திய அணிக்கு மும்பையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக, டெல்லியில் பிரதமர் மோடியைசந்தித்து வீரர்கள் வாழ்த்து பெற்றனர்.

மேற்கு இந்தியத் தீவுகளில் சமீபத்தில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ரோஹித்சர்மா தலைமையிலான இந்திய அணி, இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

கடந்த சனிக்கிழமை போட்டி முடிவடைந்த நிலையில் பார்படாஸ் நகரில் வீசிய புயல் காரணமாக இந்திய அணி தாயகம் திரும்புவதில் சிக்கல் உருவானது. புயலால் பார்படாஸ் விமான நிலையம் மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் புயல் கரையை கடந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பார்படாஸ் விமானநிலையம் இயங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து பிசிசிஐ ஏற்பாடு செய்ததனி விமானம் (ஏர் இந்தியா சாம்பியன்ஸ் 24 உலகக் கோப்பை) அமெரிக்காவின் ஜெர்சி நகரில் இருந்து பார்படாஸில் உள்ள கிராண்ட்லி ஆடம்ஸ் சர்வதேச விமான நிலையம் வந்து சேர்ந்தது.

அங்கிருந்து நேற்றுமுன்தினம் இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிஅளவில் இந்திய அணியினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தலைவர் ரோஜர் பின்னி உள்ளிட்ட நிர்வாகிகள், இந்திய ஊடகவியலாளர்கள் ஆகியோர் பார்படாஸில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டனர்.

சுமார் 16 மணி நேர பயணத்துக்கு பின்னர் அவர்கள் நேற்று காலை 6 மணி அளவில் டெல்லி விமான நிலையம் வந்து சேர்ந்தனர். அங்குபிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா,முறைப்படி பூங்கொத்து வழங்கி இந்திய அணியை வரவேற்றார்.

தொடர்ந்து விமான நிலைய பகுதியில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியின் வருகையை முன்னிட்டு, டெல்லி விமான நிலைய பகுதியில் அதிகாலை 4 மணிக்கே பெருந்திரளான ரசிகர்கள் கூடினர்.

வீரர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் அவர்களை கரகோஷம் எழுப்பி ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், பயிற்சியாளர்கள் அனைவரும் அருகில் உள்ள ஐடிசி மவுரியா ஓட்டலில் சற்று ஓய்வெடுத்தனர். பின்னர் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

அப்போது வீரர்கள் அனைவரும் பிசிசிஐ ஏற்பாடு செய்திருந்த ‘சாம்பியன்ஸ்’ என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட சிறப்பு சீருடையை அணிந்திருந்தனர். நிகழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள் அனைவரையும் பிரதமர் ஆரத்தழுவி புன்னகையுடன் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து டி20 உலகக் கோப்பை டிராபியை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும், பயிற்சியாளர் ராகுல் திராவிட்டும் இணைந்து பிரதமர்மோடியிடம் வழங்கினர்.

சாம்பியன் கோப்பையுடன் ஒட்டுமொத்த இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர் ராகுல்திராவிட், பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோருடன் இணைந்து பிரதமர் மோடிபுகைப்படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து பிரதமர் இல்லத்தில் இந்திய அணி வீரர்களுக்கு காலை விருந்து அளிக்கப்பட்டது.

தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் அனைவரையும் அமரவைத்து அவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். பிரதமரை சுற்றி வீரர்கள் வட்ட வடிவில் அமர்ந்தனர். வீரர்களுடன் பிரதமர் சகஜமாக சிரித்து பேசினார்.

பிரதமர் உடனான சந்திப்புக்கு பிறகு, மாலை 4 மணி அளவில் இந்திய கிரிக்கெட் அணியினர் விமானம் மூலம் மும்பையில் பிசிசிஐ சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்க புறப்பட்டனர். மாலை 6 மணி அளவில் மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் விமானத்தின் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து இந்திய அணி வீரர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

மும்பை மரைன் டிரைவ் பகுதியில் இருந்து வான்கடே மைதானம் வரை வழிநெடுகிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு, இந்திய அணி வீரர்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here