ஆடை விதிகளை மீறிய வனிந்து ஹசரங்க: 11 லட்சம் ரூபா அபராதம்

0
54
Article Top Ad

லங்கா பிரிமியர் லீக் தொடரில் கண்டி ஃபால்கன்ஸ் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு 11 லட்சம் ரூபா அபராதம் விதிக்க போட்டிக் குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லங்கா பிரிமியர் லீக் போட்டியின் ஆடை பொருட்கள் தொடர்பான சட்டத்தை மீறியமை காரணமாகவே அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வனிந்து ஹசரங்க இந்த வருட போட்டியில் பெற்ற போட்டி கட்டணத்தில் இருந்து இந்த தொகையை வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

போட்டியில் பங்குபற்றும் அனைத்து வீரர்களுக்கும் ஒவ்வொரு அணியினரின் நிறங்கள் அடங்கிய தனித்தனி ஆடைகள் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், வனிந்து ஹசரங்க வித்தியாசமான லோகோ கொண்ட ‘ஹெல்மெட்’ அணிந்து மைதானத்திற்கு வந்தமையால், ​​அதனை கழற்றுமாறு நடுவர் ரோலி பிளாக் கோரிக்கை விடுத்திருந்தார்.

எவ்வாறாயினும், நடுவரின் கோரிக்கையை ஏற்காததால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கண்டி ஃபால்கன்ஸ் மற்றும் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியின் பின்னர் பிரதம நடுவரின் முறைப்பாட்டின் பிரகாரம் வனிந்துவிற்கு எதிரான அபராதத்தை போட்டி நடுவர் கிரேம் லப்ரோய் கண்டி அணிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இச்சம்பவத்தின் மூலம் லங்கா பிரிமியர் லீக் போட்டியின் அனைத்து வீரர்களுக்கும் தமக்கு சொந்தமில்லாத ஆடைகளை பயன்படுத்த வேண்டாம் என போட்டிக் குழு அறிவித்துள்ளது.

மேலும், போட்டிகளின் முடிவில் நடைபெறும் பரிசளிப்பு விழாவிற்கு வீரர்கள் முழு உடை அணிந்து வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.