போயஸ் கார்டனில் வீடு கட்டியது ஏன்? – தனுஷ் விளக்கம்

0
48
Article Top Ad

தனுஷின் 50 வது படம் ‘ராயன்’. இதில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சந்தீப்கிஷண், காளிதாஸ், துஷாரா விஜயன் அபர்ணா பாலமுரளி உட்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இதை தனுஷ் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் பேசிய தனுஷ் கூறியதாவது: ஒன்றுமே தெரியாமல் இருந்த என்னை நடிகன் ஆக்கியது என் அண்ணனும் இயக்குநருமான செல்வராகவன். அவர்தான் என் ஆசான். அவர்தான் குரு. எனக்கு கிரிக்கெட் சொல்லிக் கொடுத்தது, சாப்பிடச் சொல்லி கொடுத்தது, வாழ்வில் போராட சொல்லிக் கொடுத்தது அவர்தான். குடிசை வீட்டில் இருந்த என்னை, போயஸ் கார்டனில் உட்கார வைத்திருப்பதும் அவர்தான்.

இதன் படப்பிடிப்பில் மற்ற நடிகர்களுக்கு இரண்டாவது டேக் சென்றால் கோபப்படுவேன். ஆனால் செல்வராகவனுக்கு என்றால், சந்தோஷப்படுவேன். காரணம், அவர் என்னை அவரது படங்களில் அவ்வளவு டார்ச்சர் செய்து வேலை வாங்கி இருக்கிறார். அதே டார்ச்சரை அவருக்கு கொடுப்பதும், அதில் அவர் கஷ்டப்படுவதும் சந்தோஷமாக இருந்தது. போயஸ் கார்டனில் நான் வீடு கட்டியிருப்பது இவ்வளவு பேச்சாக எழும் என்று தெரிந்திருந்தால், நான் அங்கு கட்டியிருக்கவே மாட்டேன். நான் யார் ரசிகர் என்று உங்களுக்குத் தெரியும்.

ரஜினி சார் வீடு போயஸ் கார்டனில் இருக்கிறது. என் 16 வயதில் போயஸ் கார்டன் சென்று ரஜினியின் வீட்டை பார்க்க ஆசைப்பட்டேன். அங்கிருந்த போலீஸ்காரர்களிடம் கெஞ்சி அவர் வீட்டை பார்த்தேன். அருகிலேயே ஜெயலலிதாம்மா வீடும் இருந்தது. அதனால் போயஸ் கார்டனில், ஒரு சின்ன வீடாவது கட்ட வேண்டும் என்று கனவு கண்டேன். அந்த விதை அப்போது விழுந்தது. அந்த 16 வயது வெங்கடேஷ் பிரபுவின் ஆசைக்கு, தனுஷ் கொடுத்த கிஃப்ட் தான், இப்போது போயஸ் கார்டனில் கட்டி இருக்கும் வீடு.

நான் யார் என்பது அந்தச் சிவனுக்கு தெரியும். என் அம்மா, அப்பாவுக்குத் தெரியும். எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும். இவ்வாறு தனுஷ் பேசினார்.