இலங்கையில் பயணச்சீட்டுக்குப் பதிலாக இலத்திரனியல் முறைமை விரைவில்!

0
12
Article Top Ad

இந்த வருட இறுதிக்குள் ரயில்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளில் பயணச்சீட்டுக்குப் பதிலாக இலத்திரனியல் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க தெரிவித்தார்.

”இரண்டு வருட முன்னேற்றமும் எதிர்காலமும்” என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (08) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோதே போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் 2022 ஆம் ஆண்டுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்கு 390 பில்லியன் ரூபாவை அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும், 300 பில்லியன் ரூபாவை ஒப்பந்தக்காரர்களுக்காகவும் 90 பில்லியன் ரூபா கடனை செலுத்துவதற்காகவும் செலவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க,

நாடு எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் 2022 ஆம் ஆண்டுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்கு மாத்திரம் கடந்த இரண்டு வருடங்களில் 390 பில்லியன் ரூபாவை அரசாங்கம் வழங்கியுள்ளது. அந்த பணத்தில் 300 பில்லியன் ரூபா ஒப்பந்தக்காரர்களுக்காகவும் 90 பில்லியன் ரூபா கடனை செலுத்துவதற்காகவும் செலவிடப்பட்டுள்ளது.

மேலும் அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் வெற்றியானது, நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது என்பதைக் கூற வேண்டும். இதன் மூலம் கடந்த பொருளாதார நெருக்கடியின் போது இடைநடுவில் நிறுத்தப்பட்ட பல திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க முடிந்துள்ளது. குறிப்பாக, மத்திய அதிவேகப் பாதையின் முதல் கட்டத்தை ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மத்திய அதிவேகப் பாதையின் 02 ஆம் மற்றும் 03 ஆம் கட்டம், ருவன்புர அதிவேகப் பாதைத் திட்டம் எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், நிதி முதலீடுகளின் ஊடாக அதுருகிரிய தூண்களின் மேல் அமைக்கப்படும் அதிவேகப் பாதைத் திட்டத்தை நிறைவு செய்வது தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இதற்காக அரச, தனியார் கூட்டு முதலீடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

மேலும், இந்த வருட இறுதிக்குள் புகையிரதங்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான பயணச்சீட்டு வழங்க இலத்திரனியல் முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதிவேகப்பாதைகளில் கட்டணம் அறவிடலும் சில மாதங்களில் இலத்திரனியல் முறைமைக் கட்டமைப்பிற்குள் உள்வாங்கப்படும்.

இலகு ரயில் திட்டத்திற்கான (LRT) முதலீடுகளை மேம்படுத்துவது குறித்து ஜப்பான் அரசாங்கத்துடன் ஆரம்ப கட்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. மேலும், பல புதிய திட்டங்களுக்காக சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். அதன்படி, அடுத்த ஐந்தாண்டுகளில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையை 10% -15% என்ற வேகத்தில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எஸ். பி. எம் சூரிய பண்டார:
கொம்பனித்தெரு, நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தையை இணைக்கும் புகையிரதப் பாதைக்கு மேலே நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் நிறைவுசெய்து அடுத்த வாரம் மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்படவுள்ளது. மேலும், கொஹுவல மேம்பாலம் அதற்கு அடுத்த வாரம் மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்படவுள்ளது. மேலும், துறைமுக நுழைவாயில் பாதையின் பணிகள் செப்டம்பர் முதல் பாதியில் நிறைவடையும்.

இது தவிர வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் கடந்த பெப்ரவரியில் ஆரம்பிக்கப்பட்ட 1000 கிலோமீற்றர் கிராமப்புற வீதிகள் திட்டத்தின் கீழ் 320 கிலோமீற்றர் கிராமப்புற வீதிகள் பூர்த்தி செய்யப்பட்டு எஞ்சிய தொகையை ஆகஸ்ட் மாதத்தில் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here