தெலுங்கானா வசமானது ஹைதராபாத்

0
57
Article Top Ad

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கான பொது தலைநகர் ஹைதராபாத் என்ற நடைமுறை முடிவுக்கு வந்துள்ளது.

இனி வரும் காலங்களில், தெலுங்கானாவுக்கு மட்டுமே ஹைதராபாத் தலைநகராக விளங்கும்.

ஆந்திராவைப் பிரித்து, தெலுங்கானா என்ற தனி மாநிலத்தை உருவாக்கக் கோரி, 10 ஆண்டுகளுக்கு முன் பல்வேறு போராட்டங்கள் நடந்தன.

இதையடுத்து, 2014இல் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்ரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, லோக்சபா தேர்தலுக்கு முன், 2014 பெப்ரவரியில், ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டம் – 2014ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

இதன்படி, ஆந்திராவை இரண்டாகப் பிரித்து, ஆந்திரா, தெலுங்கானா என இரு மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இந்த சட்டம் 2014 ஜூன் 2 முதல் அமலுக்கு வந்தது.

இந்த சட்டத்தின்படி, 10 ஆண்டுகளுக்கு மிகாமல், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு பொது தலைநகராக ஹைதராபாத் இருக்கும் என்றும், அந்த காலகட்டத்துக்குள் ஆந்திராவுக்கென தனி தலைநகர் உருவாக்கப்பட வேண்டும் என்றும், 10 ஆண்டுகளுக்கு பின், தெலுங்கானாவுக்கு மட்டுமே தலைநகராக ஹைதராபாத் விளங்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தின்படி, 10 ஆண்டுகால அவகாசம் கடந்த ஜுன் 2ஆம் திகதியுடன் முடிந்து விட்டது.

இனி வரும் காலங்களில், தெலுங்கானாவுக்கு மட்டுமே தலைநகராக ஹைதராபாத் இருக்கும். எனினும், ஆந்திரா – தெலுங்கானா இடையே சொத்துப் பகிர்வு போன்ற பல பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.

ஆந்திராவில், 2014 – 2019 வரை ஆட்சியில் இருந்த தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, அமராவதியை தலைநகராக்க முயற்சி எடுத்தாலும், அவருக்கு பின், 2019 – 2024 மே வரை ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, மூன்று தலைநகரங்கள் என்ற திட்டத்தை அறிவித்தார்.

என்றாலும், ஆந்திராவுக்கான தலைநகர் தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் இருந்துவந்தன. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதன் பின் மீண்டும் அமராவதியை தலைநகராக அறிவித்தது.

அத்துடன், தெலுங்கானா முதல்வருடன் இரு மாநிலங்களுக்கான இணக்கப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்களையும் ஆரம்பித்துள்ளது.