ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கட்சியின் அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை நாடாளுமன்றக் குழுக் கூட்டம் உள்ளிட்ட கூட்டங்களுக்கு இணைத்துக் கொள்ளாமல் இருப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமை மீதான விமர்சனங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், கட்சியின் நல்லிணக்கப் பணிகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எனவும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை மறைமுகமாகத் தாக்கிப் பேசியிருந்தார்.
தன்னை நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கவிடாது எதிர்க்கட்சிகள் தடுப்பதற்கு முயற்சிப்பதாக பொன்சேகா குற்றம் சுமத்தியிருந்தார்.
இதன்பின்னர் இந்தவிடயம் பேசுபொருளாக மாறியதையடுத்து எதிர்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல இது குறித்து பதிலளித்திருந்தார்.
கட்சித் தலைவர் பேசவேண்டாம் என்று ஒருபோதும் கூறவில்லையென தெரிவித்த அவர் கட்சிக்கு எதிராக வழக்குத் தொடுத்தவர் என்ற வகையில் தமக்கு நேரம் ஒதுக்குவது பொருத்தமற்றது என்பதை உணர்ந்தே பெரிதாக நேரம் ஒதுக்க அனுமதிக்கவில்லை என்றார்.
சரத் பொன்சேகாவை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்குவது தொாடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.