யூரோ கிண்ணத்தை நான்காவது தடவையாக ஸ்பெய்ன் வென்றது

0
32
Article Top Ad

பேர்லின் ஒலிம்பியா விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 2 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட ஸ்பெய்ன் நான்காவது தடவையாக ஐரோப்பிய சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

ஐரோப்பிய சம்பியன்ஷிப்பில் இதற்கு முன்னர் 1964, 2008, 2012 ஆகிய வருடங்களில் ஸ்பெய்ன் சம்பியனாகியிருந்தது.

இறுதிப் போட்டியில் போடப்பட்ட 3 கோல்களில் கடைசி இரண்டு கோல்களை மாற்று வீரர்கள் போட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த வருட யூரோ கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஏழு போட்டிகளிலும் வெற்றியீட்டிய ஸ்பெய்ன் தோல்வி அடையாத அணியாக சம்பியன் ஆனது.

மேலும் சகல போட்டிகளிலும் முழு ஆட்டநேரத்தின்போது ஸ்பெய்ன் வெற்றியீட்டியது ஐரோப்பிய சம்பியன்ஷிப்பில் ஒரு சாதனையாகும்.

பீபா உலகக் கிண்ணத்தில் சம்பியனான ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, 2018இல் இரண்டாம் இடத்தைப் பெற்ற குரோஏஷியா ஆகியவற்றை வெற்றிகொண்டே ஐரோப்பிய சம்பியன் பட்டத்தை ஸ்பெய்ன் சுவீகரித்தது.

குழுநிலையில் குரோஏஷியாவை 3 – 0 எனவும், இத்தாலியை 1 – 0 எனவும், அல்பேனியாவை 1 – 0 எனவும், 16 அணிகளுக்கான இரண்டாம் சுற்றில் ஜோர்ஜியாவை 4 – 1 எனவும் கால் இறுதியில் ஜேர்மனியை 2 – 1 எனவும் அரை இறுதியில் பிரான்ஸை 2 – 1 எனவும் கடைசியில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 2 – 1 எனவும் ஸ்பெய்ன் வெற்றிகொண்டிருந்தது.

இங்கிலாந்துக்கும் ஸ்பெய்னுக்கும் இடையிலான இறுதிப் போட்டி மிகவும் இறுக்கமாக அமைந்தது.

போட்டியின் முதலாவது பகுதியில் இரண்டு அணிகளும் வேகம், விவேகம், சிறந்த புரிந்துணர்வு ஆகியவற்றுடன் விளையாடியபோதிலும் முதல் 45 நிமிடங்களில் எந்த அணியும் கோல் போடவில்லை.

எனினும் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்து 2ஆவது நிமிடத்தில் (போட்டியில் 47ஆவது நிமிடம்) 17 வயதான இளம் வீரர் லெமின் யமால் பரிமாறிய பந்தை நிக்கோ வில்லியம்ஸ் கோலாக்கி ஸ்பெய்னை 1 – 0 என முன்னிலையில் இட்டார்.

வில்லியம் தனது 22ஆவது பிறந்த தினத்தை கடந்த வெள்ளிக்கிழமையும் லெமின் யமால் தனது 17ஆவது பிறந்த தினத்தை சனிக்கிழமையும் கொண்டாடினர். அவர்கள் இருவரும் சிறந்த நண்பர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு நிமிடங்கள் கழித்து ஸ்பெய்ன் வீரர் ஒல்மோ இரண்டாவது கோலைப் போட எடுத்த முயற்சி மயிரிழையில் தவறியது.

அதன் பின்னர் கோல் நிலையை சமப்படுத்த இங்கிலாந்து கடுமையாக முயற்சித்தது.

போட்டியின் 73ஆவது நிமிடத்தில் சாக்கா, பெலிங்ஹாம் ஆகியோரிடையே பரிமாறப்பட்ட பந்தை இறுதியாகப் பெற்றுக்கொண்ட கோல் (Cole) பாமர் மிக இலாவகமாக கோலினுள் புகுத்தி கோல் நிலையை 1 – 1 என சமப்படுத்தினார்.

கோல் பாமர் 72ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக களம் புகுந்த அடுத்த நிமிடத்திலேயே கோல் போட்டமை விசேட அம்சமாகும்.

தொடர்ந்து இரண்டு அணிகளும் வெற்றிகோலை போடுவதற்கு கடுமையாக முயற்சித்தன.

போட்டியின் 87ஆவது நிமிடத்தில் ஸ்பெய்ன் அணியின் மற்றொரு மாற்றுவீரரான மிக்கேல் ஒயாஸ்பாபல் மிகவும் அலாதியான கோல் ஒன்றைப் போட்டு தனது அணியை 2 – 1 என முன்னிலையில் இட்டார். அதுவே ஸ்பெய்னின் வெற்றிகோலாக அமைந்தது.

இந்த சுற்றுப் போட்டியில் அதிசிறந்த வீரர்களாகத் தெரிவுசெய்யப்பட்ட லெமின் யமால், டெனி ஒல்மோ ஆகிய இருவரும் தங்கப் பந்து விருதை பகிர்ந்துகொண்டனர். ஐரோப்பியன் சம்பியன்ஷிப்பில் மிக குறைந்த வயதில் விளையாடி தங்கப் பந்தை வென்ற வீரர் என்ற பெருமையை லெமின் யமால் பெற்றுக்கொண்டார்.