இலங்கையில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று இன்று வெள்ளிக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தெற்காசியாவின் முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தில் உள்ள உள்ள இலங்கைத் தீவில் கடந்த 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட வரலாறுகாணாத பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்டுவரும் சீர்திருத்தங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு தேர்தலாக இது அமைய உள்ளது.
17 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி
தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஆகஸ்ட் 14ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிட உள்ளார். அதற்கான கட்டுப்பணத்தையும் அவர் இன்று காலை செலுத்தியுள்ளார்.
இம்முறை இலங்கையில் 22 மில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 17 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக கிளர்ந்த மக்கள் எழுச்சியால் அவர் தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்
சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்துவது அவசியம்
அதனால் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 75 வயதான ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக பதவியேற்றிருந்தார் என்பதுடன், நாட்டில் ஏற்பட்டிருந்த கடுமையான பொருளாதார நெருக்கடியையும் ஓரளவு சமநிலைக்கு கொண்டுவந்துள்ளார்.
இந்த நிலையில் கொழும்பைத் தளமாகக் கொண்டு செயல்படும் மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் பவானி பொன்சேகா,
“இலங்கைக்கு இது ஒரு முக்கியமான நேரம். தேர்தல் ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியமானது. ஆனால் இப்போது தேர்தல் ஆணைக்குழு அவர்கள் செய்ய வேண்டியதைச் செய்ய அனுமதிக்க வேண்டும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவது அவசியம்.” எனக் கூறியுள்ளார்.
2.9 பில்லியன் டொலர் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடன் திட்டத்தின் மூலம், ரணில் விக்ரமசிங்க சிதைந்து போன பொருளாதாரத்தை மீண்டும் ஓரளவு ஸ்திர நிலைக்கு கொண்டுவந்துள்ளார்.
2024 இல் 3% வளர்ச்சியை அது காட்டும்
2022 செப்டம்பரில் 70% ஆக இருந்த பணவீக்கத்தை கடந்த ஜூன் மாதத்தில் 1.7% ஆகக் குறைக்கும் அளவு காத்திரமான தீர்மானங்களை ரணில் விக்ரமசிங்க எடுத்திருந்தார். அத்துடன், ரூபாயை வலுப்படுத்தி, சிதைந்திருந்த அந்நியச் செலாவணி இருப்புக்களையும் மீண்டும் கட்டியெழுப்பினார்.
இலங்கையின் பொருளாதாரம் கடந்த ஆண்டு 2.3% வீதமாகவும் நெருக்கடியின் உச்சத்தில் 7.3% வீதமாகவும் வீழ்ச்சிக்கண்டிருந்தது. ஆனால், 2024 இல் 3% வளர்ச்சியை அது காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பான், சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட இருதரப்பு கடன் வழங்குநர்கள் கடந்த மாதம் 10 பில்லியன் டொலர் கடன் மறுசீரமைப்பில் கைச்சாத்திட்டனர்.இதன்மூலம் நான்கு ஆண்டுகளுக்கு கடன் மற்றும் அதற்கான வட்டிவீதங்களை திருப்பிச் செலுத்துவதை ஒத்திக்க உதவியுள்ளதுடன், இலங்கையின் அந்நிய கையிருப்பு தற்போது 5 பில்லியன் டொலரை கடந்துள்ளது.
இந்த அதிருப்தியைத் தட்டிக் கேட்பார்கள்
ஆனால் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும் மூன்றாவது சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பாய்வுக்கு முன்னதாக 12.5 பில்லியன் டொலர் கடனை மறுசீரமைப்பது தொடர்பான பத்திரப்பதிவுதாரர்களுடன் ஒரு பூர்வாங்க ஒப்பந்தத்தை இலங்கை இன்னும் முடிக்க வேண்டியுள்ளது.
IMF திட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட அதிக வரிகள், நீடித்த பணவீக்கம் மற்றும் நெருக்கடியால் ஏற்பட்ட தேக்கமான சந்தை ஆகியவை நாட்டின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியை வறுமையில் ஆழ்த்தியுள்ளது மற்றும் ஆயிரக்கணக்கானோரை இடம்பெயரவும் வழிவகுத்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிட அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்களில் மக்களின் இந்த அதிருப்தியைத் தட்டிக் கேட்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீர்திருத்தங்களை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்
இதேவேளை, சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திஸாநாயக்க இருவரும் இலங்கையர்களின் வாழ்க்கைச் செலவு அழுத்தங்களைக் குறைப்பதற்கும் நாட்டின் கடனைத் திருப்பிச் செலுத்தும் சுமையைக் குறைப்பதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை மறுசீரமைக்கப் போவதாகப் பகிரங்கமாகக் கூறியுள்ளனர்.
இலங்கையின் மீட்சி இன்னும் மிகவும் பலவீனமாக உள்ளது மற்றும் சீர்திருத்தங்களை மாற்றியமைக்கும் முயற்சிகள் ஒரு புதிய நெருக்கடியைத் ஏற்படுத்தும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
என்றாலும் அமையும் எந்தவொரு புதிய அரசாங்கமும் பொருளாதாரத்தை நேர்மறையான பாதையில் கொண்டு செல்வதற்கும் சீர்திருத்தங்கள் முன்னோக்கி கொண்டு செல்லவும் செல்லப்படுவதை உறுதி செய்யவும் வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.