முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் உயர் பீட கூட்டத்தில் வெறும் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களே கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்சவின் மிகவும் நெருங்கிய சகாக்களாக இருந்த பலரும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நேற்று இரவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மொட்டுக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சந்தித்துப் பேசி தமது ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நேற்றைய கூட்டத்தில் முக்கிய பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டதாகவும், அதில் 16 பேரில் 11 பேர் எதிராக வாக்களித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர்களாக இருக்கும் பிரசன்ன ரணதுங்க, பந்துல குணவர்தன, எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் ஜனக பண்டார தென்னகோன் ஊள்ளிட்டவர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பீட உறுப்பினர் அல்லாத மஹர பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரின் மகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், இந்தக் கூட்டத்தின் போது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட தம்மிக்க பெரேராவின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
இந்நிலையில், கட்சி எடுக்கும் தீர்மானமே இறுதியானது எனவும், அதனை அனைத்து உறுப்பினர்களும் கடைப்பிடிப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதுவொருபுறம் இருக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவிற்கு எதிராக அமைச்சர் பந்துல குணவர்தன பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்ந விடயமும் தற்போது கொழும்பு அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.
மிகவும் பலம்பொருந்திய கூட்டணியாக இருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது பிளவுப்பட்டுள்ளது. அதிலிருந்த முக்கிய உறுப்பினர்கள் தற்போது தனித்தனியாக செயற்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தனித்தனியாக செயற்பட்டு வரும் நிலையில், தற்போது அந்த கட்சியின் மிகவும் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தவர்களும் ரணில் பக்கம் சென்றுள்ளனர்.
எவ்வாறாயினும, அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்த நாமல் ராஜபக்ச, பொதுஜன பெரமுன கட்சிக்குள் பிளவுகளை ஏற்பட்டுத்த ஜனாதிபதி ரணில் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியிருந்தார்.
இதனை ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கப்போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ள நிலையில், ரணிலின் தந்திரம் வெற்றிபெற்றுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தனது தந்திர காய்நகர்த்தலினால் மொட்டுக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் தன்பக்கம் வளைத்துப்போட்டுள்ளதாகவும் அரசியல் ஆய்வார்கள் குறிப்பிட்டுள்ளனர்