தமிழர்களுக்கு சாதகமான ஜனாதிபதியை உருவாக்க முடியும்: காலம் உள்ளது – அஜித் தோவல் ஆலோசனை

0
16
Article Top Ad

வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டுமென தீர்மானிக்க இன்னமும் காலம் இருப்பதாக இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.

இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்? ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்தன, பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, அனுரகுமார திசாயாக்க, நாமல் ராஜபக்ச மற்றும் வடக்கு, கிழக்கு, மலையக தமிழ் அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடலை நடத்திச் சென்றுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் இந்தப் பயணம் இடம்பெற்றுள்ளமையால் சர்வதேச ரீதியில் இது மிகவும் அவதானம் செலுத்தும் பயணமாக அமைந்துள்ளது.

வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளுடன் அஜித் தோவல் நடத்திய சந்திப்பில், தமிழ் கட்சிகள் பிரதான வேட்பாளர்களில் ஒருவரை ஆதரிப்பது சிறந்ததாக இருக்குமென தமது நிலைப்பாட்டை தெரியப்படுத்தியுள்ளார்.

இன்னமும் காலம் இருப்பதால் இதுகுறித்து அனைத்துக் கட்சிகளும் ஆலோசனை நடத்தி தீர்மானமொன்றை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். தேர்தலை புறக்கணிக்குமாறு கோரியுள்ள அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கு குறித்த சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தெற்கில் எந்தவொரு வேட்பாளரினதும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்தும் முன்மொழிவுகள் இல்லை. அதனை செய்ய அவர்கள் தயாராக இருந்தால் எமது கட்சி அவரை ஆதரிக்க தயாராக இருப்பதாக பதிலளித்துள்ளார்.

”தமிழ் மக்களிடம் 8 வீதமான வாக்குகள் உள்ளன. பிரதான வேட்பாளர்களிடையே வெற்றி தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் காரணமாக இந்த வாக்கு வீதம் தீர்மானமிக்கதாக அமையும். வெற்றி வேட்பாளரை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் வாக்குகள் மாறலாம்.

அனைவரும் கலந்துரையாடி ஒரு பொதுத் தீர்மானத்தை எடுக்க வேண்டும். வாக்குகளை சிதறடிக்காலம் ஒன்றிணைந்து செயல்பட்டால் அதிகளவான விடயங்களை வெற்றிக்கொள்ள முடியும்.” என அஜித் தோவல் இந்த சந்திப்பில் தமிழ் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

அஜித் தோவல் இவ்வாறு வலியுறுத்தியுள்ள போதிலும், தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்திய பிரசாரங்கள் வடக்கில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், தமிழரசுக் கட்சியின் பல மாவட்ட கிளைகளும் பொது வேட்பாளரை ஆதரிக்கும் முடிவை அறிவித்து வருகின்றன.

சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்தத் தேர்தல் இந்தியாவுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இருப்பதால் தமக்குச் சாதகமான ஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

அதன் காரணமாக பிரதான வேட்பாளர்களாக உள்ள ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க ஆகிய மூன்று பேருடனும் இந்தியா தனித் தனியாக கலந்துரையாடியுள்ளது.

இவர்கள் மூவரில் எவர் வெற்றிபெற்றாலும், அவருடன் இணைந்து பயணிப்பதற்கான அடித்தளத்தை இடும் நோக்கிலேயே அஜித் தோவல் அவசர பயணம் இலங்கை வந்துள்ளதாகவும் இது இந்தியாவின் முக்கோண வியூகமாக இருப்பதாகவும் இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிகிறது.