அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வு மிக அவசியம்: இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் வலியுறுத்து

0
12
Article Top Ad

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வருகின்ற புதிய அரசுடன் அதிகாரப் பரவலாக்கத்துடன் கூடிய அரசியல் தீர்வு தொடர்பாக இணைந்து செயற்பட எதிர்பார்க்கின்றோம் என்று இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்றூ பெட்ரிக் தெரிவித்தார்.

பிரிட்டன் பல வருடங்களாக அதிகாரப் பரவலாக்கத்துடன் கூடிய அரசியல் தீர்வு தொடர்பாக வலியுறுத்தி வருகின்றது என்றும் சுட்டிக்காட்டிய தூதுவர், பிரதான வேட்பாளர்கள் இந்த விடயம் தொடர்பில் தமது கொள்கைகளை வெளியிட்டுள்ளமையையும் எடுத்துக் கூறினார்.

பாத்பைன்டர் நிறுவனம் கொழும்பில் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்ற பிரிட்டன் தூதுவர் இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.

பிரிட்டனின் புதிய அரசின் வெளியுறவு அணுகுமுறை, தெற்காசியாவில் பிரிட்டனின் பிரசன்னம், பிரிட்டனுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு உறவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் அவர் கருத்துக்களை முன்வைத்தார்.

“பிரிட்டனுக்குத் தெற்காசிய பிராந்தியம் முக்கியத்துவமிக்கது. எதிர்காலம் இங்கு முக்கியத்துவமிக்கதாக உள்ளது. இலங்கையின் இரண்டாவது ஏற்றுமதி வர்த்தக பங்காளராக தொடர்ந்தும் இருந்து வருகின்றது’’ என்றும் தூதுவர் அன்றூ பெட்ரிக் கூறினார்.

”சுற்றுலாத்துறையிலும் இலங்கையில் இரண்டாவது இடத்தைப் பிரிட்டன் சுற்றுலாப் பயணிகள் பெறுகின்றனர்.

பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் வகிக்காததன் காரணமாக இலங்கை போன்ற நாடுகளுக்கு உதவும் நோக்கில், ‘‘அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்தக திட்டம்’’ என்ற செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது என்றும் தூதுவர் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் பிரிட்டன் தூதுவர் அன்றூ பெட்ரிக் மேலும் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு,

“இலங்கைக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான உறவு முக்கியத்துவம் மிக்கது. பிரிட்டன் தொடர்ந்தும் இலங்கையில் இருந்து அதிக இறக்குமதிகளைச் செய்கின்றது. இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் பிரிட்டன் இரண்டாவது இடத்தைப் பிடிக்கின்றது.

சுற்றுலாத்துறை இலங்கையில் மிக முக்கியமான ஆற்றலைக் கொண்டிருக்கின்றது. அதிலும் பிரிட்டன் இலங்கைக்குச் சிறந்த பங்களிப்பை வழங்குகின்றது.

சட்டவிரோத குடியேற்றவாசிகளை ருவாண்டாவுக்கு அனுப்புகின்ற திட்டம் புதிய பிரிட்டன் அரசால் நிறுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு நாட்டுக்கும் இது தொடர்பான பிரச்சினை சவாலாகவே இருக்கும். அதிகமான மக்கள் 20ஆயிரம் டொலர்களுக்கும் அதிக பணத்தை கடத்தல் காரர்களுக்கு கொடுத்து பிரிட்டனுக்கு வர முயற்சிக்கின்றனர்.

ஐ.நா. மனித உரிமை பேரவையின் புதிய அமர்வு நடைபெறவுள்ளது. இதில் இணை அனுசரணை நாடுகள் குழு எவ்வாறான முடிவை எடுத்துள்ளது என்று தற்போது கூற முடியாது. ஆனால், இப்போது இலங்கையில் தேர்தல் காலம் என்பதால் தேர்தலின் பின்னர் இந்த விடயத்தில் செயற்படுவதற்குப் புதிய கதவுகள் திறக்கப்படும் என்று நம்புகின்றோம்.” – என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை கொண்டு வரப்படுமா என்ற எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரிட்டன் தூதுவர், அதற்கு அமர்வு தொடங்கும் வரை காத்திருக்க வேண்டியது அவசியம் என்று பதிலளித்தார்.

இது இவ்வாறிருக்க அரசியல் தீர்வு தொடர்பில் வடக்கு, கிழக்கு மக்கள் மற்றும் தலைவர்கள் எவ்வாறான விடயங்களை உங்களிடம் தெரிவித்தார்கள் என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரிட்டன் தூதுவர்,

“இந்த விடயம் தொடர்பில் நான் மிகக் கவனமாகப் பேச வேண்டியிருக்கின்றது.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வருகின்ற புதிய அரசுடன் அதிகாரப் பரவலாக்கத்துடன் கூடிய அரசியல் தீர்வு தொடர்பாக இணைந்து செயற்பட எதிர்பார்க்கின்றோம்.

பிரிட்டன் பல வருடங்களாக அதிகாரப் பரவலாக்கத்துடன் கூடிய அரசியல் தீர்வு தொடர்பாக வலியுறுத்தி வருகின்றது. பிரதான வேட்பாளர்கள் இந்த விடயம் தொடர்பில் தமது கொள்கைகளை வெளியிட்டுள்ளனர்.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here