இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் 2024: இன்று தபால்மூல வாக்குப் பதிவு

0
31
Article Top Ad

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்குகளை பதிவுச் செய்யும் பணி இன்று (04) ஆரம்பமாகவுள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இது குறித்த அறிவித்தலை ஜூலை 26ஆம் திகதி தேர்தல்களை ஆணைக்குழு அறிவித்திருந்தது.

இதன்படி, ஓகஸ்ட் 14ஆம் திகதி மதியம் 12 மணி வரை கட்டுப்பணம் செலுத்தப்பட்டதுடன், பின்னர் தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் செயலகத்தின் வழிகாட்டுதலின்படி வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

அந்த வகையில், இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட போது 39 வேட்பாளர்கள் இருந்த நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் திடீர் மரணமடைந்ததையடுத்து, தற்போது அந்த எண்ணிக்கை 38 ஆகக் குறைந்துள்ளது.

இன்று ஆரம்பமாகவுள்ள தபால்மூல வாக்கு பதிவானது நாளை (05) மற்றும் நாளை மறுதினம் (06) ஆகிய மூன்று தினங்களுக்கு இடம்பெறவுள்ளது.

இதன்படி, நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் தமது கடமைகளை செய்து வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்றைய நாள் நிலவரப்படி, தபால் வாக்களிப்பு சீட்டு, வாக்களிக்க தகுதிப்பெற்றவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இம்முறை கொழும்பு மாவட்டத்தில் 27195, கம்பஹா மாவட்டத்தில் 52486, களுத்துறை மாவட்டத்தில் 37361, காலி மாவட்டத்தில் 41436, மாத்தறை மாவட்டத்தில் 30882 மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 22167 தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட ஏற்றுக்கொள்ளக்கூடிய தபால் வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 712319 ஆகும்.

தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவரும் தபால் வாக்களிப்பில் கலந்து கொண்டு வாக்களிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

தபால் வாக்குகளைப் பயன்படுத்த தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று நாட்களில் தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்களுக்கு செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய இரண்டு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அன்றைய தினங்களில் தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்துவதற்கு மாவட்டச் செயலகங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகளின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் 55,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.