ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்த நிலையில், வழமையான அரசியல் பேச்சுக்கள், கருத்து மோதல்கள், வாக்குறுதிகள், தேர்தல் பிரசார நிகழ்ச்சிகள், சேறுபூசல்கள் ஆகியவற்றுக்கிடையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மூன்று முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டமை முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க ஓகஸ்ட் 26ஆம் திகதி தனது விஞ்ஞாபனத்தை வெளியிட்டதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் தமது விஞ்ஞாபனங்களை 29ஆம் திகதி வெளியிட்டனர்.
அன்றிலிருந்து ஒவ்வொரு சிங்கள, தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளிலும் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடுகள் பற்றிய விரிவான செய்திகளை முன்பக்கத்திலும் நடுப்பக்கங்களிலும் புகைப்படங்களுடன் காணக்கூடியதாக இருந்தது.
நாம் ஆய்வுக்கு உட்படுத்திய சிங்களப் பத்திரிகைகளில், தேர்தல் விஞ்ஞாபனங்கள் பற்றிய செய்திகள், விளம்பரமாகவும், தேர்தல் விஞ்ஞாபனத்தின் உள்ளடக்கங்களை மேற்கோள் காட்டி, வெளியீட்டு விழாக்களின் போது, சம்பந்தப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் அல்லது கட்சியின் உயர்மட்ட அரசியல்வாதிகளின் கருத்துக்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியிடப்பட்டன.
இதற்கு உதாரணமாக அருண, தினமின, லங்காதீப போன்ற பத்திரிகைகளை கூறலாம். ஆனால் நாங்கள் ஆய்வு செய்த சிங்களப் பத்திரிகைகள் எதுவும் ஜனாதிபதி வேட்பாளர்களால் முன்வைக்கப்பட்ட விஞ்ஞாபனங்கள் தொடர்பான ஒப்பீட்டு அல்லது பகுப்பாய்வுக் கட்டுரைகளைப் பிரசுரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கள பத்திரிகைகள்
மேலும், உள்ளடக்கம் பற்றிய பகுப்பாய்வு அறிக்கையை வழங்காத ஏறக்குறைய அனைத்து சிங்கள பத்திரிகைகளும், பொருளாதார வளர்ச்சி தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய சுகாதாரம், கல்வி, வெளியுறவுக்கொள்கை போன்ற விடயங்கள் தொடர்பில் மாத்திரம் அதிகம் கவனம் செலுத்தியிருந்ததுடன், மேல்குறிப்பிட்ட சிங்கள மொழி பத்திரிகைகளில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பெருந்தோட்டப் தமிழ் மக்கள் மற்றும் விளிம்புநிலை சமூகங்களின் கோரிக்கை மற்றும் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பது தொடர்பில் தேர்தல் விஞ்ஞாபனங்களில் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது என்பது தொடர்பில் அறிக்கையிட மறந்துவிட்டன. அந்த மக்கள் இலங்கை சமூகத்தில் மட்டுமன்றி சிங்களப் பத்திரிகைகளின் பக்கங்களிலும் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.
மேலும், சிங்களப் பத்திரிகைகளில் காணப்படும் மேற்கூறிய சிறப்பியல்புகளை ஆங்கிலப் பத்திரிகைகளிலும் அதேவாறு அவதானிக்க கூடியதாக இருந்தது. ஓகஸ்ட் 27 மற்றும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி தினமின நாளிதழ் முறையே அநுர, ரணில் மற்றும் சஜித் ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கைகள் குறித்து விரிவான செய்திகளை வெளியிட்டிருந்த போதிலும், சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இவர்கள் மூவரும் முன்வைத்த யோசனைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சிங்களப் பத்திரிகைகளுடன் ஒப்பிடுகையில், ஆங்கிலப் பத்திரிகைகளில் வெறும் அறிக்கையிடலைத் தவிர வேறு ஏதோவொரு நோக்கத்திற்காகவோ அதிக ஒப்பீட்டு மற்றும் பகுப்பாய்வுக் கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டிருந்தமை கவனிக்கத்தக்கது. ஓகஸ்ட் 29ஆம் திகதி டெய்லி மிரர் மற்றும் செப்டம்பர் முதலாம் திகதி சண்டே டைம்ஸ் ஆகிய பத்திரிகைகளில் தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனத்தை விமர்சித்து அதற்கு எதிர்மறையான கட்சியைச் சுட்டிக்காட்டி பகுப்பாய்வுக் கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன.
அன்றைய நாளிதழின் முதல் பக்கத்தில் பிரதான கட்டுரையாக டெய்லி மிரர் நாளிதழில் பிரசுரிக்கப்பட்ட இக்கட்டுரையானது பொருளாதார விடயங்களில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டுவதையே முதன்மையாகக் கொண்டிருந்தது.
மேலும், தி சண்டே டைம்ஸ் நாளிதழின் நான்காவது பக்கத்தில் ஒரு நீண்ட கட்டுரை வெளியாகியிருந்ததுடன், சற்றே வசைப்பாங்கான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்த அந்தக் கட்டுரையில், ஒட்டுமொத்த தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையையும் கேலி செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.
ஆனால், வடக்கு – கிழக்கு மக்களின் மற்றும் மலையக பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கத் தேசிய மக்கள் சக்தி முன்வைத்த எந்தவொரு விடயத்தையும் எழுத்தாளர் கவனத்தில் கொள்ளவில்லை. மேலும், இரண்டு கட்டுரைகளின் நோக்கமும் தமது ஊடக நிறுவனம் ஆதரிக்கும் வேட்பாளரின் எதிரியைத் தாக்குவதே தவிர, வாசகரைத் தெளிவுப்படுத்தும் ஒரு ஆக்கபூர்வமான பகுப்பாய்வை மேற்கொண்டதாக அமையவில்லை.
செப்டெம்பர் 1ஆம் திகதி சிலோன் டுடே நாளிதழின் நான்காம் பக்கத்தில் ரணில், அநுர மற்றும் சஜித் ஆகியோரின் மூன்று தேர்தல் விஞ்ஞாபனங்களையும் 14 தெரிவு செய்யப்பட்ட உப தலைப்புகளின் கீழ் ஒப்பிட்டு, பகுப்பாய்வுக்கு உட்படுத்தி அறிக்கையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்குப் பெண்கள் மற்றும் பல்வேறு பாலினக் குழுக்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அக்கறை கொண்டிருந்தாலும், நாட்டின் பிரதான பிரச்சினையான வடக்கு – கிழக்கு மற்றும் மலையக தோட்ட மக்களின் கோரிக்கைகள் மற்றும் உரிமைகள் தொடர்பான விடயங்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தமை அவதானிக்கத்தக்கதாகும்.
புறக்கணிக்கப்பட்ட விடயங்கள்
மேலும், அந்த அறிக்கையில் விவாதத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விடயங்களில், அரசியலமைப்பு, சட்டம் மற்றும் அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி விவாதிக்கும் தலைப்புகள் காணப்பட்டன.
இந்த மூன்று முக்கிய வேட்பாளர்களும் தேசிய நல்லிணக்கம் தொடர்பான பிரச்சினையை முகம்கொடுக்கும் நோக்கில் அரசியலமைப்பு மாற்றத்தை முன்மொழிந்தனர். ஆனால் அந்தத் தலைப்பின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் வரை 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் முழுமையாக நடைமுறைபடுத்தப்படும் என்று கூறியதாக மாத்திரம் அறிக்கையிடப்பட்டிருந்தது.
மற்ற இருவரும் தாம் முன்வைத்த முன்மொழிவுகள் குறித்து அந்தத் தலைப்பின் கீழ் குறிப்பிடப்படவில்லை என்பது அவதானிக்கத்தக்கதாகும். இந்த மூன்று பிரதான வேட்பாளர்களும் சிறுபான்மை இனத்தவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் தத்தமது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு தீர்வுகளை முன்வைத்துள்ள நிலையில், சிலோன் டுடேயின் ஊடகவியலாளர்கள் தமது பத்திரிகையின் நோக்கத்தின் கீழ் அந்த விடயங்கள் தொடர்பில் பகுப்பாய்வு மேற்கொள்ளாமை தற்செயலாக நடைபெற்ற ஒரு செயலா அல்லது வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டதா? என்பது தொடர்பில் சந்தேகம் எழுகின்றது.
அடிப்படையில் தெற்கில் உள்ள பெரும்பான்மையான சிங்கள மக்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களை வாசித்து அது தொடர்பில் ஆராய்ந்து வாக்களித்து வேட்பாளரைத் தெரிவு செய்வதில்லை. அத்துடன் வடக்கு – கிழக்கு மக்களுக்கோ அல்லது மலையக பெருந்தோட்ட மக்களுக்கோ வாழும் உரிமை தொடர்பான பிரச்சினை இருப்பதை சிங்கள பௌத்த மக்களில் பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்வதில்லை.
எனவே, தெற்கு வாக்காளர்களைப் பொறுத்தவரை, தேர்தல் நேரத்தில் தேர்தல் விஞ்ஞாபனங்களானது ஒரு வானவேடிக்கை மாத்திரமே ஆகும், மாறாக அவர்களின் தேர்வைப் பாதிக்கும் ஒரு தீர்க்கமான காரணி அல்ல.
மேலும், மிதக்கும் வாக்குகளாகக் கருதப்படும் பெரும்பாலான மக்கள், தேர்தல் பிரசாரத்தின் முடிவில் வேட்பாளர்கள் காட்டும் சிறந்த வித்தையில் அல்லது தந்திரங்களின் அடிப்படையில் அல்லது இறுதியில் எழும் வெற்றி அலையின் அடிப்படையில் தங்கள் முடிவை எடுக்கிறார்கள், மாறாகத் தேர்தல் விஞ்ஞாபனங்களை படித்து அது தொடர்பாக அலசி ஆராய்ந்து தர்கரீதியான அடிப்படையில் அல்ல.
தென்னிலங்கை மக்களுக்காக அந்தக் கொள்கை அறிக்கைகளை ஆழமாக அலசுவதற்கு ஊடகவியலாளர்களும் அவ்வளவு கரிசனை செலுத்தாமையானது தானும் அந்தச் சமூகத்தின் ஒரு உற்பத்தியா (நபராக)க இருப்பதனால் என்பது கூட இருக்கலாம். ஆனால் சில ஆங்கில நாளிதழ்கள் வித்தியாசமான நடத்தையைக் காட்டியிருந்தன.
உதாரணமாக, ஓகஸ்ட் 27ஆம் திகதி டெய்லி மிரர் நாளிதழின் முதல் மற்றும் இரண்டாம் பக்கத்தில் தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனத்தில் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்குவது தொடர்பில் அநுர குமார திஸாநாயக்க தனது கட்சியின் கருத்தை முன்வைத்ததாக ஒரு செய்தி அறிக்கை காணப்பட்டது. நாம் செய்ய வேண்டியது தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த அழகான, கவர்ச்சியான கட்டுக்கதைகளைக் கூறிக்கொண்டு இருக்காமல், அதை நடைமுறை ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நடைமுறைப்படுத்துவதே என்றும் அவர் அங்குத் தெரிவித்திருந்தார்.
அதற்காகப் அவர்கள் புதிய அரசியலமைப்பை கொண்டு வரவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் தேசிய மக்கள் சக்தி வடக்கு – கிழக்கு மற்றும் மலையக பெருந்தோட்ட மக்களுக்காக முன்வைக்கப்பட்ட வேறு எந்த முன்மொழிவுகளையும் குறிப்பிடவில்லை, ஆனால் மேல் குறித்த கூற்றானது இந்த நாட்டில் நாம் கவனம் செலுத்த வேண்டிய ‘தேசிய பிரச்சினை’ காணப்படுகின்றது என்பதை சொல்லியும் சொல்லாமல் தொட்டுச்சென்றுள்ள விதம் குறித்ததாகும்.
ஓகஸ்ட் 30ஆம் திகதி டெய்லி மிரர் நாளிதழின் முதல் மற்றும் இரண்டாவது பக்கங்களில் ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரின் விஞ்ஞாபனங்கள் குறித்து இரு செய்திகள் வெளியாகியிருந்தன. ரணிலின் விஞ்ஞாபனம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு பெற்றுள்ள அதிகாரம் மீண்டும் மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் எனவும், நாடாளுமன்றத்தின் தீர்மானத்திற்கு உட்பட்டு மாகாண சபைகளுக்குக் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ரணில் விக்ரமசிங்கவை விடச் சற்று மேலே சென்று சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் வரை 13ஆவது சரத்து முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனக் கூறியிருந்த போதிலும் அது தொடர்பில் எந்தவொரு குறிப்பும் அந்த செய்திக்கட்டுரையில் குறிப்பிடப்படவில்லை.
வடக்கு – கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ரணிலுடன் ஒப்பிடும்போது சஜித் நேரடி தீர்வை முன்வைத்திருந்த போதிலும், டெய்லி மிரர் பத்திரிகையில் அது தொடர்பாக எந்தவொரு அறிக்கையிடலும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான காரணம் டெய்லி மிரர் பத்திரிகை நிறுவனம் ரணிலின் உறவினர் ஒருவரின் என்பதனாலா? அல்லது கொழும்பை மையமாகக் கொண்ட ஆங்கிலம் பேசும் இராஜதந்திரிகள், சிங்கள, தமிழ் அறிவுஜீவிகளிடமிருந்து சஜித்தின் முன்மொழிவை மறைத்து ரணிலின் முன்மொழிவை முன்னிலைப்படுத்தவா? என்ற சந்தேகம் எழுகின்றது.
ரணில், சஜித் மற்றும் அநுர ஆகிய மூன்று முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களின் நேர்மறையான, ஒப்பீட்டு பகுப்பாய்வுடன் கூடிய ஒரு செய்தி அறிக்கையை, செப்டெம்பர் முதலாம் திகதி, தி சண்டே டைம்ஸ், ஆறாவது பக்கத்தில் வெளியிட்டிருந்தது.
இங்கு மூன்று வேட்பாளர்களும் வடக்கு – கிழக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து முன்மொழிந்துள்ள விடயங்கள் தொடர்பில் தனித்தனியாக மற்றும் விரிவாக ஓரளவு பகுப்பாய்வு ரீதியாகவும் செய்தி அறிக்கையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த வாரத்தில் தி சண்டே டைம்ஸ் மட்டுமே இவ்வளவு நேர்மறையான விளக்கக் கட்டுரையைக் பிரசுரித்திருந்தமை அவதானிக்கத்தக்கது.
சிங்களப் பத்திரிகைகளால் மறைக்கப்பட்ட அல்லது புறக்கணிக்கப்பட்ட சில விடயங்கள் ஆங்கிலப் பத்திரிகைகளில் சிறப்பாக முன் கொண்டு வரப்பட்டிருந்தன. ஏனெனில், ஆங்கில வாசகர்கள் மத்தியில் தமிழ் பேசும் வாசகர்கள் இருப்பதுடன் தேர்தல் அலைகளுக்கு உட்கொள்ள முடியாத உண்மையைப் புரிந்துகொண்டு தீர்மானம் மேற்கொள்ளும் நபர்கள் குழு இருப்பதைக் குறிக்கும் வகையில் அவர்களின் பகுப்பாய்வுச் சிந்தனை முறைக்கு ஏற்ப அறிக்கைகள் வழங்கப்பட வேண்டும் என்று கருதுவதாகக் கூட இருக்கலாம்.
தமிழ் பத்திரிகைகள்
தமிழ்ப் பத்திரிகைகளின் நடத்தை தென்னிலங்கையின் பிரதான சிங்கள வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழ்ப் பத்திரிகைகள் சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளைப் போல் அல்லாமல் மிகுந்த ஆர்வத்துடனும் கவனத்துடனும் செய்திகளை வெளியிட்டிருந்தன. அந்த அறிக்கையின் சிறப்பு என்னவென்றால், செய்திகள் வெறும் அறிக்கையிடலைத் தாண்டி மேலும் பகுப்பாய்வு வடிவம் கொண்டுள்ளமை ஆகும்.
தென்னிலங்கை அரசியலில் தங்களின் கோரிக்கைகள் மற்றும் உரிமைகளுக்கான பதில்கள் குறித்து சிங்கள வாக்காளரை விட தமிழ் வாக்காளர் அதிக விழிப்புணர்வுடன் இருக்கிறார் என்பதை இந்தப் பத்திரிகைகளின் மூலம் புரிந்துகொள்ள கூடியதாக உள்ளது. ஏனென்றால், சிங்கள மக்களைப் போல் அல்லாமல், எரிபொருள், எரிவாயு, மின்சாரம் போன்றவற்றுக்கு அப்பாற்பட்ட பல உரிமைகளை வென்றெடுப்பதற்கு அவர்கள் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது.
எனவே, தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்து வெளியாகும் அறிக்கைகள் சில சமயங்களில் தமிழ் மக்களிடையே நல்ல எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது, சில சமயங்களில் குறித்த தேர்தல் விஞ்ஞாபனங்கள் அவர்களின் ஏமாற்றத்தைப் பிரதிபலிக்கின்றன.
தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்குச் சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் எவரும் தமிழ் மக்கள் எதிர்பார்த்தது போன்று சாதகமான தீர்வுகளை வழங்காத சூழ்நிலையில், தமிழ் நாளிதழ்களில் வெளியான செய்திகள் இவ்வாறு ஒப்புதல் மற்றும் மறுப்பு கலந்த செய்தி கட்டுரைகளாக அமைந்துள்ளது. ஏறக்குறைய அனைத்து தமிழ் நாளிதழ்களும் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு குறித்த விளம்பரங்களையும் பகுப்பாய்வு கட்டுரைகளையும் வெளியிட்டிருந்தன.
இங்கே நாம் குறிப்பாகப் பகுப்பாய்வு கட்டுரைகளின் மீதே கவனம் செலுத்துகிறோம். ஓகஸ்ட் 27ஆம் திகதி அன்று காலைமுரசு நாளிதழின் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தி பின்வருமாறு அமைந்திருந்தது. “அதிகாரப் பகிர்வுபற்றிய அறிவிப்பில் அநுரவும் சஜித்தும் ஏட்டிக்குப் போட்டி” அவர்கள் உண்மையில் அதிகாரப் பகிர்வுக்காகப் போட்டியிடுகிறார்களா? என்பது தொடர்பான கேள்வி அந்தத் தலைப்பில் இலைமறைகாயாக மறைந்துள்ளது.
அந்த அறிக்கையில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்கவின் நிலைப்பாடும், திருகோணமலையில் நடைபெற்ற கூட்டமொன்றில் சஜித் பிரேமதாசவின் அதிகாரப் பகிர்வு தொடர்பான கருத்துகளும் மிக விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆதரவான பிரேரணைகள் அனைத்தும் முறையே குறிப்பிடப்பட்டிருந்தது. சிங்கள அல்லது ஆங்கில நாளிதழில் கவனிக்கப்படாத புறக்கணிக்கப்பட்ட விடயம் தொடர்பில் மிக விரிவான முறையில் முன்மொழிவுகள் பற்றிய முழுமையான அறிவைப் பெறக்கூடிய வகையில் குறித்த ஆய்வுக்கட்டுரை வடிவமைக்கப்பட்டிருந்தது.
அத்துடன், அநுரகுமார திஸாநாயக்கவின் கொள்கைகளில் தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் குறித்தும் மேல் குறிப்பிட்ட பத்திரிகையின் 8ஆம் பக்கத்தில் விமர்சனக் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
“தென்னிலங்கை பௌத்த – சிங்களத் தீவிரப் போக்காளர்களுடனும் முரண்படாமல் – தமிழர் தரப்புடனும் முட்டுப்படாமல்- இரண்டுக்கும் நடுவில் தமது உத்தேசத் திட்டத்தைக் கட்டவிழ்த்திருக்கின்றார் அவர்.” ‘தமிழ் மக்களிடம் சரணடைந்தார், தமிழர்கள் கேட்டதையெல்லாம் கொடுத்தார், தமிழீழத்திற்கு நாட்டைக் காட்டிக்கொடுத்தார், சிங்களவர்களைக் காட்டிக்கொடுத்தார்’ என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகாமல் இருப்பதற்காக, சிங்கள மக்களின் கோபத்திற்குக் கூட ஆளாகாமல் பார்த்துக் கொண்டார் அநுர.
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அருகில், ஆனால் தமிழ் மக்கள் அதிருப்தி அடையாத வகையில், இரு தரப்பையும் சமாளித்து கவனமாகத் தனது முன்மொழிவை முன்வைத்துள்ளார்.”
மேலும், ஓகஸ்ட் 28ஆம் திகதி காலைமுரசு நாளிதழின் 8ஆவது பக்கத்தில் தேசிய மக்கள் சக்தியின் முரண்பாடான கொள்கைகள் குறித்து தமிழ்ச் சமூகம் அதிருப்தி தெரிவித்த மற்றொரு செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் இன நல்லிணக்கம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி சில முற்போக்கான யோசனைகளை முன்வைத்தபோதிலும், 26 ஆண்டுகால உள்நாட்டுப் போர்பற்றிய குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை குற்றச்சாட்டுகள் தொடர்பில் எவரையும் தண்டிக்க தமது அரசு முயசிக்காது என அநுர குமார திசாநாயக்க சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளமை தொடர்பில் கடுமையான அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் குறித்த கட்டுரை வடிவமைக்கப்பட்டிருந்தது.
அந்தக் கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“இடதுசாரிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் இந்தப் போலி இடதுசாரிகள் தாங்களும் பௌத்த – சிங்கள பேரினவாதத்துக்குள் புதையுண்டு கிடக்கும் இனவெறிப் போக்காளர்கள் தாம் என்பதை இந்தக் கருத்தியல் மூலம் வெளிப்படுத்தி, நிரூபித்து நிற்கின்றனர்.
பௌத்த – சிங்கள பேரினவாதத்தின் இருண்ட மனக்குகைக்குள் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அந்த பேரினம் புரிந்த யுத்தக் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள், மனித உரிமை மீறல்கள் பற்றிய உண்மைத் தன்மையின் பேரச்சம் ஆழப் புதைந்து கிடக்கின்றது என்பதை அநுரவின் இந்த கருத்து நிலைப்பாடு உறுதியாக வெளிப்படுத்தி நிற்பது கண்கூடு.”
அத்துடன், ஓகஸ்ட் 27ஆம் திகதி ஈழநாடு மற்றும் தமிழ் மிரர் நாளிதழ்கள் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து சில நேர்மறையான செய்திகளை வெளியிட்டிருந்தன. ஆகஸ்ட் 29ஆம் திகதிக்குப் பின்னர், ரணில், அநுர, சஜித் ஆகிய மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஒப்பிட்டுப் பகுப்பாய்வுக் கட்டுரையொன்று தமிழ்ப் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது.
குறிப்பாகச் சஜித் பிரேமதாச மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்களில், இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அவர்கள் முன்வைத்த முன்மொழிவுகள் குறித்து ஓரளவு நம்பிக்கையுடன் கூடிய கணிசமான செய்திகள் தமிழ் நாளிதழ்களில் வெளியாகியிருந்த நிலையில், கடும் அதிருப்தியை வெளிப்படுத்தும் செய்திகளும் வெளியாகி இருந்ததுடன் ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தும் செய்தி கட்டுரைகளைக் காணக்கூடியதாக இருந்தது.
சஜித் பிரேமதாசவின் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினை தொடர்பாக முன்வைக்கப்பட்ட சகல பிரேரணைகளையும் மேற்கோள் காட்டி ஆகஸ்ட் 29ஆம் திகதி மாலைமுரசு பத்திரிகையும், ஓகஸ்ட் 30ஆம் திகதி புதியசுதந்திரன் பத்திரிகையின் முதல் பக்கமும், ஈழநாடு பத்திரிகையின் முதல் பக்கத்திலும் விரிவான செய்திகளைப் பிரசுரித்து இருந்தன.
அத்துடன் ஆகஸ்ட் 30ஆம் திகதி தினகரன் மற்றும் காலைமுரசு பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைப் பிரகடனங்களின் உள்ளடக்கங்களும் இனப்பிரச்சினை தொடர்பான தீர்வுகளும் குறிப்பிடப்பட்டிருந்தன.
ஓகஸ்ட் 30ஆம் திகதி காலைக்கதிர் பக்கம் 4 மற்றும் காலைமுரசு பக்கம் 9 இல் ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் உள்ளடக்கம் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது. ‘ரணிலை போன்ற கொள்கையற்ற சந்தர்ப்பவாதி வேறு யாரும் இல்லை’ என்பதுதான் காலைகதிர் பத்திரிகையின் வெளியிடப்பட்டுள்ள தலைப்பாகும்.
அரச தலைவராகப் பதவியேற்கும் போதே இனப்பிரச்சினைக்கு முதன்மை இடம் கொடுப்பதாக முதலில் குறிப்பிட்ட போதிலும் தற்போது அவரின் அரசியல் திசை முற்றாக மாறியுள்ளதாகக் குறித்த செய்தி குறிப்பிடுகின்றது.
மூன்று பிரதான வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களையும் ஒப்பிட்டுப் பார்த்த காலைமுரசு நாளிதழ், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் சில முற்போக்கான அம்சங்கள் உள்ளடங்கியுள்ளதாகக் குறிப்பிடுகின்றது.
ஆனால், ‘ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மைக்காலத்தில் தாம் பாடிய பழைய பல்லவியையே இந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் எதிரொலித்திருக்கின்றார்.’ என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ரணில் விக்ரமசிங்க இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் உண்மையான விருப்பம் உள்ளதாக வெளிப்படுத்தியதாகவும், ஆனால் தற்போது அந்த ஆசையிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த செய்தி கட்டுரை பின்வருமாறு முடிவுரை பெற்றது. “சஜித்தும் அநுரவும் இப்படி சற்று தமிழர் சார்பு கருத்துக்களை உள்வாங்கும் நிலையில் பயணிக்க, ரணில் மட்டும் பௌத்த – சிங்களத் தீவிரவாதப் போக்குடையோரோடு சேர்ந்து நழுவப் பார்க்கின்றார்.”
தென்னிலங்கை சிங்கள மக்கள் எரிபொருள், எரிவாயு, மின்சாரம் போன்ற வசதிகளுடன் கூடிய சுகபோக வாழ்வை விரும்புகின்றார்கள் ஆனால் வடக்கு – கிழக்கு மற்றும் மலையக பெருந்தோட்ட மக்கள் தமது குறைந்தபட்ச மனித உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியாமல் இன்னமும் திண்டாடி வருகின்றனர்.
தேர்தல் விஞ்ஞாபனங்கள் பற்றிய செய்திகளை வெளியிட்ட வடக்கு மற்றும் தெற்கின் மும்மொழிகளின் செய்தித்தாள்கள், நாட்டின் இரண்டு முக்கிய இனங்களுக்கு இடையில் காணப்படும் பெரும் பிளவைக் வெளிக்கொணருகின்றன.
கட்டுரை – சுபாஷினி சதுரிகா
மொழிபெயர்ப்பு – ரிக்சா இன்பாஸ்