ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு

0
33
Article Top Ad

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் மீது, மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நிலையில், குடியரசுக் கட்சி சார்பாக வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேற்று, புளோரிடா மாநிலம், மேற்கு பாம் பீச் பகுதியில் அமைந்துள்ள டிரம்ப் சர்வதேச கோல்ப் கிளப்புக்கு சென்று, கோல்ப் விளையாடி கொண்டு இருந்துள்ளார்.

இதன்போது அவரை இலக்குவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. எனினும், இதனால் அவருக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தையடுத்து சந்தேக நபரான 53 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரிடமிருந்து ஏ.கே. 47 துப்பாக்கி, ஒரு கோ ப்ரோ கமெரா உள்ளிட்ட சில பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாம் பீச் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீதான கொலை முயற்சி என சந்தேகிக்கப்படும் இந்த துப்பாக்கி சூடு குறித்து மத்திய சட்ட அமலாக்கப் பிரிவினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் ட்ரம்ப் மற்றும் அவரைச் சூழவுள்ளனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சட்ட அமலாக்கப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஏற்கனவே, கடந்த ஜுலை மாதம் பென்சில்வேனியாவின் பட்லர் பகுதியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பரப்புரையில் பங்கேற்றிருந்த ட்ரம்ப் மீது, துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதன்போது துப்பாக்கி குண்டு அவருடைய வலது காதின் மேல் பகுதியை துளைத்து சென்றதோடு, இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அங்கு ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையிலேயே மீண்டும் ட்ரம்ப்பை இலக்குவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக கேள்வியை எழுப்புவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.