“நான் அனுர குமாருடன் இருக்கின்றேன்” வவுனியாவில் தமிழ் தாய்மார்களுக்கு அச்சுறுத்தல்

0
13
Article Top Ad

யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நீதி கோரி வவுனியாவில் தாய்மார்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இலங்கையின் புதிய ஜனாதிபதியின் ஆதரவாளர் எனக் கூறிக்கொள்ளும் ஒருவரால் அச்சுறுத்தப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்படுதலில் மிகவும் பாதிக்கப்பட்ட முதல் மூன்று நாடுகளான எல் சல்வடோர், குவாத்தமாலா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் ஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினத்தை கொண்டாடுகையில், காணாமல் ஆக்கப்பட்டுள்ள சிறுவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு இத்தினத்தை கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி வவுனியா பஸ் நிலையத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வந்த ஒரு நபர், “நான் அனுர குமாருடன் இருக்கிறேன்” என அச்சுறுத்தி போராட்டத்தை நிறுத்துமாறு கோரியுள்ளார்.

“அப்படியானால் எங்களுக்கு நியாயத்தை பெற்றுத்தாரும்” என தாய்மார் ஒருமித்த குரலில் முழக்கமிட்டனர்.

1959 ஆம் ஆண்டு சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான சாசனம் மற்றும் 30 வருடங்களுக்கு பின்னர் சிறுவர் உரிமைகளுக்கான சாசனம் ஆகிய இரண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நவம்பர் 20ஆம் திகதி உலக சிறுவர் தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டது.

போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த ஒருவர், புலம்பெயர் தேசத்தவர்களிடமும், விடுதலைப் புலிகளிடமும் பணம் பெற்றதாகக் குற்றம் சுமத்தி, அரசாங்கம் மாறிவிட்டது எனக் கூறி, போராட்டத்தை நிறுத்துமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கப் பிரதிநிதிகளை அச்சுறுத்தியுள்ளார்.

‘ரௌடித் தனம், சண்டித்தனம் காட்ட முடியாது’ எனக் கூறிய, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவி சிவானந்தன் ஜெனிற்றா, ‘இது எங்கள் நாடு, எங்கள் நிலம், இதற்கு எங்களுக்கு உரிமை உண்டு. எங்களின் நீதிக்காக நாங்கள் போராடுகிறோம்’ எனக் கூறியபோது, தான் அனுரகுமாருடன் இருப்பதாக குறித்த நபர் உறுதிபடக் கூறினார்.

அவ்வாறாயின் புதிய ஜனாதிபதியிடம் நீதியை பெற்றுத்தருமாறு கோரி தமிழ்த் தாய்மார்கள் போராட்டம் நடத்திய போது, அந்த நபர் “கத்தாத நாய், வெலுப்பன்” என குறித்த நபர் தாய்மாரை அச்சுறுத்தியதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளை சோதனையிடுவதாக அச்சுறுத்திய குறித்த நபர், தமிழ்த் தாய்மார்களின் எதிர்ப்பை அடுத்து அவ்விடத்தை விட்டுச் சென்றதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

புதிய ஜனாதிபதியின் ஆட்சியில் முதல் போராட்டத்தை அச்சுறுத்திய போதிலும் யுத்தத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கோரி வவுனியா பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் தாய்மார்களுக்கு தலைமை தாங்கிய சிவானந்தன் ஜெனிற்றா, புதிய ஜனாதிபதி தெரிவாகியுள்ள நிலையில், தமது போராட்டத்தை குழப்பும் வகையில் செயற்பட்டவர் யார் என்பது தொடர்பிர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென, ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

“தற்போது 9ஆவது ஜனாதிபதி வந்த வேளையில், நாம் எமக்கான உரிமைகளை தேடுவதற்கு ஜனநாயக முறையில்தான் நாங்கள் எங்கள் போராட்டத்தை மேற்கொண்டோம். ஆனால் நாங்கள் எங்கள் போராட்டத்தை மேற்கொள்கையில் ஒரு நபர் வந்து இதனை குழப்பி, இந்த ஜனாதிபதி வந்திருக்கின்றார். நீங்கள் எப்படி போராட்டத்தை முன்னெடுக்க முடியும்? என கேள்வி எழுப்புகிறார் எனின், இவர் யார்? இவரை யார் அனுப்பியது என்பதை இந்த நாட்டில் உள்ளவர்களும் சர்வதேசமும் கேட்க வேண்டும்.”

“உடலாலும், உள்ளத்தாலும் ஆரோக்கியமான சிறுவர்களின் தலைமுறையை உருவாக்குவதன் மூலம், எதிர்கால உலகை வெல்லும் சுதந்திரமான கற்பனைத்திறன் கொண்ட கனிவான மற்றும் உன்னதமான மனிதர்கள் உருவாக்கப்படுவதாக நாம் நம்புகிறோம்,” என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க சிறுவர் தினத்தை முன்னிட்டு விடுத்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருந்தார்.

“அதற்கு அவசியமான பொருளாதார சுதந்திரம் மற்றும் மனித நேயம், பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றைக் கொண்ட சமூகத்தை உருவாக்குதல் மற்றும் இயற்கை வளங்கள் நிறைந்த சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் தேவையான அரசியல் மாற்றத்தை நமது முன்னுரிமைப் பணியாகக் கருதி செயற்படுத்த அர்ப்பணிப்போம். அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு நாம் அனைவரும் பொறுப்புடன் செயற்படுவோம்!” எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த காலத்தில் ஆட்சிக்கு வந்த இலங்கையின் ஜனாதிபதிகள் அனைவரும் போருக்கான பொறுப்பை ஏற்கத் தவறியதாகவும், தமது தோல்வியை மறைக்க தமிழ் மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றியதாகவும் சிவானந்தன் ஜெனிற்றா இதன்போது குற்றஞ்சாட்டினார்.

“யுத்தம் முடிவடைந்த பின்னர் சோதனை சாவடிகளில் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள். நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றோருடன் கையில் ஒப்படைத்தவர்களை எங்கே என சொல்ல முடியாமல் இந்த இராணுவம் எங்கு பராமரிக்கின்றார்கள் என சொல்ல முடியாத நிலையில்தான் இந்த ஸ்ரீலங்கா அரசாங்கம் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. இந்த எட்டு ஜனாதிபதிகளும் யுத்தத்திற்கான பொறுப்புக்கூறலை ஏற்கத் தவறியுள்ளதோடு அதனை மூடி மறைக்கும் நோக்கில் அவர்கள் இல்லை, அவர்களை பிடிக்கவில்லை என்ற பொய்களை கூறிக்கொண்டு சர்வதேசத்தையும், இந்த தமிழ் மக்களையும் ஏமாற்றிக்கொண்டிருக்கின்றார்கள்.”

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்கு நீதியும் பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தி சிறுவர் தினத்தை கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (IOM) அலுவலகம் முன்பாகவும் கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாகவும் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின் புகைப்படங்களை காட்சிப்படுத்தி உறவினர்கள் போராட்டத்தை முன்னெடுத்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை இராணுவத்தின் அழைப்பின் பேரில், யுத்தம் முடிவடைவதற்கு முதல் நாள், சரணடைந்து காணாமல்போன 280 பேரில் எட்டு மாத குழந்தை உட்பட 10 வயதுக்குட்பட்ட 29 சிறுவர்களை மனித உரிமை அமைப்புகள் ஆவணப்படுத்தியுள்ளன.

உலகில் ஒரே நாளில் அதிகளவான சிறுவர்கள் காணாமல் போன காலம் இதுவென சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் (ITJP) தெரிவித்துள்ளது.

2,780 நாட்களாகத் தமிழ்த் தாய்மார்கள் வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல், சரியான ஆகாரமின்றி தொடர்ந்து வீதியில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here