குடியேற்றத்திற்கு ஆதரவான நாடு என்ற கனடாவின் நிலைப்பாடு மாறுகின்றதா? உண்மையான பின்னணி என்ன?

500 ,000 நிரந்தர குடியேற்றவாசிகளை உள்ளீர்ப்பது என்ற முன்னைய நிலையில் இருந்து 2027 ல் 365,000 குறைக்கும் கனடாவின் அறிவிப்புப்பற்றிய முழுமையான அலசல்

0
6
Article Top Ad

பரப்பளவில் உலகின் இரண்டாவது பெரிய நாடு கனடா . 140 கோடிகளுக்கும் அதிகமான சனத்தொகையைக் கொண்டுள்ள இந்தியாவைவிடவும் பரப்பளவில் மூன்று மடங்கு பெரிய நாடு கனடா. கடந்த 2023ம் ஆண்டில் தான் கனடாவின் சனத்தொகை நான்கு கோடி என்ற எண்ணிக்கையை எட்டியது .

இவ்வளவு பெரிய நாடாக இருந்தும் எதற்காக கனடா குடியேற்றத்திற்கு கட்டுப்பாடுகளை விதிக்கின்றது என்று நீங்கள் எண்ணக்கூடும் . அதற்கான காரணங்களைத் தான் இந்தக்கட்டுரை விரிவாக ஆராய்கின்றது.

கனடாவிற்கு குடியேறுகின்றவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் கனடா அரசாங்கத்தின் தீர்மானத்தை பிரதமர் ட்ரூடோ , குடியேற்றத்திற்கு பொறுப்பான அமைச்சர் மார்க் மில்லர் சசிதமாக கடந்த ஒக்டோபர் 24ம் திகதி அறிவித்திருந்தார்.

இந்த தீர்மானகரமான கொள்கைத் தீர்மானத்திற்கு அமைவாக ஆண்டிற்கு 500 000 குடியேற்றவாசிகளை அனுமதிப்பது என்ற நிலைபாட்டில் இருந்து 2027 ஆம் ஆண்டில் 365, 000 ஆக இந்த எண்ணிக்கை குறைவடையும்.

இது கொவிட் -19 தொடர்ந்து வேகமாக அதிகரித்த குடியேற்றம் காரணமாக ஏற்பட்ட விரைவான சனத்தொகை வளர்ச்சி மற்றும் பொருளாதார அழுத்தங்களை (Economic Strain) சமாளிப்பதனை நோக்காக் கொண்டதாகவே குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் தீர்மானம் அமைந்துள்ளதாக அரசாங்கத்தரப்பில் இருந்து வெளியான ஆரம்பத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் ட்ரூடோ அரசாங்கத்தின் தீர்மானத்தின் பின்னணியில் வேறு பல காரணங்களும் உள்ளன.

  1. வேகமான சனத்தொகை வளர்ச்சி காரணமாக (wage stagnation) ஊதிய முடக்கநிலை ஏற்பட்டதுடன் வீட்டுப் பற்றாக்குறையும் பாரியளவில் அதிகரித்துள்ளது.
  2. கொவிட் -19 பெருந்தொற்றை அடுத்து வந்த காலப்பகுதியில் அதிகரித்த குடியேற்றங்கள் காரணமாக வேலைக்கான வெற்றிடங்கள் வெகுவாக தீர்க்கப்பட்டபோதும் நீண்டகால பொருளாதார சமநிலை பாதிக்கப்பட்டது .
  3. வீடுகளிற்கான தேவைப்பாடு சனத்தொகை அதிகரிப்பின் காரணமாக சடுதியாக அதிகரித்தது . தற்போதைய தீர்மானத்தின் படி 2027ம் ஆண்டில் 670 ,000 வீடுகளுக்கான தேவை உள்ளது என கணிப்பிடப்பட்டுள்ளது.
  4. தற்போதைய நிலையில் கனடாவின் மொத்த சனத்தொகையின் எண்ணிக்கையில் 6.5 சதவீதமானவர்கள் தற்காலிக குடியேற்றவாசிகளாவர். புதிய தீர்மானத்தின் படி 2026ம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை 5 சதவீதமாக குறைக்கப்படும் .
  5. கனடிய அரசாங்கத்தின் புதிய தீர்மானத்திற்கு அமைவாக வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவடையப்போகின்றது. இதன்படி 2025ம் ஆண்டில் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கான அனுமதி 10 சதவீதமாக குறைக்கப்படவுள்ளது .

ட்ரூடோ தலைமையிலான அரசாங்கம் என்ன காரணங்களை அடுக்கினாலும் 2025ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள்ளாக கனடாவில் நடைபெறவேண்டிய அடுத்த பொதுத் தேர்தலே குடியேற்றவாசிகள் தொடர்பான கொள்கைத் தீர்மானத்திற்கான முதன்மைக்காரணமாக இருக்க முடியும்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 5ம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் சட்டவிரோத குடியேற்றம் என்பது முக்கியமான பேசுபொருளாகியுள்ள நிலையில் அண்டை நாடான கனடாவிலும் இந்த விடயம் தேர்தலில் முக்கிய இடத்தை பெறக்கூடும் . இதற்கான முதற்கட்ட நடவடிக்கையாகக் கூட சட்டபூர்வமான குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் அறிவிப்பை ட்ரூடோ அரசாங்கம் வெளியிட்டிருக்கவும் வாய்ப்புண்டு.

( இந்தக் கட்டுரையை எழுதியவர் அருண் ஆரோக்கியநாதன் . யாழ் உதயன் பத்திரிகையின் சகோதரப் பத்திரிகையான சுடர் ஒளிப் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான அருண் Asia Journalism Fellow மற்றும் Chevening SAJP Fellow ஆவார் . Email: [email protected] )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here