இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை – மனிதாபிமான அடிப்படையில் தீர்வுகாண கொழும்பு பேச்சில் இணக்கம் எட்டப்பட்டது

0
8
Article Top Ad

இலங்கை, இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண்பதற்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

இருநாட்டு உயர் அதிகாரிகள் தூதுகுழுக்களுக்கு இடையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை கொழும்பில் நடத்தப்பட்ட 6ஆவது சுற்று உயர்மட்ட பேச்சுகளில் இவ்வாறு இணக்கம் காணப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இலங்கை தூதுகுழுவில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம்.விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், கடலோர பாதுகாப்பு பிரிவு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உள்ளடக்கியிருந்தனர்.

இந்தியக் தூதுகுழுவுக்கு அந்நாட்டு மீன்வளத் துறையின் செயலர் அபிலக்ஷ் லிகி தலைமை வகித்துடன், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சின் மூத்த அதிகாரிகள், வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள், தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் உட்பட இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

இருநாட்டு மீனவர்கள் மற்றும் மீன்பிடித் துறை தொடர்பான பிரச்சினைகள் குறித்து இருநதரப்பினரும் இதன்போது விரிவான மதிப்பாய்வை மேற்கொண்டனர்.

மீனவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண்பதற்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.

மனிதாபிமான, ஆக்கபூர்வமான மற்றும் கூட்டுறவு அணுகுமுறையால் மட்டுமே இரு தரப்பு மீனவர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நீடித்த அடித்தளத்தை உருவாக்க முடியும் என்பதையும் தூதுகுழுவினர் ஒப்புக்கொண்டனர்.

இலங்கையில் தடுப்புக் காவலில் உள்ள இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விரைவில் விடுவிக்குமாறு இலங்கை அரசை இந்தியத் தரப்பு வலியுறுத்தியது.

இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் இலங்கைக் காவலில் தடுத்து வைக்கப்படுவது அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டிய இந்தியத் தரப்பு, நீண்ட தண்டனை மற்றும் அதிக அபராதம் விதிப்பது உட்பட மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளில் நிறுவப்பட்ட புரிந்துணர்வுகள் மற்றும் வழிமுறைகளை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தது.

இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகளுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையே கண்காணிப்பு, ரோந்து, ஹாட்லைன் மூலம் வழக்கமான தொடர்புகளைப் பேணுதல் மற்றும் பிற அனைத்து செயல்பாட்டு விடயங்களில் ஒத்துழைப்பைத் தொடர இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.

துரதிர்ஷ்டவசமான காயங்கள் மற்றும் உயிர் இழப்புகளுக்கு வழிவகுத்த அண்மைய சோகமான சம்பவங்கள் குறித்து இந்தியத் தரப்பு எடுத்துரைத்ததுடன், எந்தச் சூழ்நிலையிலும் பலாத்காரத்தைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியது.

மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து மேலும் விவாதிக்க இரு நாடுகளுக்கு இடையேயான மீனவர் சங்கங்களின் கூட்டத்தை விரைவில் திட்டமிட வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய தரப்பும் மீண்டும் வலியுறுத்தியது.

பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் நீண்ட கால தீர்வைக் காண்பதற்காக மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து தொடர்ந்தும் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here