ரஷ்யா, சீனா, இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பில் உருவாக்கப்பட்டு உலகின் பலம்வாய்ந்த பொருளாதார அமைப்பாக இயங்கும் பிரிக்ஸில் இணையும் இலங்கையின் கோரிக்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் அமைப்பின் வருடாந்த கூட்டத்தொடர் கடந்த 24ஆம் திகதி முதல் 26ஆம் திகதிவரை ரஷ்யாவின் கசான் நகரில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத் தொடரில் பங்கேற்க இலங்கை வெளிவிவகார அமைச்சின தூதுகுழுவொன்று கசான் நகருக்குச் சென்றதுடன், அங்கு அமைப்பின் உறுப்பு நாடுகளின் உயர்மட்ட தலைவர்களுடன் விசேட கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டது.
பிரிக்ஸ் அமைப்பில் இணையும் இலங்கையின் விரும்பத்தை தூதுகுழு, அமைப்பின் தலைமையை ஏற்று செயல்படும் ரஷ்யா மற்றும் பிரதான உறுப்பு நாடான இந்தியா உட்பட ஏனைய நாடுகளின் உயர்மட்ட தலைவர்களுக்கு தெரியப்படுத்தியது.
என்றாலும், பிரிக்ஸ் அமைப்பை விஸ்தரிப்பதில்லை என அதில் அங்கம் வகிக்கும் 9 நாடுகளின் அரச தலைவர்கள் தீர்மானித்துள்ளதால் பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்குரிய வாய்ப்பு இலங்கைக்கு கிட்டவில்லை.
இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்றுமுன்தினம் கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் விஜித ஹேரத்,
“ பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்குரிய அங்கத்துவத்தை நாம் கோரி இருந்தோம். இது தொடர்பில் மேற்படி அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களிடம் எழுத்துமூலம் தெரியப்படுத்தியும் இருந்தோம்.
பிரிக்ஸ் அமைப்பில் 9 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அந்நாடுகளின் தலைவர்கள், பிரிக்ஸ் அமைப்பை விஸ்தரிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இதனால் எந்தவொரு நாட்டுக்கும் புதிதாக இணையும் வாய்ப்பு கிட்டவில்லை.
எனினும், பங்குடமை கட்டமைப்பொன்று ஸ்தாபிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. பிரிக்ஸ் அமைப்பின்கீழ் புதிய அபிவிருத்தி வங்கி உள்ளது. அதில் இலங்கைக்கு அங்கத்துவம் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டது. எனினும், இதில் இணைவது தொடர்பில் நாம் தீர்மானம் எடுக்க வேண்டும். அது பற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்மானம் எட்டப்படும்.
பிரிக்ஸ் அமைப்பில் இலங்கை இணைவதை எந்தவொரு அங்கத்துவ நாடும் எதிர்க்கவில்லை. அந்த அமைப்பை விஸ்தரிப்பதில்லை என்ற முடிவால்தான் வாய்ப்பு மறுக்கப்பட்டது.”- என்றார்.