அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தாம் வெற்றிபெற்றுவிட்டதாக குடியரசுக்கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
நவம்பர் 5ம் திகதி செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறுகள் நள்ளிரவைத் தாண்டி வெளிவாகி வந்த நிலையில் ட்ரம்ப் தனது வெற்றிப்பிரகடன உரையை புளோரிடாவிலுள்ள தனது தலைமைத் தேர்தல் பணிமனையிலிருந்து ஆற்றியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மொத்தமுள்ள 538 Electoral College votes தேர்தல் மன்றக்கல்லூரி வாக்குகளில் யார் 270 அல்லது அதற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றி பெறுவார். எனவே டிரம்பின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகி விட்டது என்றே கூறலாம். இதைத் தொடர்ந்து அவர் புளோரிடாவில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றியுள்ளார்.
புளோரிடாவில் உள்ள தனது பிரசாரக் குழுவின் தலைமையகத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டிரம்ப்’இந்த நாட்டை மீட்டெடுக்க நாங்கள் உதவப் போகிறோம்’ என்று கூறினார்.
டிரம்பை ஜனாதிபதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தேவையான தேர்வாளர் குழு வாக்குகளை அவர் இன்னும் பெறவில்லை என்றாலும் கூட தான் வெற்றி பெற்றுவிட்டதாக டிரம்ப் அறிவித்துக் கொண்டுள்ளார்.
‘இது அமெரிக்காவின் பொற்காலம்’ என்று கூறிய டிரம்ப், ‘இது அமெரிக்க மக்களுக்கு கிடைத்த அற்புதமான வெற்றியாகும்’ இது அமெரிக்காவை மீண்டும் சிறந்த தேசமாக மாற்றும்’ என்றார்.
‘அமெரிக்கர்கள், வரும்காலத்தில் இந்த நாளைப் பற்றி எண்ணிப் பார்க்கையில், இதுதான் தங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் எனக் கருதுவார்கள்’ என்றார் டிரம்ப்.மேடையில் தன்னுடன் இருந்த மனைவி மெலனியா மற்றும் தனது குழந்தைகளுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப் ‘அவர் (மெலனியா) ஒரு சிறந்த வேலையைச் செய்துள்ளார். மக்களுக்கு உதவ மிகவும் கடினமாக உழைக்கிறார்’ என்று கூறினார்.
தனது பிரசாரக் குழுவில் முக்கிய பங்கு வகித்த ஈலோன் மஸ்க் குறித்து பேசிய டிரம்ப், அவரை குடியரசுக் கட்சியின் ‘புதிய நட்சத்திரம்’ என்றும் அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர் என்றும் விவரித்தார்.
புதிய ஜனாதிபதி எப்போது பதவி ஏற்பார்?
இந்த தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாகi தேர்வு செய்யப்படுபவர் 2025, ஜனவரி 20ஆம் திகதி திங்கட்கிழமை அன்று அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தின் மைதானத்தில் அறிமுகப்படுத்தப்படுவார்.
2016ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றபோது அந்தாட்டின் 45வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டரம்ப் 2024ம் ஆண்டின் வெற்றியை அடுத்து 47வது ஜனாதியாக பதவியேற்பார்.
அமெரிக்க வரலாற்றில் நடைபெறவிருக்கும் 60வது ஜனாதிபதி பதவியேற்பு விழா இது.
இந்த நிகழ்வில் புதிய ஜனாதிபதி அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கான உறுதிமொழியுடன் பதவியேற்பார். பின்னர் தொடக்க உரையை நிகழ்த்துவார்.
கமலா ஹாரிஸ் தரப்பு என்ன செய்கிறது?
‘இன்றிரவு கமலா ஹாரிஸ் இங்கு வரமாட்டார்’ என்று பிரசாரக் குழுவின் மூத்த உறுப்பினர் ஒருவர் அறிவித்த பின்னர் ஜனநாயகக் கட்சியின் தலைமையகத்தில் கூடியிருந்த கூட்டம் கிட்டத்தட்ட காணாமல் போனது.
வடக்கு கரோலினா, ஜோர்ஜியா மற்றும் பென்சில்வேனியா ஆகிய 3 முடிவை தீர்மானிக்கும் மாகாணங்களில் டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் கமலா ஹாரிஸின் ஆதரவாளர்கள் உற்சாக மனநிலையை இழந்துவிட்டனர்.
சில மணிநேரங்களுக்கு முன்புவரை கூட ஹாவர்ட் பல்கலைக்கழக வளாகத்தில் கமலா ஹாரிஸின் ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் குழுமியிருந்தனர். ஆனால் பின்னர் அவர்கள் கலைந்து செல்லத் தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் இன்று இரவு நடக்கவிருந்த கொண்டாட்ட நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாகவும் கமலா ஹாரிஸ் உரை நிகழ்த்தப் போவதில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.