இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் மறுபரிசீலனை செய்யப்படும் – என்கிறார் அநுர

0
21
Article Top Ad

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் இந்தியாவுடன் செய்துக்கொண்ட ஒப்பந்தங்கள் மீள மதிப்பீடு செய்யப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

”புதுப்பிக்கத்தக்க ஆற்றல் எமக்குத் தேவைக்கும் அதிகமாக உள்ளது. இலங்கையின் முழு மின் உற்பத்திக் கொள்ளளவு 4 மெகா வோட்டாக உள்ளது. 2040ஆம் ஆண்டில் இதுபோன்று இரண்டு மடங்கு எமக்கு அவசியமாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறெனின் 8 அல்லது 10 மெகா வோட் வரையே மின்சாரம் அவசியமாக இருக்கும்.

ஆனால், காற்றாளைகள் மூலம் மாத்திரம் எமக்கு 40 மெகா வோட்டை 2040இல் உற்பத்தி செய்ய முடியும். அதனால் எமக்கு மேலதிகமான மின்சாரம் உள்ளது.

உலகளாவிய ஆய்வுகளின் பிரகாரம் 2050இல் 60 முதல் 70 வீதமான மின்சாரம் புதுபிக்கத்தக்க சக்தி மூலமே உற்பத்தி செய்யப்படும். 2030ஆம் ஆண்டு முதல் கனிய எண்ணெய்கான கேள்வி உலகில் குறைவடையும்.

மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் வளம் இருந்தது போன்று எமக்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்படும். அது காற்றாளை மின்சாரமாக இருக்கும். இதனை டாங்கிகள் அல்லது களஞ்சியசாலைகளில் பேண முடியாது. கேபிள் கட்டமைப்பின் ஊடாகதான் இதனை கொண்டுசெல்ல முடியும். அவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்த நாம் தயார். எமக்கு அருகில் இருக்கும் நாடாக இந்தியா இருப்பதால் மேலதிக மின்சாரத்தை நாம் அவர்களுக்கு வழங்க முடியும்.

திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் உள்ளன. ஐ.ஓ.சி நிறுவனத்துக்கு சில எண்ணைக் குதங்கள் வழங்கப்பட்டுள்ளன. 65 வரையான குதங்களில் எண்ணெய் சுத்திகரிப்பை மேற்கொண்டு சந்தைக்கு விநியோகம் செய்யும் உடன்பாடுகளும் உள்ளன. இத்திட்டம் தொடர்பில் நாம் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஆனால், எமது புதுபிக்கத்தக்க ஆற்றலை காட்டிக்கொடுக்க தயார் இல்லை. அந்த உரிமையை பாதுகாத்துதான் நாட்டுக்கு பொருளாதார நன்மைகளை நாம் பெற்றுக்கொடுப்போம். அதில் எமது சுயாதீனம் பேணப்படும் என்பதை உறுதியளிக்கிறேன். சில திட்டங்களை மதிப்பீடு செய்து அவசியமாகும்.” என நேற்றுமுன்தினம் தனியார் தொலைக்காட்சியொன்று அளித்த நேர்காணலில் ஜனாதிபதி கூறியுள்ளார்.