மக்கள் சிறந்த வாக்காளர்களாக மாற வேண்டிய காலமிது

0
34
Article Top Ad

நீண்டகால பாரம்பரிய அரசியல் நிலைமையின் பின்னரான சூழலில் இலங்கை அரசு கட்டமைப்பு, அநுரகுமார திஸாநாயக்கவை மையமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியிடம் சென்றிருக்கிறது.

ஊழல்மோசடி, அதிகாரத்துஸ்பிரயோகம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்து வளமான ஒரு வாழ்வு கிடைக்கும் என அநேகமான மக்கள் நம்புகிறார்கள்.

இருந்தாலும், இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் பிரகாரம் அந்த நம்பிக்கையை நிறைவேற்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் மாத்திரம் தனியாக செயற்பட முடியாது என்பதை நாம் நன்கு அறிவோம். உலகத்துக்கும் இது புரியும்.

பெரிய அளவிலான அரசியல் சேவை மற்றும் ஐம்பது அமைச்சுக்களுக்கும் மேலாக செயற்பட்ட அமைச்சரவை தற்போது மூன்று அமைச்சர்களுடன் மாத்திரம் சுருக்கமடைந்திருக்கிறது.

இதன்காரணமாக, ஜனாதிபதி அநுரவுடன் இணைந்து பயணிக்கக்கூடிய நாடாளுமன்றம் ஒன்றை உருவாக்குமாறு கோரி தற்போது தேசிய மக்கள் சக்தி பிரசாரங்களை முன்னெடுக்கிறது.

ஆனாலும் மாற்றுத் தன்மை கொண்ட இந்த அரசியல் அணுகுமுறைகளைச் செயற்படுத்தவிடாமல் தடுப்பதற்குரிய சக்திகளும் உள்ளிருந்து செயற்படும் ஆபத்துக்களும் இல்லாமில்லை.

அரசியல் யாப்பு விதிகளின் பிரகாரம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நிறைவேற்று அதிகாரம் இருந்தாலும்கூட, அரச நிதி அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது.

அரசியலமைப்பின் XVII அத்தியாயத்தின் 148 இல் அவ்விடயம் தெளிவாகப் பொருள்கோடல் செய்யப்பட்டிருக்கிறது.

அதன்படி, அநுரகுமாரவுக்கு அவருடைய கொள்கைகளை செயற்படுத்த அவசியமான நிதியைப் பெற்றுக்கொள்ள அவருக்கு பொருத்தமான நாடாளுமன்றம் ஒன்று அமைக்கப்படுவது அவசியம். அதாவது அறுதிப் பெரும்பான்மை அவசியம்.

ஆகக் குறைந்த 113 ஆசனங்களுடன் அரசாங்கம் அமைந்தால், அரசியல் யாப்புச் சட்டங்களில் திருத்தங்களை செய்ய முடியாது.

இனப் பிரச்சினைக்குரிய தீர்வையும் முன்வைக்க இயலாது. புதிய அரசியல் யாப்பையும் உருவாக்க முடியாது.

அரசியலமைப்புச் சார்ந்த ஏதேனும் சட்டமூலங்களை நிறைவேற்ற பெரும்பான்மை அதிகாரம் அவசியம் என உயர்நீதிமன்றம் உத்தரவிடும் சந்தர்ப்பங்களும் ஏற்படும்.

அவ்வாறான சந்தர்ப்பங்களின் போது நாடாளுமன்றத்தில் அவசியமான பெரும்பான்மையும் ஆதரவும் கிடைக்கவில்லை எனின், ஜனாதிபதி அநுரகுமார குறித்த சட்டமூலங்களை மீளப் பெற வேண்டிய ஆபத்துகள் தெளிவாகத் தெரிகின்றன.

இதற்கு முன்னர் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார, இலங்கையின் வரிவிதிப்பு முறையின் சிக்கலான தன்மையை அவிழ்த்து எளிமையான வரி முறையை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்தார்.

மாதாந்திர சம்பளம் பெறும் ஊழியர்களை பாதிக்கும் PAYE இன் வருடாந்த வரம்பு 12 இலட்சத்தில் இருந்து 24 இலட்சமாக அதிகரிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்திருந்தார்.

வருமான வரி விதிப்பில் உள்ள குளறுபடிகள் குறித்து ஆய்வு செய்து உரிய தீர்வு காணப்படும் என்றார்.

வற் வரியை மீள்பகுப்பாய்வு செய்ய எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார். எனினும், இவை அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி அநுரவை ஆதரிக்கும் பிரதிநிதிகள் சபை ஒன்று அவசியம் இருக்க வேண்டும்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அதனைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் கடந்த சில தினங்களாக வரி குறைப்பதாக அளித்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன.

புதிய நாடாளுமன்றத்தை தேர்வு செய்ய இன்னும் நான்கு நாட்கள் மாத்திரமே உள்ளன.

அதுவரையில், 148 ஆவது பிரிவின்படி, பொது நிதி தொடர்பான எந்த முடிவையும் ஜனாதிபதி எடுக்க முடியாது.

ஜனாதிபதி அநுரவினால் இந்த வரித் திருத்தப் பிரேரணைகளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரும் போது அதற்கு ஆதரவான நாடாளுமன்றம் காணப்படின் அவர் வாக்குறுதியளித்த சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கையில் வரி செலுத்துபவர்களால் வாழும் பல ஓய்வுபெற்ற ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் மனைவிமார் உள்ளனர்.

1978 அரசியலமைப்பின் 36 வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அவர்கள் அனைவருக்கும் மாதாந்திர ஓய்வூதியம் பெற உரிமை உண்டு.

அதற்கு மேலதிகமாக, அமைச்சரவை அங்கீகாரம், வர்த்தமானி அறிவித்தல் அல்லது நாடாளுமன்ற அங்கீகாரங்கள் போன்றவற்றின் ஊடாக பெருமளவிலான வாகனங்கள், அரசாங்கத்தால் பராமரிக்கப்படும் உத்தியோகபூர்வ இல்லங்கள், நூற்றுக்கணக்கான பாதுகாவலர்கள் மற்றும் பல சலுகைகளை அவர்கள் அவ்வப்போது பெற்றுள்ளனர்.

இத்தகைய விடயங்களால் அவர்களை நீக்குவது மிகவும் கடினமாகிவிட்டது.

ஒரு அரசு ஊழியர் அறுபது வயதில் ஓய்வு பெறுகிறார். ஆனால் ஜனாதிபதி ஒருவர் ஒரு வருடம் பதவியில் இருந்து வெளியேறினாலும் அனைத்து சலுகைகளுக்கும் அவர் உரித்துடையவராகிறார். எனினும் மக்களது வரிப்பணத்தால் அவர்கள் ஆதரிக்கப்படுவது எவ்வளவு தூரம் நியாயமானது?

இத்தகைய அவசியமற்ற சலுகைகளை நீக்கி அவர்களின் சேவைகளை மற்ற அரச சேவைச் சீர்திருத்தப்பட வேண்டும். அதற்கு ஏற்றவாறு அரசியலமைப்பு திருத்தப்படவும் வேண்டும். ஆனால் ஜனாதிபதி அநுரவை ஆதரிக்கக் கூடிய நாடாளுமன்றம் இருந்தால் மாத்திரமே இது சாத்தியமாகும்.

கடந்த காலங்களில் ஆட்சி புரிந்த அரசாங்கங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் எதுவும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதில்லை.

இவ்வாறான உடன்படிக்கைகள் மூலம் அரசாங்கம் பொறிக்குள் சிக்கியுள்ள பல விடயங்கள் அண்மையில் கசிந்துள்ளன. அவற்றால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதும் தெளிவாகிறது.

ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்வதும், நாட்டின் பொருளாதாரத்திற்கு அவை எந்த அளவுக்கு பங்களிக்கின்றன என்பதை ஆய்வு செய்வதும் மிக முக்கியம். அதற்கு பலமான ஒரு நாடாளுமன்றம் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆகவே, நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில தினங்கள் மாத்திரமே காணப்படுவதால் மக்கள் அனைவரும் சிந்தித்து வாக்களிப்பது அவசியம். நாம் நம்பும் மாற்றம், நாம் கோரும் மாற்றம் நம்மிடையே இருந்து தொடங்கட்டும். மக்கள் சிறந்த வாக்காளர்களாக மாற இது நல்லதொரு சந்தர்ப்பம் என்பது கண்கூடு.