தேசிய மக்கள் சக்தி (NPP) சாதித்துக்காட்டிய வரலாற்று முக்கியத்துவ தேர்தல் வெற்றி !

0
52
Article Top Ad

இலங்கையில் நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி  (NPP) 159 ஆசனங்களைக் கைப்பற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்துள்ள நிலையில் சிரேஸ்ட பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் அவர்கள் எழுதிய இந்தக்கட்டுரையை மீள்பதிப்புச் செய்கின்றோம்

 இவர் தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் வீரகேசரிப் பத்திரிகையின் ஆசிரியர் ஆலோசகராகவும் திகழ்ந்தவர் .

—————————————

இலங்கையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அநுரா குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரமாண்டமான வெற்றியைப் பெற்று சாதனை படைத்திருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி 1977 ஜூலை பொதுத்தேர்தலில் பாராளுமன்றத்தின் 168 ஆசனங்களில் 144 ஆசனங்களை கைப்பற்றி ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்த பிறகு முதற்தடவையாக அதேபோன்ற ஒரு பிரமாண்டமான பெரும்பான்மையுடன் இந்த தடவை தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்திருக்கிறது.

ஐக்கிய தேசிய கட்சி அந்த அத்தகைய ஒரு வெற்றியை பெற்றபோது பழைய தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறையே நடைமுறையில் இருந்தது. ஆனால், விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக எந்தவொரு அரசியல் கட்சியுமே இதுவரை பெற்றிராத நிலையில் , தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெருப்பான்மைக்கு மேலதிகமான ஆசனங்களுடன் மக்களின் ஆணையை பெற்றிருக்கிறது.

மகிந்த ராஜபக்ச ஆட்சியில் 2010 ஆண்டிலும் கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் 2020 ஆம் ஆண்டிலும் அவர்களின் கட்சிகளின் தலைமையிலான கூட்டணிகளுக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தது. ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் குறைவான பாராளுமன்ற ஆசனங்களை தேர்தல்களில் பெற்ற அவர்கள் பிறகு கட்சித் தாவல்களை ஊக்குவித்து அந்த பெரும்பான்மையை உறுதி செய்து கொண்டார்கள்.

ஆனால், தேசிய மக்கள் சக்தி தனியாக இந்த தடவை தேர்தலில் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றி சாதித்துக் காட்டியிருக்கிறது. பாராளுமன்றத்தை தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களினால் நிரப்புமாறு தேர்தல் பிரசாரங்களின் தொடக்கத்தில் மக்களிடம் கேட்டுக் கொண்ட ஜனாதிபதி திசாநாயக்கவும் அமைச்சர் விஜித ஹேரத்தும் சபையில் எதிர்க்கட்சியே தேவையில்லை என்று கூறினார்கள். ஆனால் அதற்கு அரசியல் கட்சிகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

பிறகு தேர்தல் பிரசாரங்களின் இறுதிக் கட்டங்களில் தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) வேறு தலைவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருந்த கடந்த கால அரசாங்கங்கள் எதேச்சாதிகாரமாக நடந்து கொண்டதை சுட்டிக்காட்டி தங்களுக்கு அத்தகைய பெரும்பான்மை தேவையில்லை என்றும் ஒழுங்கான முறையில் அரசாங்கத்தை நடத்துவதற்கு உறுதியான பெரும்பான்மையை தந்தால் போதும் என்றும் கூறினார்கள். ஆனால் அவர்களின் வேண்டுகோளை மீறி மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு பிரமாண்டமான பெரும்பான்மையுடன் ஆணையைக் கொடுத்திருக்கிறார்கள்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டவர்கள் அரசியல் அனுபவம் இல்லாதவர்கள் என்றும் அவர்களினால் பொருளாதார விவகாரங்களை கையாளமுடியாது என்பதால் தங்களது அணிகளைச் சேர்ந்தவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புமாறு ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் மக்களிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், மக்கள் அதை அறவே பொருட்படுத்தாமல் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களினால் பாராளுமன்றத்தை பெருமளவுக்கு நிரப்பியிருக்கிறார்கள்.

ஜனாதிபதி திசாநாயக்கவின் ஆட்சித்திறன் தொடர்பில் எதிர்க்கட்சிகள் கிளப்பிய சந்தேகங்களை எல்லாம் நிராகரித்த மக்கள் அவர் மீதும் அவரது கட்சிமீதும் வியககத்தக்க முறையில் மீண்டும் நம்பிக்கையை வெளிப்டுத்தியிருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தி புதிய அரசாங்கத்தை அமைக்கவிருக்கும் இந்த சந்தர்ப்பம் தெற்காசியாவில் நேபாளத்துக்கு அடுத்ததாக அரச அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு ஆயுதக்கிளர்ச்சியை முன்னெடுத்த இடதுசாரி அரசியல் இயக்கம் ஒன்று பாராளுமன்றத்தின் மூலமாக ஆட்சிக்கு வருகின்ற ஒரு வரலாற்று முக்கியத்துவமுடைய நிகழ்வைக் குறித்து நிற்கிறது.

 

கடந்த நூற்றாண்டில் ஒரு மூன்று தசாப்தகால இடைவெளியில் இரு ஆயுதக்கிளர்ச்சிகளை முன்னெடுத்து தோல்வி கண்ட ஜே.வி.பி. ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்து மூன்று தசாப்தங்களுக்கு பிறகு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றியிருப்பது அதன் அரசியலில் முக்கியமான உருநிலை மாற்றமாக அமைகிறது. ஜே.வி.பி.யின் அரசியலில் மாத்திரமல்ல இலங்கை அரசியல் வரலாற்றிலும் இது ஒரு மைல்கல்லாகும்.

சுமார் 60 வருடகால வரலாற்றில் ஜே.வி.பி. ஆயுதக்கிளர்ச்சிகளின் விளைவான பயங்கர அனுபவங்களுக்கு பிறகு ஜனநாயக அரசியல் மூலமாக ஒரு முழுமையான அரசியல் வட்டத்தை சுற்றிவந்து நிறைவு செய்திருக்கிறது. அதனால் அதன் மகத்தான தேர்தல் வெற்றி இலங்கையின் இடதுசாரி அரசியலைப் பொறுத்தவரையிலும் கூட முக்கியமான நிகழ்வாகும். ஜனாதிபதியாக திசாநாயக்க பதவியேற்றதை அடுத்து இலங்கையின் ஆட்சியதிகாரம் பாரம்பரியமான அரசியல் அதிகார வர்க்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்துவந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமிருந்து அந்த வர்க்கத்துக்கு வெளியில் உள்ள சாதாரண குடும்ப பின்னணியைக் கொண்ட ஒருவரின் கைகளுக்கு வந்தது.

தேசிய மக்கள் சக்தியின் அதிகப் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்ட புதிய பாராளுமன்றம் அந்த அதிகார மாற்றத்தை முழுமை பெறச் செய்வதாக அமைகிறது. புதிய பாராளுமன்றம் இன்னொரு காரணத்துக்காகவும் வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாக அமைகிறது.

எந்தவொரு தேசிய கட்சியுமே இதுகாலவரை செய்திராத வகையில் இந்த தடவை பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தென்னிலங்கையில் மாத்திரமன்றி நாடு பூராவும் பெருவெற்றி பெற்றிருக்கிறது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் கணிசமான ஆசனங்களை அது கைப்பற்றியிருக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் திசாநாயக்கவின் வெற்றியை அடுத்து அவரின் கட்சியை பாராளுமன்ற தேர்தலில் ஆதரிக்க வேண்டும் என்ற ஆர்வம் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் வளர ஆரம்பித்தது. அந்த மக்கள் தங்களிடம் வாக்கு கேட்கவந்த தமிழ் அரசியல்வாதிகளிடம் நேரடியாகவே தங்களது அந்த விருப்பத்தை வெளிப்படுத்தியும் இருந்தார்கள். ஆனால் தமிழ்ப் பகுதிகளில் ஒரு தேசிய மக்கள் சக்தி அலையே வீசும் என்று எவரும் நினைக்கவில்லை.

குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆறு பாராளுமன்ற ஆசனங்களில் மூன்று ஆசனங்களை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி பாரம்பரியமாக வடக்கை பிரதிநிதித்துவம் செய்துவந்த பாரம்பரிய தமிழ்க்கட்சிகளை பின்னுக்கு தள்ளியிருக்கிறது.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் பெருமளவில் மக்கள் மத்தியில் பிரபல்யமில்லாதவர்கள் என்றபோதிலும் கூட வியக்கத்தக்க வெற்றியை அவர்களால் சாதிக்கக்கூடியதாக இருந்தது. தமிழ் மக்கள் இந்தளவுக்கு ஆதரவை வழக்கியதற்கு முக்கியமான காரணம் தேசிய மக்கள் சக்தியின் மீதான கவர்ச்சி என்பதை விடவும் தங்களை இதுகாலவரை பிரதிநிதித்துவம் செய்துவந்த தமிழ் அரசியல் கட்சிகள் மீதான வெறுப்பு என்பதே உண்மையாகும்.

உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பின்னரான கடந்த பதினைந்துக்கும் அதிகமான வருடங்களில் தங்களது தேவைகளையும் அரசியல் அபிலாசைகளையும் நிறைவேற்றுவதற்கு ஒருமித்த நிலைப்பாட்டுடன் ஐக்கியமாகச் செயற்படத் தவறிய தமிழ் அரசியல்வாதிகள் மீது தமிழ் மக்கள் பெரும் அதிருப்தி கொண்டிருக்கிறார்கள். இந்த அரசியல்வாதிகளின் அணுகுமுறைகள் காரணமாக தமிழ் அரசியல் சமுதாயம் சிதறுப்பட்டுக் கிடக்கிறது.

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பெருவாரியான அரசியல் கட்சிகளும் குழுக்களும் இதற்கு சான்று. தங்கள் மத்தியில் உருப்படியான மாற்று ஒன்று இல்லாத நிலையில் ஜனாதிபதி திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரும்புவதை தவிர தமிழ் மக்களுக்கு வேறு வழியிருக்கவில்லை.

தேர்தல் பிரசாரங்களின் இறுதி கட்டத்தில் தமிழ் அரசியல்வாதிகள் தேசிய மக்கள் சக்தி மீது கடுமையான தாக்குதல்களை தொடுத்தனர். தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணும் விடயத்தில் மற்றைய சிங்கள கட்சிகளுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் வித்தியாசம் இல்லை என்று அவர்கள் தமிழ் மக்களுக்கு கூறினார்கள். தேர்தல் பிரசாரத்துக்காக யாழ்ப்பாணத்துக்கு வந்த ஜனாதிபதி திசாநாயக்க இனப்பிரச்சினை தீர்வு குறித்து எதுவும் பேசவில்லை என்றும் அவர்கள் கூறினார்கள்.

ஆனால் மக்கள் இந்த எதிர்ப்பிரசாரங்களை பொருட்படுத்தவில்லை என்பதை அவர்கள் வாக்களித்த முறை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. தேசியக் கட்சி ஒன்றைச் சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு, கிழக்கில் இருந்து முன்னென்றும் இல்லாத வகையில் இந்த தடவை பாராளுமன்றம் செல்ல விருக்கிறார்கள். தமிழ் மக்கள் தங்களுக்கு அளித்த ஆதரவை ஜனாதிபதி தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களும் எவ்வாறு வியாக்கியானம் செய்கிறார்களோ தெரியவில்லை.

ஆனால், தங்களது கடந்தகால அரசியல் பாதையை சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்காமல் வெறுமனே உணர்ச்சிவசமான தேசியவாத சுலோகங்களைை மாத்திரம் வைத்துக் கொண்டு தமிழ் மக்களை நெடுகவும் ஏமாற்றி பாராளுமன்றம் கொண்டிருக்கலாம் என்று நம்பியதன் விளைவை பல தமிழ்க்கட்சிகள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன என்பது மாத்திரம் உண்மை.

https://www.facebook.com/askmedianetwork/videos/1055296986388929