இஸ்ரேல் – ஹிஸ்புல்லா போர் நிறுத்தமும்: பிரான்ஸ் பின்னணியும்

0
12
Article Top Ad

லெபனானில் ஹிஸ்புல்லா, பலஸ்தீனத்தின் காசா என்று இரண்டு முனைகளில் போரை நடத்திக் கொண்டிருந்த இஸ்ரேல் தற்போது ஹிஸ்புல்லா இயக்கத்துடன் போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.

அதுவும் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கவுள்ள நிலையில் இந்த போர் நிறத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்க, பிரான்ஸ் ஆகிய நாடுகள் எடுத்த நகர்வுகள் இப் போர் நிறுத்தத்துக்குக் காரணம் என்று கூறினாலும் இதன் பின்னால் உள்ள காரண – காரியங்கள் குறித்து கேள்விகள் – சந்தேகங்கள் இல்லாமலில்லை.

பலஸ்தீனத்தின் காஸா பிரதேசத்தில் போரை நடத்திக் கொண்டிருந்த இஸ்ரேல், லெபனானிலும் போரைத் தொடங்கியதால் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஹிஸ்புல்லாவின் முக்கியத் தலைவர்களும் இஸ்ரேலால் கொல்லப்பட்டனர்.

தாக்குதலைத் தீவிரப்படுத்தி தரை வழியாகவே தெற்கு லெபனான் பகுதியை இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றியது. இதனால், தெற்கில் வசித்த லெபனான் மக்கள், வடக்கு நோக்கி இடம்பெயர்ந்தனர். இப் போர், மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகப்படுத்தியது. இதனால், பல நாடுகளுக்கும் போர் பரவும் அபாயம் உருவானது. மத்தியக் கிழக்கில் முழு அளவிலான போருக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சம் உலக அளவில் ஏற்பட்டது.

இப் பின்னணியில்தான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது ஏன் என்ற கேள்விகள் சர்வதேச அளவில் விஞ்சியுள்ளன. ஏனெனில், காஸாவில் போர் தொடர்கிறது. அங்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்படாமல் ஹிஸ்புல்லாவுடன் மாத்திரம் போரை நிறுத்தியதன் அரசியல் லாபங்கள் குறித்து பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருக்கும் பிபிசி அரபு சேவை செய்தியாளர் கேரைன் டோர்பி, ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா ஆகிய இயங்கங்களை இஸ்ரேல் அணுகிய விதத்தில் வேறுபாடு இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

லெபனானில் போர் நிறுத்த உடன்பாட்டை இஸ்ரேல் எட்டியதற்கும், காஸாவில் ஹமாஸுடன் அதை எட்ட முடியாததற்கும் இடையே இருக்கும் ஒரு முக்கிய காரணம், இரண்டுக்குமான அரசியல் சூழல் என்கிறார் பிபிசி அரபி மொழிக்கான ஜெருசலேம் செய்தியாளர் முகன்னத் டுடுன்ஜி.

அதேநேரம், லெபனானில் உள்ள பல மதரீதியிலான மற்றும் அரசியல் ரீதியிலான குழுக்களில் ஹிஸ்புல்லா இயக்கம் முக்கியமானது. அதோடு, அனைத்து லெபனான் மக்களும் இஸ்ரேலுடனான அதன் மோதல் குறித்து ஒரே மாதிரியான பார்வையைக் கொண்டிருக்கவில்லை என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர்.

ஆனால், காஸாவின் நிலைமை முற்றிலும் வேறுபட்டது. அங்கு, ஆளும் அரசியல் சக்தியாகவும், இராணுவ சக்தியாகவும் ஹமாஸ் இருக்கிறது. அதோடு, இதேபோன்ற இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாடுகளைக் கொண்ட வேறு சில பிரிவுகளால் ஆதரிக்கப்படுகிறது என்ற கருத்துக்களும் உண்டு.

ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் ஆகிய இயங்கங்களை இஸ்ரேல் எவ்வாறு அணுகியது என்பதில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. காஸா தற்போது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள ஒரு பகுதி. ஆனால், லெபனான் தனிப்பட்ட இறையாண்மை கொண்ட ஒரு நாடு. முன்பு இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தாலும், ஹிஸ்புல்லா மற்றும் ஏனைய ஆயுதக் குழுக்களின் கடும் எதிர்ப்புகளால் அது பின்வாங்க நேரிட்டது.

எவ்வாறாயினும் இஸ்ரேல் – ஹிஸ்புல்லா பேர் நிறுத்தத்தை அமெரிக்காவும், பிரான்ஸும் இணைந்து சாத்தியப்படுத்தியிருக்கின்றன. இதன் பிரகாரம் இஸ்ரேல் – லெபனான் இடையிலான அதிகாரப்பூர்வமற்ற எல்லையாகக் கருதப்படும் ப்ளூ லைன் மற்றும் லிடானி நதிப் பகுதிகளிலிருந்து 60 நாட்களுக்குள்ளாக படைகளை இரு தரப்பும் திருப்பிப் பெற வேண்டும். மேலும், தெற்கு லெபனானில், அந்த நாட்டு இராணுவமும், ஐ.நா-வின் அமைதி காக்கும் படையும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வார்கள். அதேபோல், அமெரிக்கா தலைமையிலான குழு ஒன்று, போர் நிறுத்த நடைமுறைகளைக் கண்காணிக்கும். ஒப்பந்தம் மீறப்படும் பட்சத்தில், இந்தக் குழு நடவடிக்கைகளை எடுக்கும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

லெபனான் பிரதமர் நஜீப் மிகாடி, தெற்கு லெபனானில் இராணுவ வலிமையை அதிகப்படுத்த முடிவு செய்திருப்பதாகவும் லெபனானில் புதிய அத்தியாயம் தொடங்கும் என நம்புவதாகவும் கூறியிருக்கிறார்.

அதேநேரம், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவோ, போர் நிறுத்த ஒப்பந்தங்களை ஹிஸ்புல்லாவோ, அவர்களது கூட்டாளிகளோ மீறினால், பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். ஆகவே, இந்த ஒப்பந்தத்தை எந்தத் தரப்பு மீறினாலும், மீண்டும் அங்கு போர் வெடிக்கும் அபாயங்கள் இருப்பது நன்கு தெரிகிறது.

இஸ்ரேலிடம் மிகப்பெரிய இராணுவ திறன்களும் வான்வெளியில் மேலாதிக்கமும் இருந்தபோதிலும், லெபனானில் தரைப்படை நடவடிக்கையில் அவதிப்பட்டதை மறுக்க முடியாது. சுமார் இரண்டு மாதங்கள் நீடித்த சண்டையின் முடிவிலும்கூட, தெற்கிலுள்ள நகரங்களைக் கைப்பற்றுவதில் இஸ்ரேல் தோல்வியடைந்திருந்தது என்பது உண்மை. ஹிஸ்புல்லாவின் ரொக்கெட் ஏவுதிறனைச் செயலிழக்க வைக்க இஸ்ரேலினால் முடியவில்லை.

ஹிஸ்புல்லாவின் தொடர் தாக்குதல்கள் இஸ்ரேலில் போர் வியூகங்களில் பல குழப்பங்களை உருவாக்கிய அதேநேரம் காஸா மோதலில் அதிகளவு கவனத்தை செலுத்த வேண்டும் என்ற நோக்கங்களும் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்குக் காரணமாக இருந்தது என்ற முடிவுக்கு வரலாம்.

ஹமாஸுடன் ஒப்பிடுகையில், ஹிஸ்புல்லா அதிக இராணுவ திறன்களைக் கொண்ட ஒரு வலிமையான அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.

ஆகவே, இஸ்ரேல் அதன் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்ற அவதானிப்புகளும் உண்டு. எவ்வாறாயினும் இந்தப் போர் நிறுத்தம் அழிவுகளில் இருந்து மக்களைக் காப்பாற்றியுள்ளது என்பதே உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here