எளிமையான முறையில் நடைபெறும் இலங்கையின் 77ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்

0
9
Article Top Ad

இலங்கையின் 77ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நாளை (04) காலை, சுதந்திர சதுக்கத்தில் எளிமையான முறையில் நடைபெறவுள்ளன.

நாளை பாதுகாப்புக்காக 1,000க்கும் மேற்பட்ட பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இன்று (03) காலை நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார்.

நிகழ்வுக்கு வருபவர்கள் பரிசோதிக்கப்பட்டு பின்னர் சுதந்திர தின விழாவிற்கு அனுப்பப்படுவார்கள் என்றும் சுதந்திர தின விழாவில் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் நாளை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அனைவரும் காலை 7 மணிக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து தங்கள் இருக்கைகளில் அமருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, சுதந்திர தின கொண்டாட்டங்களைக் காண வரும் பொதுமக்கள் பௌத்தாலோக மாவத்தை வழியாக வந்து, பின்னர் ரூபவாஹினி வளாகத்திற்கு அருகில் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு, தங்கள் இருக்கைகளுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களை குறைந்த செலவில், பொதுமக்களுக்கு குறைந்தபட்ச இடையூறுகளுடன், அதிக பொது மக்களின் பங்கேற்புடன் நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக நிறுத்தப்பட்டுள்ள முப்படைகளின் எண்ணிக்கை 40 வீதம் குறைக்கப்பட்டுள்ளது, மேலும் அணிவகுப்புக்கு முப்படை கவச வாகனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழாவில் வான வேடிக்கைகளும் இம்முறை இடம்பெறாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here