பல்கலைக்கழக பகிடிவதை – நான்கு மாணவர்களுக்கு விளக்கமறியல்

0
118
Article Top Ad

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட நான்கு மாணவர்களை, மே 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் மஹரகம, எம்பிலிப்பிட்டிய, வாரியபொல மற்றும் ஹபராதுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பொறியியல் பீடத்தின் இரண்டாம் வருடத்தில் கற்றுவந்த சரித் தில்ஷான் என்ற மாணவன், கடந்த ஏப்ரல் 29 திகதி தற்கொலை செய்து கொண்டார். பல்கலைக்கழகத்தின் பகிடிவதையை தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அவர் தனது நண்பர்களுக்கு அனுப்பிய வட்ஸ்அப் உரையாடல்களிலும் அதுபற்றி கூறியுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், நேற்றிரவு நான்கு மாணவர்களை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியது.

இதேவேளை, சம்பவம் தொடர்பாக உயர்கல்வி அமைச்சு மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகம் சார்பில் வெவ்வேறு குழுக்களும் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.