ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை –  ஐரோப்பிய ஒன்றியக் குழுவுடன் தமிழரசுக் கட்சி பேச்சுவார்த்தை

0
128
Article Top Ad

ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு கண்காணிப்புக் குழுவை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் சந்தித்துள்ளனர்.

கொழும்பு, புல்லர்ஸ் வீதியில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நேற்றிரவு நடைபெற்றுள்ளது. இதன்போது தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தீர்க்கப்படாத விடயங்கள் என பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

குறிப்பாக, பொறுப்பு கூறலை நடைமுறைப்படுத்துதல், மனித உரிமைகளை பேணுதல், நல்லாட்சியை முன்னெடுத்தல், நல்லிணக்கத்தை உருவாக்குதல் போன்ற விடயங்களில் ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை நிறைவேற்றும் கடப்பாட்டில் இலங்கை அரசு தொடர்ந்து தவறிழைக்குமானால், அதற்கு வழங்கிவரும் ஜி.எஸ்.பி. வரிசலுகையை ஐரோப்பிய ஒன்றியம் விளக்கிக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிவரும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை விரைவில் முடிவடையவுள்ள நிலையில், அதனை நீடிப்பது குறித்து ஆராய்வதற்கு ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழு இலங்கைக்கு வந்துள்ளது. இவர்கள் அரசாங்கம் மற்றும் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து கருத்துக் கோரி வருகின்றனர்.

இதேவேளை, அரசாங்கத்தின் நிலைப்பாடும் ஐரோப்பிய ஒன்றியம் முன்வைக்கும் கருத்துக்களும் ஒரேமாதிரியானவை என்றும், குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தால் தமது தரப்பே அதிகம் பாதிக்கப்பட்டது என்றும், விரைவில் அதனை நிச்சயமாக நீக்குவோம் என்றும், அண்மையில் சிங்கள தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் கலந்துரையாடலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது