ஹரக் கட்டா என்ற புனைப்பெயரில் அறியப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன, முக்கிய அதிகாரிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளமை தற்காலத்தில் பேசுபொருளாக உள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவராக கருதப்படும் ஹரக் கட்டா, தற்போது தங்காலை பழைய சிறைச்சாலையில் தடுத்துவைப்பட்டுள்ளார். வழக்கொன்றிற்காக கடந்த 14ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அவர் அழைத்துவரப்பட்டபோது, ஊடகங்கள் முன்னிலையில் பாரிய குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஹரக் கட்டா முன்வைத்த குற்றச்சாட்டு
முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் கோரிய ரூ. 300 மில்லியன் இலஞ்சத்தை கொடுக்க மறுத்த காரணத்தினாலேயே தான் தங்காலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார். அதுமட்டுமன்றி, தன்னை தடுத்து வைப்பதற்காக மாதாந்தம் சுமார் ஒரு கோடி வரை செலவழிப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த சர்ச்சைக்குரிய கருத்து குறித்து பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ளது. பயங்கரவாத விசாரணைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று இதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தின் நிலைப்பாடு
ஹரக் கட்டா தான் முன்னர் வழங்கிய வாக்குமூலத்தில் ரூ.300 மில்லியன் இலஞ்சம் கோரப்பட்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளாரா என்பதை சரிபார்க்குமாறு பொலிஸாரிடம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அவ்வாறு இல்லாவிட்டால், புதிய வாக்குமூலத்தை பதிவுசெய்ய வேண்டும் என்றும், ஊடகங்களிடம் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை விட இவ்வாறான விடயங்களை அதிகாரிகளுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, மாதமொன்றிற்கு ஒரு கோடி ரூபாய் செலவாகும் என்ற கூற்றை நிராகரித்துள்ளார். இந்த தடுப்புக்காவல் செயற்பாடு சட்ட அமுலாக்க நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்றதே தவிர, அலஸ் அல்லது தென்னகோனால் தனிப்பட்ட முறையில் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், எந்தவொரு அதிகாரப்பூர்வ அரசாங்க அறிக்கையும் இலஞ்சக் குற்றச்சாட்டை இன்னும் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. எனினும், நடைபெற்று வரும் விசாரணைகள், இந்த விடயத்தை அதிகாரிகள் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதை வெளிப்படுத்துகின்றன.
டிரான் அலஸ் என்ன கூறுகிறார்?
ரூ.300 மில்லியன் இலஞ்சம் கோரியதாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மறுத்துள்ளார். அதற்கு பதிலாக, இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்க ஹரக் கட்டா தனக்கு ரூ.700 மில்லியன் இலஞ்சம் வழங்க முயன்றதாக அவர் ஏற்கனவே கூறியதையும் சுட்டிக்காட்டியுள்ளார். ஆகையால், ஹரக் கட்டாவின் சமீபத்திய கூற்றுகள் பொய்யானவை என்று கூறி அவற்றை நிராகரித்துள்ளார்.
இதேவேளை, இக்குற்றச்சாட்டு தொடர்பாக தேசபந்து தென்னகோன் தரப்பில் இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஊகங்கள்
பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதோடு, எதிர்வரும் 19ஆம் திகதி அவரை விசாரணைக் குழுவில் முன்னிலையாகும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தவறான நடத்தை மற்றும் கடுமையான அதிகார துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுக்கள் இவர்மீது சுமத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஊடகவியலாளர்களிடம் ஹரக் கட்டா பேச அனுமதிக்கப்பட்டமை திட்டமிடப்பட்ட நடவடிக்கை என சமூக ஊடக பதிவுகள் தெரிவிக்கின்றன.
அதே சந்தர்ப்பத்தில், நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தாலே தவிர இந்த அரசாங்கம் டிரான் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காது என்ற கருத்துக்களும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
எவ்வாறாயினும், ஹரக் கட்டாவின் வழக்கு, இலங்கையின் அரசியல் மற்றும் சட்ட அமலாக்க அமைப்பில் குற்றவியல் வலையமைப்புகளுக்கும் ஊழலுக்கும் இடையிலான சிக்கலான தொடர்புகளை எடுத்துக்காட்டுகிறது.
இன்னும் கூறவேண்டிய நிறைய விடயங்கள் உள்ளன எனக் ஹரக் கட்டா கூறிச்சென்றமையானது, பொதுமக்களினதும் ஊடகங்களினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. தனக்கு மருத்துவ உதவிகள் மறுக்கப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றில் தெரிவித்துள்ளமை, தடுப்புக் காவலின் போதான பாதுகாப்பு கேள்விகளையும் எழுப்பாமல் இல்லை.
செய்தியாக்கம் – கே.கே.