ஆத்திரமூட்டும் செயல்கள், எரிச்சலூட்டும் பேச்சுக்கள் மற்றும் சர்ச்சைகளில் மீண்டும் மீண்டும் சிக்கும் அம்பிட்டியே சுமனரத்ன தேரர், மட்டக்களப்பில் உள்ள ஸ்ரீ மங்களராம விகாரையின் தலைமை பீடாதிபதி ஆவார். மட்டக்களப்பின் பல்வேறு போராட்டங்கள், காணி விடயங்கள், வங்கிச் செயற்பாடு என பல சந்தர்ப்பங்களில் இவர் பொதுமக்களோடும் அரச அதிகாரிகளோடும் முரண்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட சம்பவத்தை மையமாகக் கொண்டு தேர்ர் கைது செய்யப்பட்டுள்ளார். உஹன பொலிஸாரால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டபோது, அவருடன் இருந்த இரு பிள்ளைகளை பாதுகாப்பற்ற முறையில் முச்சக்கர வண்டியில் அழைத்துச் செல்ல முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேரர் அந்த பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்தகால சர்ச்சைகள்
அம்பிட்டியே சுமனரத்ன தேரர் முதன்முதலில் அவரது ஆக்ரோஷமான செயல்கள் மற்றும் கடும் மொழிப் பிரயோகத்தை பயன்படுத்திய காணொளிகள் வைரலான பின்னர் பரவலாகப் அறியப்பட்டார். ஒரு காணொளியில் அவர் ஒரு தமிழ் அரச அதிகாரியை அவமதிக்கும் வகையில் திட்டியிருந்தார். இது பொதுமக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது. மற்றும் சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இன்னொரு காணொளியில், அவர் ஒரு பெண் பொலிஸ் அதிகாரியை தாக்க முயற்சிப்பதும், கடுமையான வார்த்தைகளை மக்கள் மீது பிரயோகிப்பதும் பதிவாகியிருந்தது.
குறிப்பாக சிறுபான்மை சமூகங்களை குறிவைத்து வெறுப்புப் பேச்சு பேசியதாக பலமுறை இவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் சட்டரீதியான நடவடிக்கைகளில் இருந்து அவர் தொடர்ச்சியாக தப்பித்து வந்தார். இது இலங்கையில் பௌத்த துறவிகள் பெரும்பாலும் அனுபவிக்கும் அரசியல் பாதுகாப்பை பிரதிபலிக்கின்றது. உதாரணமாக, மட்டக்களப்பில் ஒரு கிறிஸ்தவரைத் தாக்குவது கெமராவிலும பதிவாகியுள்ளது. மேலும் 2016 ஆம் ஆண்டில், ஒரு தமிழ் அரசாங்க அதிகாரியைக் கொலை செய்வதாக மிரட்டினார், அவரை இழிவான வார்த்தைகளால் வசைபாடியிருந்தார். கிழக்கு மாகாணத்தில் சிங்கள-பௌத்த தேசியவாத கூற்றுக்களை வலுப்படுத்தும் வகையில், சர்ச்சைக்குரிய பகுதிகளில் புத்தர் சிலைகளை அமைக்கும் முயற்சிகளிலும் சுமனரத்ன தேரர் ஈடுபட்டார்.
ஆதரவும் எதிர்ப்பும்
ஆயிரக்கணக்கான பின்தொடர்பவர்களுடன் சமூக ஊடகங்களில் அவருக்கு வலுவான இருப்பு உள்ளது. இந்த தளங்கள் மூலம், கிழக்கு மாகாணத்தில் பௌத்தத்தைப் பாதுகாப்பது என்ற பெயரில் நடவடிக்கை எடுக்குமாறு அவர் தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரது செய்திகளும் செயல்களும், குறிப்பாக இலங்கையின் போருக்குப் பிந்தைய சூழலில், நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பாரிய முட்டுக்கட்டையாக உள்ளது.
சிவில் சமூகப் பிரதிநிகள் மற்றும் தமிழ் அரசியல் தலைவர்கள், குறிப்பாக தமிழர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இன வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டுவதைக் கண்டித்துள்ளனர். மேலும் அவரது செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு ஆபத்தானவை என்று கூறியுள்ளனர்.
கடந்த மூன்று மாதங்கள்ளுக்கு முன்னர்கூட அரச வங்கியொன்றில் வைப்பிலிட்ட பணத்தை திருவிட்டனர் என சுமனரத்ன தேர்தல் குற்றஞ்சாட்டியதோடு, வங்கி அதிகாரிகள் மற்றும் வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை கடுந்தொனியில் திட்டி அவர்களை அச்சுறுத்தி அவர்களை தாக்குவதற்கு முயற்சித்த காணொளி வெளியாகியது.
இவ்வாறான பல்வேறு சர்ச்சைக்குரிய சம்பவங்கள் பதிவாகி அது சமூக ஊடகங்களிலும் பரவலாக வெளியிடப்பட்டு, கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போதும், பெரும்பாலும் அரசியல் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு எதிராக தீர்க்கமாக செயற்பட அதிகாரிகள் தயங்குவதால் கிட்டத்தட்ட முழுமையான தண்டனையிலிருந்து அவர்கள் விலக்கு பெறுகிறார்கள்.
நடவடிக்கை எடுக்காமை
இலங்கையின் சட்ட கட்டமைப்பில், குறிப்பாக சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) சட்டத்தின் கீழ், வெறுப்புப் பேச்சு மற்றும் வன்முறையைத் தூண்டுவதற்கு எதிரான விதிகள் உள்ளன. இருப்பினும், அவற்றை அமுல்படுத்துவதில்தான் இங்கு சிக்கல் உள்ளது. இதேபோன்ற குற்றங்களுக்காக ஏனையோர் கைது செய்யப்பட்டிருந்தாலும், அரச மற்றும் அரசியல் ரீதியாக நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்த போதிலும், அம்பிட்டியே சுமனரத்ன தேரர் பெரும்பாலும் இவற்றிலிருந்து தொடர்ச்சியாக தப்பித்து வருகின்றார். உதாரணமாக, தெற்கில் உள்ள அனைத்து தமிழர்களையும் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தும் ஒரு வீடியோ, கடந்த 2023 ஒக்டோபர் மாதம் வைரலானது. இவ்வாறான பாரதூரமான சொல்லாடல்கள் காணப்பட்ட போதும், சட்டம் அவர்மீது பாயவில்லை.
நாட்டில் சட்டத்தை சமமாக அமுல்படுத்துவதில் காணப்படும் இடைவெளியை இவ்வாறான சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. அதுமட்டுமன்றி, இன நல்லிணக்கத்திற்காக செயற்பட வேண்டிய மதத் தலைவர்கள், பிளவுகளுக்கு வித்திடும் வகையில் செயற்படுவது தொடர்பாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான சூழ்நிலையிலேயே இன்றைய கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இவரது வாழ்க்கை இலங்கையில் மதம் மற்றும் இனப் பதட்டங்களின் சிக்கலான பிரச்சினைகளையே பிரதிபலிக்கிறது.
செய்தியாக்கம் – கே.கே.