இந்தியாவில் உத்தரகாண்டில் ஹெலிகொப்டர் ஒன்று இன்று (15) விபத்திற்குள்ளானதில் விமானி உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
குப்தகாஷிக்கு சென்று கொண்டிருந்த குறித்த ஹெலிகொப்டர், கௌரிகுண்ட் அருகே காட்டுப்பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஹெலிகொப்டரில் இருந்த பயணிகள் உத்தரகண்ட், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
அந்த பகுதியில் வானிலை மிகவும் மோசமாக இருந்ததால், ஹெலிகொப்டர் வழி தவறி சென்றதாகக் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 12ஆம் திகதி அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் 274 பேர் உயிரிழந்த நிலையில் இந்தியாவில் மற்றுமொரு விமான விபத்து பதிவாகியுள்ளது.
இந்நிலையில், ஹெலிகொப்டர் விபத்துகளை தீவிரமாகக் கவனத்தில் கொண்டு, மாநிலத்தில் ஹெலிகொப்டர் செயற்பாடுகள் குறித்து அந்த மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். ஹெலிகொப்டர் சேவைகளுக்கு ஒரு விரிவான தரநிலை இயக்க நடைமுறை தயாரிக்கப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு விமானப் பயணத்திற்கும் முன்பு விமானத்தின் முழுமையான தொழில்நுட்ப சோதனையை மேற்கொள்வதும், துல்லியமான வானிலை தகவல்களைப் பெறுவதும் கட்டாயமாக்கப்படும் என்றும் முதல்வர் தாமி கூறியுள்ளார்.
ஹெலிகொப்டர் செயற்பாடுகள் தொடர்பான அனைத்து தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு அம்சங்களையும் விரிவாக மதிப்பாய்வு செய்த பிறகு, நிலையான இயக்க நடைமுறையை வரைவதற்கு தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவை அமைக்குமாறு தலைமைச் செயலாளருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

