“மத்திய கிழக்கு உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் நிலவும் பிரச்சினைகள் காரணமாக, செப்டம்பரில் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைத் தமிழர் பிரச்சினை புறக்கணிக்கப்படாமல் இருக்கவே, நேரடியாக இங்கு வந்தேன் என ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தெரிவித்தார்” என்று பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற முக்கிய சந்திப்பில், ஐ.நா உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், தமிழ் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். இதில் சிவஞானம் சிறீதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், சிறீ பவனாந்தராஜா மற்றும் முன்னாள் எம்.பி. தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சந்திப்புக்குப் பிறகு ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த சாணக்கியன், “ஈரான்–இஸ்ரேல், ரஷ்யா–உக்ரைன், இஸ்ரேல்–பலஸ்தீனம், பாகிஸ்தான்–இந்தியா போன்ற பிரச்சினைகள் முன்னிலையிலுள்ள நிலையில், இலங்கை விவகாரம் முக்கியத்துவம் பெறுமா? என அவர் கேட்டபோது, ‘அதனால்தான் நேரடியாக வந்தேன்’ என உயர்ஸ்தானிகர் பதிலளித்தார்” என்று தெரிவித்தார்.
அத்துடன், மனித புதைகுழிகள், அரசியல் கைதிகள், காணி விடுவிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து சந்திப்பில் பேசப்பட்டதாகவும் கூறினார்.
ஜெனீவா தீர்மானங்கள் தொடர வேண்டிய அவசியம்
“மிக மோசமாக அரசு செயற்படுவதை தடுக்கும் வகையில், ஜெனீவா தீர்மானங்களை தொடர்ந்து முன்வைக்க வேண்டும் என உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தினோம்” என்று ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சித் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
அக்கறையை உணர முடிந்தது
காணி பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோர், சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் ஆகிய விவகாரங்கள் பற்றி தமக்கு தெரியும் என உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டதாக சித்தார்த்தன் கூறியுள்ளார். ஆனால் உலகத்தில் பல பிரச்சினைகள் இருப்பதால், இலங்கை விவகாரம் எவ்வளவு முக்கியத்துவம் பெறும் என்பது தெரியாது என்றாலும், தனிப்பட்ட முறையில் தாம் முழுமையாக முயற்சி எடுப்பதாக தெரிவித்ததாக சித்தார்த்தன் மேலும் கூறினார்.
செம்மணி மற்றும் காணி விடுவிப்பு விவகாரங்கள்
செம்மணி, குருந்தூர்மலை, வெடுக்குநாறி மலை, வலிகாமம் வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் காணி விடுவிப்பு உள்ளிட்ட விவகாரங்களை சுட்டிக்காட்டினோம். இலங்கையில் பொறுப்புக்கூறல் என்பது நேர்மையும் கண்ணியமுமற்ற முறையில் நடைபெறுகிறது. உண்மையான பரிகார நீதியுடன் கூடிய பொறுப்புக்கூறலை வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது என சிவஞானம் சிறீதரன் கூறியுள்ளார்.
தமிழர்களின் நீண்டகாலக் கோரிக்கைகள்
முப்பது வருடப் போரிலும் அதற்குப் பிறகு 16 ஆண்டுகளாகவும் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாத நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினையை நாம் முன்வைத்தோம். அரசு இந்த பிரச்சனையை உணர்ந்து தீர்வுகளைக் காண வேண்டும் என சிறீ பவனாந்தராஜா தெரிவித்தார்.

