ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் மனு கையளிப்பு – சர்வதேச விசாரணைக்கு கோரிக்கை

0
390
Article Top Ad

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதகுலத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தும் மனுவொன்றை, தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க்கிடம்  யாழ்ப்பாணத்தில் நேற்று (25) நேரில் கையளித்தனர்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல முக்கிய இடங்களை பார்வையிட்டு, மக்களிடம் நிலைமைகள் குறித்தும், நீதி கோரிக்கைகள் குறித்தும் நேரடியாக கேட்டறிந்தார்.

மாலை வேளையில் உலங்குவானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் தரையிறங்கிய அவர், முதலில் கோவில் வீதியில் அமைந்துள்ள சர்வதேச குடியேற்ற அமைப்பான IOM அலுவலகத்திற்கு சென்றார்.

அதன் பின்னர், செம்மணி பகுதியில் அமைந்துள்ள சிந்துபாத்தி இந்து மயானத்தில் காணப்படுகின்ற புதைகுழிகளை நேரில் பார்வையிட்டார். அகழ்வுப் பணிகள் நடைபெற்றுவரும் அந்த இடத்தில், சட்டத்தரணிகள், முறைப்பாடு செய்தவர்கள் மற்றும் உறவினர்கள் உட்பட பல தரப்பினரிடம் தமது தரப்பு கருத்துக்களை முன்வைத்தனர்.

செம்மணி புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் “அணையா விளக்கு” அமைதிப் போராட்ட களத்துக்கும் அவர் நேரில் சென்று, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்தார். அத்துடன், போராட்டக் களத்தில் ஏற்றப்பட்டுள்ள “அணையா தீபத்திற்கு” முன்னால் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதனுடன் தொடர்புடைய முக்கிய நிகழ்வாக, யாழ்ப்பாணத்தில் வைத்து தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் ஒரு மனுவையும் கையளித்துள்ளனர். அந்த மனுவில், இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித குலத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் பல்வேறு சிவில் அமைப்புகள் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கையொப்பமிட்டுள்ளன.

இந்த மனுவின் மூலம், கடந்த நான்கு தசாப்த காலப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்கப்படாததிலும், பொறுப்புக்கூறல் தொடர்பில் முன்னேற்றம் இல்லாததிலும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.