வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் வர்த்தமானிக்கு இடைக்கால தடை

0
184
Article Top Ad

வடக்கு மாகாணத்தில் உரிய சான்றாதாரங்களுடன் உரிமை நிரூபிக்கப்படாது காணப்படும் 5,941 ஏக்கர் காணிகளை அரசுடைமையாக்கும் வர்த்தமானிக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணிகளை கையகப்படுத்துவதற்கான வர்த்தமானி, 28.03.2025 அன்று 2430/25 என்ற இலக்கத்தில் வெளியாகியிருந்த நிலையில், அதனை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இன்று (27) இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், காணிகளை நிரூபிப்பதற்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிந்து அவற்றை அரசு சுவீகரிப்பதற்கான அதிகாரம், இன்று நள்ளிரவுக்கு பின்னர் வரவிருந்தது.

இந்நிலையில், இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் இதுகுறித்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு, இன்றைய தினம் பரிசீலிலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, உயர்நீதிமன்ற நீதியரசர்கள் யசந்த கோட்டகொட, சம்பத் விஜயரத்தின உள்ளிட்ட நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

ஏற்கனவே இந்த விடயம் தொடர்பாக அமைச்சரவையின் முடிவை அரசு தரப்பு கேட்டறிந்து நீதிமன்றத்திற்கு அறிவிப்பதற்காகவே வழக்கு இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. எனினும், அரச தரப்பால் உரிய காரணங்கள் கூறப்படாத நிலையில், குறித்த வர்த்தமானிக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.