இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மகேந்திர சிங் தோனி, உலக ரசிகர்கள் அனைவரும் அவரது தலைமைத்துவத்தை வர்ணித்து அன்பாக அழைக்கும் “கேப்டன் கூல் (Captain Cool)” என்ற பெயரை வர்த்தக முத்திரையாக (ட்ரேட் மார்க்) பதிவு செய்துள்ளார்.
இதற்கமைய, விளையாட்டுப் பயிற்சி, பயிற்சி மையங்கள், கோச்சிங் போன்றவற்றுக்கு அந்தப் பெயரைப் பயன்படுத்த பிரத்யேக உரிமையை எம்.எஸ் தோனி பெற்றுள்ளார்.
வர்த்தக முத்திரைகள் பதிவேடு போர்டலின்படி, தோனியின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு விளம்பரம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 16ம் திகதி வெளியான அதிகாரப்பூர்வ வர்த்தக முத்திரை இதழில் இந்த பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தோனியின் வழக்கறிஞர் மன்சி அகர்வால் உறுதி செய்துள்ளார் .
கேப்டன் கூல் என்பது வெறும் கவர்ச்சியான சொல்லாடல் நாமம் மட்டுமல்ல, எம்.எஸ் தோனியின் வணிக பிம்பத்துடன் நெருக்கமான தொடர்பை கொண்டுள்ளது எனப் பதிவகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
மேலும், போட்டியை முடிப்பதில் வல்லவர், தலைவர் மற்றும் விக்கெட்கீப்பராக சிறந்த முறையில் செயல்படுபவர், நெருக்கடியான சூழலிலும் அமைதி காப்பதற்காக கொண்டாடப்படுபவர். ஈடு இணையற்ற இராஜதந்திரங்களை கையாள்பவர் என்று ஐ.சி.சி. தோனிக்கு பாராட்டு தெரிவித்து புகழாரம் சூட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.