சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்படும் கருத்துகள் அடிப்படையில், பொலிஸ் விசாரணைகள் மற்றும் வாக்குமூலம் பெறும் செயல்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், வாக்குமூலம் பெற அழைக்கப்படும் நபருக்கு குற்றச்சாட்டு அல்லது முறைப்பாட்டின் உள்ளடக்கம் தெளிவாக அறிவிக்கப்பட வேண்டும் எனக் கூறும் புதிய சுற்றறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த சுற்றறிக்கை, நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டதற்காக அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்று நேற்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த அறிவிப்பு வெளியானது.
சமூக ஊடகக் கருத்தும், தொலைபேசி அழைப்பும்
எரிசக்தி நிபுணரும் சமூக ஊடகத்திலும் செயற்பாட்டில் உள்ளவருமான விதுர ருலபன, தன்னை எதிர்த்துப் பதிவான முறைப்பாடு தொடர்பாக தன்னிடம் எந்த விவரமும் தெரிவிக்கப்படாமல், கணினி குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரியால் தொலைபேசியில் அழைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
“தனக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள நான் பலமுறை கேட்டேன். ஆனால் அதிகாரி எந்த பதிலும் வழங்கவில்லை,” என மனுதாரர் கூறியுள்ளார்.
இதன் மூலம், தன்னுடைய அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும், பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகள் தன்னிச்சையானதாக இருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த அடிப்படை உரிமைகள் மனு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் விஜயரத்ன ஆகியோரின் அமர்வில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன் பின்னணியில், சுற்றறிக்கை தயார்ப்படுத்தபட்டுள்ளதாகவும் சுற்றறிக்கையின் பிரதியை நாடு முழுவதும் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்குப் பதிலாக, மனுதாரரின் சட்டத்தரணி “இந்த அறிவிப்பில் திருப்தி அடைந்தோம். மேலும் விசாரணையைத் தொடர வேண்டிய தேவை இல்லை” என கூறியதால், உயர் நீதிமன்றம் இந்த மனுவின் விசாரணையை நிறைவு செய்தது.
சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துகள், விமர்சனங்கள், பகிர்வுகள் குறித்துத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் சூழலில், இத்தகைய சுற்றறிக்கை முன்பே அறிவிக்கப்பட்டிருக்க வேண்டிய அவசியம் இருந்ததாக செயற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

