இலங்கைக்கு நீங்கள் விஜயம் செய்திருப்பின் அதன் இயற்கை அழகைக் கண்டு வியக்காமால் இருந்திருக்கமாட்டீர்கள். இலங்கை பற்றி பேசும் போது அதன் இயற்கை அழகு ஒரு பேசுபொருளாக வருவது இயல்பு.கண்கவர் கடற்கரைகள், பசுமைமிக்க மலைகள், மாலை நேர சூரிய அஸ்தமனத்தில் பிரகாசிக்கும் நீர்நிலைகள் இவை எல்லாம் இணைந்து இந்த நாட்டிற்கு ஒரு அதிசய அழகை அள்ளி வழங்குகின்றன. இந்த இயற்கை எழில் மிக்க நாடு என்ற பெருமையை தமிழர், சிங்களர், முஸ்லிம்கள், பறங்கியர்கள் என நாங்கள் அனைவரும் இணைந்து கொண்டாடுகிறோம்.
ஆனால் இந்த இயற்கை எழிலுக்கு பின்னால் கசப்பான உண்மைகள் மறைந்திருக்கின்றன என்பது வெள்ளிடைமலையாகும் அழகு, எப்போதாவது நாம் காண விரும்பாத உண்மைகளை மறைக்கவும் கூடும். சில நேரங்களில், மண்ணுக்குள்ளும் கதைகள் இருக்கின்றன.
அவை வெறும் மண்ணால் மட்டுமன்றி, மௌனத்தினாலும் மறைக்கப்பட்டுள்ளன. அவை வன்முறை, இழப்பு மற்றும் மறுதலிக்கப்பட்டமையின் கதைகள். சில நேரங்களில், அங்கே எலும்புகளும் இருக்கின்றன. அழகு அதை மறைக்கலாம், ஆனால் உண்மையை மறைக்க முடியாது.
யாழ்ப்பாணத்தில் மீண்டும் தோண்டப்படும் நினைவுகள்

யாழ்ப்பாணம் சித்துபாத்தி இந்து மயானத்திற்கு அருகே உள்ள செம்மணியில் மீண்டும் அகழ்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுவரை 65 இற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில குழந்தைகளுடையவை. அந்த இடத்தில் ஒரு நீல நிற பாடசாலை பை, ஒரு பொம்மை, சில பாதணிகள் மற்றும் ஒரு சிறுமியின் உடையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது அகழ்ந்தெடுக்கப்படும் என்புத்தொகுதிகள் வெறும் எலும்புகள் அல்ல. இவை ஒவ்வொன்றும் ஒருகாலத்தில் வாழ்ந்த வாழ்க்கை. யாரோ ஒருவரின் மகள். யாரோ ஒருவரின் சகோதரன். அவள் அல்லது அவன் உங்கள் வயதினராகவும் இருக்கலாம். இதனால் உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படுகிறதா? ஏற்படவேண்டும்.
யாழ் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவினைத் தொடர்ந்து, பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையில் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும், தடயவியல் மருத்துவர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சட்டத்துறை சார்ந்தவர்கள் அங்கு வருகின்றனர்.
தமது உறவுகளை இழந்தவர்களும் அங்கேதான் பார்த்துக்கொண்டும், காத்துக்கொண்டும், பதிலுக்காக ஏங்கிக்கொண்டும் இருக்கின்றனர். இந்த குடும்பங்களில் சிலர் சுமார் 30 வருடங்களாக காத்திருக்கிறார்கள்.
நான் இந்தக் கதையைப் பின்தொடர்ந்த வரலாறு
இலங்கையில் நான் இருபது ஆண்டுகளுக்கும் மேல் ஊடகவியலாளராக பணியாற்றினேன். 2023 ஜனவரியில் நாட்டை விட்டு வெளியேறினாலும், எனது எழுதும் பணி தொடர்ந்துகொண்டு இருக்கிறது. செம்மணி என்ற பெயர் என் மனதை விட்டு இன்னும் அகலவில்லை.
1998ஆம் ஆண்டு, மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட இராணுவ சிப்பாய் சோமரத்ன ராஜபக்ஷ, யுத்தத்தின் போது செம்மணியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொலை செய்யப்பட்டு ரகசியமாக புதைக்கப்பட்டதாக சாட்சியமளித்தார்.
அவரது கூற்றின் அடிப்படையில், 1999இல் அரச அனுமதியுடன் அதிகாரபூர்வமான அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டது. அதில் 15 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் இரண்டு, இராணுவக் காவலில் இருந்தபோது காணாமல் போனவர்கள் என உறுதி செய்யப்பட்டது.
கொலைசெய்யப்பட்டதற்கான அடையாளங்கள் தெளிவாக இருந்தன — கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில், அகலமான குழிகளில் புதைக்கப்பட்டிருந்தன.
ஆனால் நீதி கிடைக்கவில்லை. வழக்கும் மறைந்து போனது. யாரும் தண்டிக்கப்படவும் இல்லை.
இன்று மீண்டும் தோண்டப்படும் வரை, எஞ்சிய உண்மைகள் மண்ணுக்குள் புதைந்தே காணப்பட்டுள்ளன.
2025 இல் நடப்பது என்ன?

2025 பெப்ரவரி மாதத்தில் செம்மணி இந்து மயானத்திற்கருகில் கட்டிட பணிகளின் போது மேலும் சில மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் மே மாதத்தில் அகழும் பணிகள் ஆரம்பமானது. கடந்த மாதம் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவடைந்தன. A9 நெடுஞ்சாலைக்கு அருகிலும் மேலும் எலும்புக்கூடுகள் இருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர். இதனடிப்படையில், இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிக்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு தற்போது அகழ்வுப் பணிகள் தொடர்கின்றன.
அகழ்ந்தெடுக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் தற்போது நீதிமன்ற மருத்துவ அதிகாரியின் பராமரிப்பில் உள்ளன. ஒவ்வொன்றையும் அடையாளம் காணும் நோக்கில் அவை ஆய்வு செய்யப்படும்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு மேலெழும் இந்த விடயம், ஒருவருக்கும் தெரியாமல் நடப்பதில்லை. மறைந்தவர்களின் குடும்பங்கள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மனித உரிமை குழுக்கள் அனைவரும் இதில் பங்கேற்று கவனித்து வருகின்றனர். உண்மைகளுக்கான தேடலில், அவர்கள் அங்கு பிரசன்னமாகியிருப்பது அவசியமானது.
இது ஒரு செய்தியை கூறுகின்றது – உண்மை புதைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் மறக்கப்படவில்லை.
புதைகுழிகளும் எமது எதிர்வினையும் – வெளிநாடுகளில் இருந்து வேறுபடுகின்றனவா?

பொஸ்னியா அல்லது உக்ரைன் போன்ற நாடுகளில் பெருந்தொகையான மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படும்போது, உலகம் அதற்கு கடும் எதிர்வினையை வெளிப்படுத்தியது.
தேசியக்கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுகின்றனர். நினைவஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. சர்வதேச ஊடகம் அதை கவனமாக அறிக்கையிடுகின்றது. அவ்வாறிருக்க, இலங்கையில் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படும்போது மௌனம் காப்பது ஏன்?
இலங்கை மண்ணில் தமிழ் குழந்தைகளின் என்புத்தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்படும் போது, அதற்கான எதிர்வினை எங்கே? ஒரு தமிழ் பிள்ளையின் என்புத்தொகுதியுடன் ஒரு பொம்மையும் கண்டெடுக்கப்பட்டது. அதைக் கண்டும் நாம் மௌனமாக இருப்பதேன்?
நீதியின் முக்கியத்துவம்

இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை, ஐக்கிய நாடுகள், மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் சுயாதீன நிபுணர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் கோபி அனான் ஒருமுறை இவ்வாறு கூறினார்:
“தண்டனை இன்றி விடுவதனை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது குற்றவாளிகளை தண்டிப்பது மட்டும் போதாது. இவ்வாறான குற்றங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கும் வகையில் நீதி வழங்கப்பட வேண்டும்”
அந்த வார்த்தைகள் உண்மையானவை. அவை உலகத்திற்கு மட்டுமல்ல — நம் சமூகங்களுக்கும், நம் நாட்டுக்கும் பொருந்தும்.
தண்டனை இன்றிய நடைமுறை
செம்மணி புதைகுழி ஒரு தனிப்பட்ட சம்பவமல்ல. அது நீண்ட காலமாக உரிய விசாரணை இல்லாமல் விடப்பட்ட பல கொடூரமான சம்பவங்களின் ஒரு பகுதியாகும்:
- 1983ஆம் ஆண்டு, “கறுப்பு ஜூலை” என அழைக்கப்படும் தமிழர் விரோத கலவரத்தில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள் மற்றும் வெளியேற்றப்பட்டார்கள்.
- உள்நாட்டு யுத்தத்தின் போது, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில், பல தமிழ் இளைஞர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்.
- 2009ஆம் ஆண்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், ஐ.நா. மதிப்பீட்டின் படி 40,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
(மூலங்கள் : UN OHCHR 2015 அறிக்கை, சர்வதேச நெருக்கடிக் குழு, மனித உரிமைகள் கண்காணிப்பகம்)
இன்றுவரை, இந்த குற்றங்களுக்கு இலங்கை அரசாங்கம் எந்தவொரு பொருந்தக்கூடிய உள்நாட்டு விசாரணையையும் மேற்கொள்ளவில்லை. விசேட நீதிமன்றங்கள் அல்லது சுயாதீன விசாரணைகளை ஏற்படுத்துவதற்கான சர்வதேச கோரிக்கைகள், தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுள்ளன அல்லது பலவீனப்படுத்தப்பட்டுள்ளன.
(மூலங்கள்: OHCHR அறிக்கைகள், முன்னாள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர்களின் கூற்றுகள்)
எம்மை நாமே கேட்டுக்கொள்வோம்
நாம் விரும்பும் நாடு எப்படி இருக்க வேண்டும்? நமது நாட்டின் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட உண்மைகளை புறக்கணித்தபடியே, நாமே நம்மை “பெருமைக்குரிய இலங்கையர்கள்” என அழைக்க முடியுமா?
துயரத்தில் இருக்கும் தாய்மார்களுக்கும், மௌனிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் நீதி மறுக்கப்படும் பொழுது, “அமைதியான நாடு” என அழைக்க முடியுமா?
நீங்கள் தமிழர் என்றால், இந்த மௌனத்தை நீங்கள் நேரடியாக அனுபவித்திருப்பீர்கள். நீங்கள் தமிழர் அல்லாதவராக இருந்தாலும், இந்தப் பொறுப்பை நீங்கள் தவிர்க்க முடியாது — ஏனெனில் இது உங்கள் நாட்டின் கதையின் ஒரு பகுதியாகும்.
நாமே நேர்மையாக சிந்திப்போம்: நீதி இல்லாத ஒரு நாட்டில் யார் நம்பிக்கையுடன் முதலீடு செய்வார்கள்? தங்களது வீடுகளையும் குடும்பத்தையும் இழந்து வாழும் தமிழ் மக்கள், இன்னும் உண்மையை மறுக்கும் ஒரு நாட்டை எப்படி நம்பமுடியும்?
சரியான சிந்தனையுள்ள எந்த நபரும் — முதலீட்டாளர் அல்லது மனிதாபிமானம் மிக்கவர், இவ்வாறான ஒரு நாட்டில் தங்களது நேரம், பணம் அல்லது நம்பிக்கையை வைப்பதற்கு முயற்சி செய்வார்களா?
நீதி என்பது ஒரு ஒழுக்கநெறி கடமையாக மட்டும் இல்லாமல், ஒரு நடைமுறை தேவையும் ஆகும். அது நம்பிக்கையை உருவாக்குகிறது. ஆற்றுப்படுத்தலை கொண்டுவருகின்றது மற்றும் மீண்டெழுவதற்கான வழிகளை ஏற்படுத்துகின்றது.
செம்மணி வெறுமனே ஒரு புதைகுழி அல்ல!

எனக்கு, செம்மணி இன்னுமொரு செய்தி அல்ல. அது இன்னும் முழுமையாக மறையாத ஒரு ஆழமான காயம்.
இந்த விஷயத்தை ஒரு செய்தியாளராகவும், ஒரு தமிழராகவும், இன்னும் உண்மையை நம்பும் ஒரு இலங்கையராகவும் நான் பல வருடங்களாகப் பின்தொடர்ந்துள்ளேன்.
தங்கள் மகனோ மகளோ குறித்து, ஒரு பெயர் மற்றும் நினைவுகளை மட்டுமே வைத்திருக்கும் குடும்பங்களிடம் நான் பேசியுள்ளேன். நாட்கள் சென்ற, தேய்ந்துபோன கறுப்பு வெள்ளை புகைப்படங்களை கண்ணீருடன் கைகளில் ஏந்தியவர்களை நான் பார்த்துள்ளேன்.
எலும்புகள் மீண்டும் வெளியில் வருகிற தருணங்களில், இப்போது, அதே குடும்பங்களை நான் செம்மணியில் மீண்டும் பார்க்கிறேன். இது வெறும் வரலாறு மாத்திரமல்ல. தற்போது நடந்துகொண்டிருக்கும் நிஜம்.
இது அனைவருக்குமான ஒரு இறுதிக் குறிப்பாக இருக்கட்டும்
இலங்கை 2022இல் வங்குரோத்து நிலையை அடைந்தது. ஆனால் அதற்கு முன்பே, இந்நாடு நீதியை இழந்துவிட்டது. உண்மையை மறைத்துக்கொண்டு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியாது. உண்மையை புதைத்துவிட்டு சமாதானம் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது.
இலங்கை ஒரு அழகான நாடு. ஆனால் அதே நேரத்தில், உண்மை பலமுறை புதைக்கப்பட்ட நாடும் கூட. நீதியும் உண்மையும் இல்லாமல் அந்த அழகு நீடிக்க முடியுமா என்பதுதான் இப்போதுள்ள கேள்வி.
நாம் உண்மையிலேயே நல்ல இலங்கையை விரும்புகிறோம் என்றால், அங்கு எல்லா சமூகங்களும் பாதுகாப்பாகவும், சமமாகவும் மதிக்கப்படுவது போல் உணர வேண்டும் என்றால், நாம் நிலத்துக்கடியில் மறைக்கப்பட்ட உண்மையை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதிலிருந்துதான் அது ஆரம்பிக்க வேண்டும்.
செம்மணி என்பது ஒரு சோதனை நடவடிக்கையாகும். இது நம் மனிதநேயத்தின் சோதனை. நம் நினைவுகளின் சோதனை. நாம் ஆற்றுப்படுத்திக்கொள்ள தயாராக உள்ளோமா என்பதற்கான சோதனை. இந்தச் சோதனையில் நாம் மீண்டும் தோல்வியடையக்கூடாது. இந்த தருணம், இலங்கை உண்மையை செவிமடுக்கும் நேரமாக இருக்கட்டும். வெறும் காதுகளால் மட்டுமன்றி, உணர்வுகளுடன் இதயபூர்வமானதாக அது அமையட்டும்.
அருண் ஆரோக்கியநாதன்

