திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர் நவநாதன், கடந்த ஜூலை 5ஆம் திகதி முதல், ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று (ஜூலை 13) போராட்டம் எட்டாவது நாளில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், அவரது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“தமிழகமும், மத்திய அரசும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற குற்றங்களை இனப்படுகொலை என அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும்” என்பது உள்ளிட்ட ஐந்து அம்சங்களை உட்படுத்திய கோரிக்கைகளை நவநாதன் முன்வைத்துள்ளார். இதற்காக தமிழக மக்களின் மௌனம் களைய வேண்டும் என்றும் அவர் ஒரு கடிதம் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரபல தென்னிந்திய திரைப்பட இயக்குநரும் தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவனருமான வ. கௌதமன், நவநாதனின் போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.”நவநாதன் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நியாயமானவை. அவை நிறைவேற்ற முடியாதவையாக அல்ல. கடந்த அரசாங்கங்களும், தற்போதைய மத்திய, மாநில அரசுகளும் இவற்றை எளிதில் நிறைவேற்ற முடிந்த போதிலும் அலட்சியம் தான் காணப்படுகின்றது,” என அவர் கூறினார்.

“ஏற்கனவே தியாக தீபம் திலீபனின் உயிரை காப்பாற்ற முடியாமற்போன வரலாற்றைப் பார்த்தோம். மீண்டும் ஒருவரின் உயிர் சிதையக் கூடாது என்பதே எங்கள் கண்ணோட்டம். யோகராசா நவநாதனின் கோரிக்கைகளுக்கு அரசுகள் செவி சாய்க்க வேண்டிய நேரமிது” என வ. கௌதமன் வலியுறுத்தினார்.

