அமெரிக்காவின் வரிகளைத் தவிர்க்க இலங்கை முயற்சி

0
202
Article Top Ad

அமெரிக்கா இலங்கைக்கு விதித்துள்ள 30% பரஸ்பர வரிகளைத் தவிர்க்கும் நோக்கில், ஓகஸ்ட் 1ஆம் திகதிக்கு முன் இரு நாடுகளும் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த பரஸ்பர வரிகள் குறித்து எதிர்வரும் நாட்களில் அமெரிக்க அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கான இலங்கை பிரதிநிதிகள் குழுவின் விபரம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

கடந்த ஏப்ரல் மாதம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுமார் 100 நாடுகளுக்கான பரஸ்பர வரிகளை மீளாய்வு செய்து, இலங்கைக்கு 44% வரி விதித்திருந்தார். பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்த வரிகளை 90 நாட்களுக்கு இடைநிறுத்த அவர் ஒப்புக் கொண்டார்.

இந்நிலையில், கடந்த ஜூலை 9ஆம் திகதி, அமெரிக்கா இலங்கைக்கான புதிய பரஸ்பர வரியை 30% ஆக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இவை வரும் ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வரிச் சலுகைகள் மற்றும் ஏற்றுமதிப் பாகுபாடுகளை தீர்ப்பதற்காக, இலங்கை சார்பில் அமெரிக்காவுடன் மேலதிக பேச்சுவார்த்தைகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 12ஆம் திகதி, ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விவகாரம் முக்கியமாக எடுத்துரைக்கப்பட்டதாகவும், கலந்துரையாடலின் போது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் குறித்தும் ஆராயப்படும் நடைபெறும் எனவும் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.